மக்களை காக்க வேண்டிய போலீஸ் மீது வழக்குகள் பெண் இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன் வழங்க முடியாது: மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை

மதுரை: கொலை வழக்கில் கைதான பெண் இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே மேட்டுப்பட்டி வலசையைச் சேர்ந்தவர் சத்தியஷீலா. இவர், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் மற்றும் சைபர்கிரைம் இன்ஸ்பெக்டராக இருந்தார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழா தகராறில் ராமர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார், இன்ஸ்பெக்டர் சத்தியஷீலாவை கைது செய்தனர். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கொலை வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். அதில், ‘‘கொலை வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் என் பெயர் இல்லை. கைதானவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் என்னையும் வேண்டுமென்றே இவ்வழக்கில் சேர்த்துள்ளனர். எனவே, ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘‘மனுதாரர் மீது இரு வழக்குகள் நிலுவையில் உள்ளது’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி பி.புகழேந்தி, ‘‘மனுதாரர் மீது இரு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மக்களை காக்கவேண்டிய போலீஸ் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளார்.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்