பெண்களுக்கே உரிய பண்டிகைக் காலக் கடமைகள்… கலகலப்பாக மாற்றுவது எப்படி?

பண்டிகைக் காலங்கள் , குறிப்பாக பண்டிகை தினங்கள் என்றாலே பெரும்பாலும் பெண்களில் பலருக்கும் சமையறை யிலேயே நேரம் முடிந்துவிடுகிறது. சிலருக்கெல்லாம் தீபாவளி, பிறந்தநாள், பொங்கல் எனில் புத்தாடை அணிந்து, புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கக் கூட நேரமில்லாமல் அப்படியே அந்த நாள் முடிந்துவிடுகிறது.பெண்களுக்கு மட்டும் இந்த சந்தோஷக் கொண்டாட்டம் கிடையாதா, சரி இதில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்காவது விதிவிலக்கு அளிக்கப்படும் என்றால் அதுவும் இல்லாமல், அவர்கள் பாடுதான் இன்னும் திண்டாட்டம். அடுத்த நாள் விருந்தினர்கள், உறவினர்கள் வருகை, சமையல், உபசரிப்பு என ஓய்வின்றி அடுத்த நாட்கள் பாத்திரம் கழுவுவதும், வீடு, சமையலறை சுத்தம் செய்வதும் என அனைத்தும் முடித்து வேலைக்கும் செல்ல வேண்டிய கட்டாயத்தால் பல பெண்கள் பண்டிகைகள் என்றாலே உள்ளூர ஒருவித மன உளைச்சலைச் சந்திக்கிறார்கள். இதற்கு என்ன தீர்வு, எப்படி சரி செய்யலாம்? மனம், உடல் என பண்டிகைக் கால கொண்டாட்டங்கள் மூலம் உற்சாகம் பெற என்ன செய்யலாம்? ஆலோசனைகள் கொடுக்கிறார் எஸ். வந்தனா (மருத்துவ உளவியலாளர்)

‘பண்டிகைக் காலம் என்கிறதால் இதை மன உளைச்சலோ அல்லது மன ரீதியான கஷ்டமோ என்று சொல்லாமல் ஒருவித பண்டிகைக் கால டென்ஷன் என்று கூட சொல்லலாம். பொதுவாகவே பண்டிகைகளை பிரம்மாண்டமாகக் கொண்டாடத்தான் இந்திய கலாச்சாரமும் இந்திய மக்களும் விரும்புவார்கள். இதில் ஒவ்வொரு பண்டிகையையும் பிரம்மாண்டமாக மாற்றுவதில் பெரும் பங்கு பெண்களுக்கே உரித்தாக இருப்பதாலேயே இப்படியான சில டென்ஷன்கள். அதிலும் தென்னிந்தியர்களைக் காட்டிலும் வட இந்தியாவில் பண்டிகை மட்டுமின்றி விரதங்கள், துவங்கி ஹோலி பண்டிகை முதல் துர்கா பூஜை, தீபாவளி என பல நிகழ்வுகள் மாதா மாதம் வந்து கொண்டே இருக்கும் பெண்களுக்கான வேலைகளும் வீட்டில் அதிகமாகவே இருக்கும். பொதுவாக பெண்களிடம் இயல்பிலேயே ஒரு வேலையை அல்லது ஒரு கடமையை முழுமையாக முடிக்க வேண்டும் என்கிற நோக்கம் இருக்கும் அதனால்தான் அவர்களால் தனக்கான சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் கூட ஒதுக்கி வைத்துவிட்டு எடுத்த காரியத்தை திறம்பட முடிக்க வேண்டும் என்ற மனநிலையில் வேலை செய்வார்கள். இந்த பொறுப்பும் பண்டிகைக்கால கடமைகளும் தேவை தான், ஏனெனில் ஒரு வேலையில் முக்கியத்துவமும் பொறுப்பும் இருக்கும் பட்சத்தில் தான் அந்த செயல்பாடு முழுமையாகவும் திறம்படவும் முடிக்க முடியும். இது வெறும் பண்டிகை நாட்களில் மட்டுமல்ல வேலையில் நம் குடும்ப விஷயங்களில் கூட எந்த ஒரு காரியத்தால் நமக்கு அழுத்தமும் பொறுப்பும் அதிகரிக்கிறதோ அதை நாம் தீவிரமாக எடுத்துக் கொண்டு செய்து காட்டுவோம். அப்படியான தீவிரம் தான் இந்த பண்டிகை கால வீட்டு வேலைகளும். ஆனால் காலம் காலமாக இந்த வீட்டு வேலைகள் பண்டிகை கால பொறுப்புகள் அனைத்தும் பெண்களிடமே இருப்பது தான் இதற்கு காரணம். முன்பிருந்த காலம் வேறு அப்போது பெண்கள் வீட்டில் இருப்பர் ஆண்கள் வேலைக்குச் சென்று சம்பாதிப்பார்கள். ஆனால் இன்று பெண்கள் பலரும் வேலைக்குச் செல்லத் துவங்கி விட்டனர், வீட்டில் இருக்கும் பெண்கள் உட்பட ஏதோ ஒரு வகையில் வருமானம் ஈட்டும் பட்சத்தில் ஆணுக்கு நிகராக பெண்களுக்கும் வெவ்வேறு விதமான பொறுப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. இதனை உணர்ந்து வீட்டில் உள்ளவர்கள் வேலையை பகிர்ந்து கொண்டாலே பாதி பெண்களுக்கான டென்ஷன்கள் குறையும். பண்டிகை காலத்தில் நடக்கும் இந்த மனநிலையை இரு வேறு விதமாக பிரிக்கலாம் ஒன்று ‘பிளஷர்’ (Festival Pleasure) மற்றும் ‘பிரஷர்’ (Festival Pressure).

அதாவது உற்சாகம் மற்றும் அழுத்தம். இதில் பெண்கள் முழுமையாகவே அழுத்தத்தை எடுத்துக்கொண்டு உற்சாகத்தைக் குடும்ப உறுப்பினர்களுக்கு தருகின்றனர். எப்போது இந்த பிரஷரில் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் பங்கு எடுத்துக் கொள்கிறார்களோ அங்கே பிரஷரும் பிளஷராக மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் அமைந்துவிடும். காரணம் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு வேலையை பகிர்ந்து செய்யும்பொழுது நாம் ஒரு வேலை செய்கிறோம் என்ற பிரஷர் இல்லாமல் குடும்பத்துடன் ஒன்றிணைந்து கூட்டாக செயல்படுகிறோம் என்கிற சந்தோஷம் வந்துவிடும். குறிப்பாக இப்போது இருக்கும் குழந்தைகளை இம்மாதிரியான பண்டிகை கால வேலைகளில் ஈடுபடுத்துவது அவர்களின் எதிர்காலத்திற்கும் நல்லது. இன்று ஒவ்வொரு பண்டிகையையும் எதற்காக கொண்டாடுகிறோம் இதன் பின்னணி என்ன என்பதே பல குழந்தைகளுக்கு தெரிவதில்லை. தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என்றால் இதை எதற்கு கொண்டாடுகிறோம் என்னும் கதைகளுடன் வீடு தூய்மை, மனத் தூய்மை இதெல்லாம் எதற்கு இந்த பூஜைகள் எதற்கு இப்படி அனைத்தையும் அவர்களுக்கு பகிர்ந்து அவர்களையும் சின்னச் சின்ன வேலைகளில் ஈடுபடுத்தும்பொழுது மொத்த குடும்பமும் பண்டிகைக்கால உற்சாகத்தை அடைந்து பலன் பெற முடியும். அந்த காலத்தைப் போலவே இக்காலத்திலும் ஆண்கள் பண்டிகை என்றாலே ஓய்வு எடுப்பது, நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது, வீட்டில் நல்ல உணவு விருந்து எனில் அதை சாப்பிட்டு மகிழ்வது என இதில் மட்டுமே கலந்துகொள்கின்றனர். அதெல்லாம் மலை ஏறிவிட்டது அவர்களும் தங்களை குடும்பத்தின் மற்ற வேலைகளிலும் ஈடுபடுத்திக் கொள்ளும் பொழுது தான் பெண்களின் மனநலம் ஆரோக்கியமாக இருக்கும். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில் பண்டிகை முடிந்தபின் எப்படி ஆண்கள் வேலைக்கு செல்ல வேண்டுமோ அப்படித்தான் பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டும். ஒருவேளை இதே மனநிலையில் அவர்கள் வேலையிலும் தங்களது வெறுப்பையோ அல்லது டென்ஷனையோ காட்டினால் அது வேலையையும் பாதிக்கக்கூடும். எனவே பண்டிகைகள் என்றாலே விடுமுறைகளும் உடன் வரும் சந்தோஷ நிகழ்வுகளும்தான் அதில் குடும்பத்தில் யாரோ ஒருவர் மட்டும் இந்தப் பலன்களை அடையாமல் இருப்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல குடும்பத்திற்கும் சரியானதல்ல. நேர்முறையான சிந்தனையுடன் பார்த்தால் இந்த பண்டிகை கால பிரஷர்களும் பெண்களுக்கு பல வகைகளில் உதவுகிறது என்கிறார் எஸ் வந்தனா.

‘இந்த பண்டிகைக் கால அழுத்தங்கள் பெரும்பாலும் நேர்மறை எண்ணங்களைத் தான் அதிகமாக உருவாக்கும். மேலும் பெண்கள் தங்களைத் தாங்களே மெருகேற்றிக் கொள்ளவும் உதவும். இது என்னுடைய குடும்பப் பண்டிகை என்னுடைய குடும்பம் என்கிற மனநிலையுடன் அவர்களுக்காக நான் செய்கிறேன் என பெண்கள் மல்டி டாஸ்கிங் செய்வதற்கு தங்களை தாங்களே தயார் படுத்திக் கொள்வார்கள். மேலும் இதனால் வேலையில் வேகம் பிடிப்பது செய்ய வேண்டிய கடமைகளை திட்டமிட்டுக் கொள்வது, நமக்கான பொறுப்புகள் என்ன என்று உணர்வதற்கான ஒரு வாய்ப்பு இத்தனையுமாக ஒன்றிணைந்து அடுத்து வரும் நாட்களில் அவர்கள் தொடர்ந்து வேலையிலும் குடும்பத்திலும் கூட திறம்பட செயலாற்ற உதவும். எனவே பண்டிகை கால அழுத்தங்கள் பெரும்பாலும் நேர்மறையான சக்திகளையும் உடல் வலிமையையும் பெண்களுக்கு வழங்கி விடும். எனினும் இவை எங்கே அழுத்தமாக மாறும் என்றால் இவ்வளவு செய்தும் அதில் குறையோ, அல்லது தவறோ சொல்லும்போது அவர்கள் பட்ட பாடெல்லாம் வீணாகி அழுத்தம் அதிகமாகும்.

அதனால் எல்லாவற்றையும் நம் தலையிலேயே போட்டுக் கொண்டு குடும்ப உறுப்பினர்களை வெறும் உற்சாக மனநிலையில் மட்டுமே வைத்துக் கொண்டிருந்தால், நிச்சயம் குற்றம் கண்டுபிடிக்கத்தான் செய்வார்கள். வீட்டில் உள்ளவர்களையும் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்த முயற்சி செய்யுங்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு உதவும் மனப்பான்மையை இந்த பண்டிகை காலங்களில் தான் கொடுக்க முடியும். சின்னச் சின்ன உதவிகள் அம்மாவிற்கு செய்ய வேண்டும். வீட்டில் உள்ள பாட்டிக்கு இதனைச் செய்து கொடுக்க வேண்டும் வீட்டை சுத்தம் செய்து பொருட்களை எடுத்து வைக்க வேண்டும் இப்படியான சின்ன சின்ன வேலைகள் அவர்களின் எதிர்காலத்திற்கும் உதவும். போலவே ஆண்களுக்கும் கூட்டாக இணைந்து வேலை செய்யும் பயிற்சிகள் அதிகரிக்கும் பொழுது அதன் பலன் அவர்களின் வேலையிலும் கூட தென்பட்டு உற்பத்தியும் கற்பனை வளமும் அதிகரிக்கும். கிடைக்கும் ஓரிரு நாட்கள் விடுமுறையில் இப்படி ஒன்றிணைந்து வேலை செய்கையில் பெரும்பாலான நேரம் மொத்த குடும்பமும் ஓரிடத்தில் இருக்கும் வாய்ப்பு கிடைப்பதால் வீட்டில் இன்னும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலவும். எனவே பண்டிகைக் காலத்தில் கிடைக்கும் உற்சாகத்தை மட்டுமின்றி அதன் கடமைகளையும் குடும்ப உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ள வேலையும் சுலபமாக முடியும் அனைவருக்கும் அதிகமான நேரம் கிடைக்கும். அதேபோல் அத்தனை வேலைகளையும் பண்டிகைக்கான நாளில்தான் செய்ய வேண்டும் என்றில்லாமல் அந்த வாரம் முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக வீட்டு வேலைகளை பிரித்து செய்யத் துவங்கிவிட்டாலே பண்டிகை நாளின் முழுப் பலனை நாம் அடைய முடியும். பெண்களின் எதிர்பார்ப்புகளும் கூட ஓரளவு பூர்த்தி அடையும் பொழுது அந்த நாள் இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொண்டு வரும் என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை.
– ஷாலினி நியூட்டன்

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு