பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரம் நாட்டையே உலுக்கியது. இந்த கொலையில் கொல்கத்தா போலீசார் குற்றவாளியை உடனடியாக கைது செய்தனர். மேலும், இந்த கொலையை மறைக்கவும், விசாரணையை தாமதப்படுத்தவும் முயற்சித்த மருத்துவமனை முன்னாள் தலைவர் சந்தீப் கோஷை சிபிஐ கைது செய்துள்ளது.

ஆனாலும், விசாரணையை சரிவர மேற்கொள்ளாத காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை பதவிநீக்கம் செய்யக் கோரி ஜூனியர் டாக்டர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர்கள் பணிக்கு திரும்பவில்லை. இந்நிலையில் கொல்கத்தா பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கின் விசாராணை இன்று காலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது; பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெண்கள் சலுகைகளை எதிர்நோக்கவில்லை, சம வாய்ப்புகளையே எதிர்நோக்கியுள்ளனர். அனைத்து சூழல்களிலும் பணிபுரியவே பெண் மருத்துவர்கள் விரும்புகின்றனர். இரவுப் பணியை செய்வதை தவிர்க்குமாறு பெண் மருத்துவர்களுக்கு மேற்கு வங்க அரசு உத்தரவிட முடியாது. பாதுகாப்பை கருதி இரவுப் பணியை தவிர்க்குமாறு அறிவித்த மேற்கு வங்க அரசின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Related posts

லெபனானில் பேஜர்கள் தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடிப்பு : போர் நடவடிக்கைகளின் தொடக்கப்புள்ளி என ஐ.நா. எச்சரிக்கை

தமிழ்நாட்டில் பொன்னை அணையில் 10 செ.மீ மழை பதிவு: திடீரென்று மாறியது பருவநிலை

சாதி வெறியில் தாக்குதல்: மேலும் 4 பேருக்கு வலை