மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடர் அமீரக அணிக்கு எதிராக இந்தியா அபார வெற்றி

தம்புல்லா: ஆசிய கோப்பை மகளிர் டி20 தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக இந்தியா 78 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ராங்கிரி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீசியது. ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். மந்தனா 13, ஷபாலி 37 ரன் (18 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி வெளியேற,ஹேமலதா 2 ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார்.

இந்தியா 5.1 ஓவரில் 52 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்தது. ஜெமிமா 14 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து ஹர்மன்பிரீத்துடன் இணைந்த ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளாக விளாசித் தள்ள இந்திய ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
ஹர்மன்பிரீத் 41 பந்தில் அரை சதம் அடிக்க, மறுமுனையில் ரிச்சா கோஷ் 26 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். ஹர்மன்பிரீத் 66 ரன் (47 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி கடைசி ஓவரின் முதல் பந்தில் ரன் அவுட்டானார்.

இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது. ரிச்சா கோஷ் 64 ரன் (29 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்), பூஜா வஸ்த்ராகர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அமீரக பந்துவீச்சில் கவிஷா 2, சமைரா, ஹீனா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் அரபு எமிரேட்ஸ் அணி களமிறங்கியது. இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய யுஏஇ 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 123 ரன் மட்டுமே எடுத்து 78 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

கேப்டன் ஈஷா ஓஸா 38 ரன், கவிஷா எகோடகே 40* ரன் (32 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), குஷி ஷர்மா 10 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். இந்திய பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 2, ரேணுகா சிங், தனுஜா கன்வார், பூஜா வஸ்த்ராகர், ராதா யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ரிச்சா கோஷ் ஆட்ட நாயகி விருது பெற்றார். தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்த இந்தியா ஏ பிரிவில் 4 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது. 3வது லீக் ஆட்டத்தில் நாளை நேபாளம் அணியுடன் மோதுகிறது.

Related posts

கச்சா எண்ணெய் விலை 32% குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? : ஒன்றிய அரசுக்கு கார்கே கேள்வி

குஜராத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே மெட்ரோ’ பெயர் ‘நமோ பாரத்’ என மாற்றம்

‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவைக்கு ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என பெயர் மாற்றம்