திருச்சூரில் ஓட்டலில் மந்தி பிரியாணி சாப்பிட்ட பெண் பலி: 178 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஓட்டலில் குழிமந்தி பிரியாணி சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். 178 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் குழிமந்தி என்ற ஒரு வகை சிக்கன் பிரியாணி ஓட்டல்களில் விற்பனை செய்யப்படுகிறது. அசைவ ஓட்டல்களில் இந்த பிரியாணி பெரும்பாலும் கிடைக்கும். இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருச்சூர் அருகே பெரிஞ்ஞனம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் குழிமந்தி பிரியாணி சாப்பிட்ட ஏராளமானோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனே பாதிக்கப்பட்ட அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தகவல் அறிந்ததும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு விரைந்து சென்று பரிசோதனை நடத்தினர். பின்னர் அந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரிஞ்ஞனம் பகுதியைச் சேர்ந்த உசைபா (56) என்ற பெண் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். தற்போது 178 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழிமந்தி பிரியாணி சாப்பிட்டு பெண் பலியான சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Related posts

ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் பதவிக்கான வயது வரம்பு 75 ஆக உயர்வு

அமைச்சர் எ.வ.வேலு தகவல் 4 நகரங்களுக்கு இந்த ஆண்டில் புறவழிசாலை அமைக்கும் பணி

2 கி.மீ. தூரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டன; திருப்பதி மலைப்பாதையில் 7 யானைகள் நடமாட்டம்: பக்தர்கள் அச்சம்