தூய்மைப்பணியாளர்களின் ஊக்கத்தொகையை அமுக்கிய பெண் அதிகாரி விசாரணையில் சிக்கியது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘டெல்லி தலைவர் கலந்துகொண்ட விழாவில் கூட்டத்த காண்பிக்க தனியார் கல்லூரி மாணவர்களை எல்லாம் அழைச்சிட்டு வந்தாங்களாமே தாமரை நிர்வாகிகள்’’ என்றார் பீட்டர்மாமா. ‘‘மலைக்கோட்டை மாநகரில் விமானநிலைய புதியமுனையம் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், பிரதமர் கலந்துகொண்டதால் தாமரை கட்சி சார்பில் அதிகளவில் கூட்டத்தை காண்பிக்க வேண்டும்னு டெல்லி தலைமையிடத்தில் இருந்து தமிழக முக்கிய நிர்வாகிகளுக்கு முதல்நாள் ரகசிய உத்தரவு வந்ததாம்… தலைமை உத்தரவை தொடர்ந்து, ஆட்களை பிடிக்கும் பணியில் நிர்வாகிகள் தீவிரமாக களத்தில் இறங்கியிருக்காங்க. ஆனாலும், பெரிய அளவில் சொல்லும் அளவுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை.

‘கரன்சியை’ இறைக்க தங்களிடம் கரன்சி இல்லாததால் கடைசி வரையிலும் டென்ஷனில்தான் இருந்தாங்களாம்.. அப்புறமா, வேறுவழியின்றி கடைசி கட்டமாக மலைக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு தனியார் கல்லூரிகள் நிர்வாகத்திடம் கெஞ்சி கூத்தாடி மாணவ, மாணவிகளை விழாவுக்கு அழைத்துவந்து ஓரளவுக்கு கூட்டத்தை காட்டியிருக்காங்க.. டெல்லி தலைமையை திருப்திப்படுத்த விழாவுக்கு மாணவர்களை வலுக்கட்டயமாக அழைத்து வரும் நிலைக்கு தள்ளப்பட்ட நிர்வாகிகள், கூட்டத்தை காண்பிக்க எப்படி எல்லாம் இறங்கி வேலை பார்க்க வேண்டியது இருக்குன்னு புலம்பி வருகிறார்களாம்’’.. என பதிலளித்தார் விக்கியானந்தா.

‘‘தூய்மைப்பணியாளரை பாராட்டி வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை ஆட்டைய போட்டுட்டாராமே பெண் அதிகாரி’’ என அடுத்த பிரச்னைக்கு தாவினார் பீட்டர் மாமா. ‘‘சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடந்த மாதம் மிக்ஜாம் புயல் வெள்ளம் புரட்டி எடுத்தபோது, நிவாரண பணிகளை விரைந்து செய்வதற்காக கோவை மாநகராட்சியில் இருந்து 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டாங்க.. இவங்க தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் முகாமிட்டு, நிவாரண பணிகளை அசத்தலா செய்தாங்க.. இவர்களது பணியை பாராட்டி, ஒவ்வொருவருக்கும் தலா ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதற்கான தொகையும் கோவை மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ஊக்கத்தொகை, பெரும்பாலான தூய்மைப்பணியாளர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால், மேற்கு மண்டலத்தில் உள்ள ஒரு பெண் அதிகாரி, தனக்கு கீழ்நிலையில் உள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை முறையாக பிரித்துக் கொடுக்கவில்லையாம்.. மாறாக, ‘அமுக்கல்’ வேலையில் இறங்கி விட்டாராம். இதனால பாதிக்கப்பட்ட தூய்மைப்பணியாளர்கள், இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி கமிஷனரிடம் புகார் செய்திருக்காங்களாம்.. அவர், உரிய விசாரணை நடத்தும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு உத்தரவு போட்டிருக்கார். விரைவில் அந்த பெண் அதிகாரி சிக்குவார் என்கிறார்கள்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘குக்கருக்கு ஆதரவா தேனிக்காரர் விசிலடிப்பது தெரிஞ்சி இலைக்கட்சி தரப்பு கொந்தளிக்குதாமே’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஹனிபீ மாவட்டத்தில இலைக்கட்சி அலுவலகம் கடந்த 4 ஆண்டுகளாக மூடியே கிடந்தது. கட்சித் தலைவி இறந்ததும் ஏற்பட்ட பாகப்பிரிவினை சண்டையில தேனிக்காரர் தரப்பு, கட்சி அலுவலகம் தங்களுக்குத்தான் சொந்தம்னு சொல்லி, சின்ன மம்மி மற்றும் குக்கர் தலைமைக்கு எதிரா அரசிடம் புகார் தெரிவித்தது. இதுதொடர்பா விசாரணை நடந்ததால அலுவலகம் மூடப்பட்டது. பின்னர் காட்சிகள் மாறி தேனிக்காரர் – சேலத்துக்காரர் இணைந்தபோதும், அலுவலகம் தொடர்பான புகாரை, தேனிக்காரர் தரப்பு வாபஸ் வாங்கவில்லையாம்…

2 முதல்வர்களை தந்த மாவட்டத்தில் கட்சி அலுவலகம் செயல்படாம இருப்பதை சேலத்துக்காரரும் கண்டுகொள்ளவே இல்லை. பின்னர் நிலைமை தலைகீழாகி இலைக்கட்சியில் இருந்து தேனிக்காரரை நீக்கம் செய்தனர். இதையடுத்து யாரை எதிர்த்து அரசியல் செய்தாரோ, அவர்களுடனே கூட்டணி சேர வேண்டிய நிலைமை தேனிக்காரருக்கு ஏற்பட்டது. இதனால ஹனிபீ மாவட்ட இலைக்கட்சி அலுவலகம் குக்கர் கட்சிக்காரங்க கிட்ட போனாலும் போகட்டும். சேலத்துக்காரர் பக்கம் போகக் கூடாதுன்னு அரசுக்கு தந்த புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காம தேனிக்காரர் அமைதியாயிட்டாரு.

இதனால் இனி அலுவலகம் தங்களுக்குதான் என குக்கர் கட்சிக்காரங்க கொக்கரிக்கின்றனராம்… அதேசமயம் வளர்த்து விட்ட கட்சிக்கு பங்கம் விளைவிக்கிற மாதிரி, குக்கருக்கு ஆதரவா தேனிக்காரர் விசிலடிக்கிறாரேன்னு இலைக்கட்சியினர் கொந்தளிச்சுக்கிட்டு இருக்காங்க’’ என்றார் விக்கியானந்தா.
”தனித்து விடப்படுவோமோன்னு அச்சத்தில் இருக்காராமே இலைக்கட்சி தலைவர்?\\” என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியின் சேலத்து தலைவர் பெரும் அரசியல் குழப்பத்தில் இருக்காராம்.. மம்மி மறைவுக்கு பிறகு டெல்லி தாமரை ஆசியுடன் நான்காண்டுகளை வெற்றிகரமா கரை சேர்ந்தவுடன் புதுத்தெம்புடன் இருந்தாராம்..

ஆனா தாமரை தன்னை முற்றிலும் அடிமையாக்க நினைத்ததும் தைரியமா வெளியே வந்துட்டாராம்.. ஆனா பின்னாடியே வரும் என எதிர்பார்க்கப்பட்ட லட்டர் பேடு கட்சிகள் கூட சேலத்து தலைவரை திரும்பி பார்க்க மறுத்து டெல்லியை நோக்கி ஓடுறாங்களாம்.. இதனால ரொம்பவே அதிர்ச்சியா இருக்காராம்..
அதே நேரத்துல டெல்லியும் எப்படியாவது தமிழகத்தில் கால் பதிப்பதில் தீவிரம் காட்டிக்கிட்டு இருக்காம்.. இதற்காக கேப்டன் கட்சியை வளைத்துப்போடும் வகையில் நெஞ்சைத்தொடும் வகையில் உருக்கமான பதிவை வெளியிட்டாராம் டெல்லி தலைவர்..

அதே நேரம் தன்னை மதிக்காமல் உதறித் தள்ளிய இலைக்கட்சி தலைவருக்கு தகுந்த பாடத்தை கற்பித்தே ஆகணும்னு ரகசியமா உத்தரவு போட்டதால, இலைக்கட்சியாரை சுற்றி சுற்றி வந்த லட்டர்பேடுகள் கூட திருச்சிக்கு ஓடிப்போய் லைனில் நின்னாங்களாம்.. அதேபோல தேனிக்காரரையும் டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்காராம்.. இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தா, கதர் கட்சியின் ஒத்தை ஆளாக இருக்கும் எம்பி மட்டுமே அவரது பின்னால் இருக்காராம்.. அவரும் எப்படியாச்சும் ஒண்ணு சேர்த்துடணும்னு முடிவெடுத்திருக்காராம்.. நடப்பதையெல்லாம் பார்த்தா இலைக்கட்சி சேலத்து தலைவர் மனமுடைந்து, ‘தான் தனித்து விடப்படுவோமோ’ என்ற அச்சத்தில் அசந்திருக்காராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்