பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு: மாஜி சிறப்பு டிஜிபி-யின் மேல்முறையீடு மனு தள்ளுபடி.! உச்சநீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸுக்கு, கடந்தாண்டு ஜூனில் விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், ஜனவரி 6ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதற்கிடையில், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணையை, வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நிலுவையிலிருந்ததால் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பும் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், மேல்முறையீட்டு வழக்கின் விசாரணைக்காக ஜனவரி 12ம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ராஜேஷ் தாஸுக்கு உத்தரவிட்டது. மேலும் ஜனவரி 24ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, ஹெச்.ராய் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், ‘வழக்கு விசாரணையை வேறு மாவட்டம் அல்லது மாநிலத்திற்கு மாற்ற வேண்டும். அதனை உயர்நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை’ என்று கூறப்பட்டது. நீதிபதிகள் தரப்பில், ‘வழக்கின் விசாரணை சரியான பாதையில் தானே செல்கிறது. மனுதாரர் வழக்கு விசாரணைக்கு தடையாக உள்ளார். இவ்வழக்கில் எங்களால் எவ்வித நிவாரணமும் தற்போது வழங்க முடியாது’ என்று கூறி மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய நீதிபதிகள், ‘இதுதொடர்பான வழக்கு விசாரணையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். இதற்கான அறிவுறுத்தலை உயர் நீதிமன்றம் வழங்க வேண்டும்’ எனறு உத்தரவிட்ட நீதிபதிகள் மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு