மழை வந்ததால் காயவைத்த துணியை எடுத்தபோது கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு: தற்கொலை முயற்சியா என போலீசார் விசாரணை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் நேற்று முன்தினம் திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், காய வைத்த துணியை எடுக்கும்போது, கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 27வது வார்டு, சீனிவாசபுரம், கே.கே.நகர், 2வது தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (33). இவரது, மனைவி சங்கீதா (28). இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

பாலமுருகன் வண்டலூர் அடுத்த வெங்கப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் கூடுவாஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனை கண்டதும் சங்கீதா தனது வீட்டின் அருகில் உள்ள 40 அடி ஆழம் கொண்ட உரை கிணற்றின் மீது ஏறி, காய வைத்த துணியை எடுத்தபோது, கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் கூடுவாஞ்சேரி போலீசுக்கும், மறைமலை நகரில் உள்ள தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், கூடுவாஞ்சேரி போலீசார் மற்றும் மறைமலைநகர் தீயணைப்பு துறையின் நிலைய அலுவலர் வீரராகவன் தலைமையில், 7 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் விழுந்த சங்கீதாவை 1 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். இதில், இடுப்பு எலும்பு முறிந்த நிலையில் காயமடைந்த சங்கீதாவை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு, சங்கீதாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சங்கீதா சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் தனசேகர், சங்கீதா கிணற்றில் தவறி விழுந்தாரா? அல்லது குடும்ப பிரச்னை காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்