விபத்தில் பெண் பலியான சம்பவம்; காதலியின் வீட்டில் பதுங்கிய சிவசேனா தலைவரின் மகன் கைது: 3 நாட்களுக்கு பின் சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்

மும்பை: விபத்தில் பெண் பலியான சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சிவசேனா தலைவரின் மகன், காதலியின் வீட்டில் இருந்து ரிசார்ட்டில் பதுங்கிய போது கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் சிவசேனா (ஏக்நாத்) மூத்த தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா, மும்பையின் வோர்லி பகுதியில் தனது பிஎம்டபிள்யூ காரில் அதிவேகத்தில் சென்ற போது, அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இவ்விவகாரத்தில் டிரைவர் ராஜ்ரிஷி பிடாவத், மிஹிர் ஷாவின் தந்தை ராஜேஷ் ஷா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளியான மிஹிர் ஷாவை போலீசார் தேடி வந்த நிலையில், சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின்னர் அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 7ம் தேதி சம்பவம் நடந்த பின் தலைமறைவான மிஹிர் ஷா, தனது காதலியின் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றார். அவர்களுக்கு இடையே 40 முறை செல்போனில் பேசியுள்ளனர். காதலியின் வீட்டில் இரண்டு மணி நேரம் தூங்கிய மிஹிர் ஷா, கார் விபத்து மற்றும் பெண் ஒருவர் பலியானது குறித்து காதலியிடம் கூறியுள்ளார். அவர் மிஹிர் ஷாவின் மூத்த சகோதரி பூஜாவை தொடர்பு கொண்டார். அதன் தொடர்ச்சியாக கோரேகானில் உள்ள பூஜாவின் வீட்டில் மிஹிர் ஷா தங்கவைக்கப்பட்டார். அதன்பின் மிஹிர் ஷாவை அழைத்துக் கொண்டு யூர் ஹில்ஸ் ரிசார்ட்டுக்கு புறப்பட்டனர். சில மணி நேரம் கழித்து, மற்றொரு ரிசார்ட்டுக்கு சென்றனர். அங்கேயே அவர்கள் தங்கியிருந்தனர். இவ்விசயத்தில் அவர்களை தனிப்படை போலீசார் கண்காணித்து வந்தனர்.

பின்னர் விரார் பாடாவில் உள்ள அந்த ரிசார்ட்டை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். ரிசார்ட்டில் பதுங்கியிருந்த மிஹிர் ஷா, அவரது தாய் மீனா, சகோதரிகள் பூஜா, கிஞ்சல், நண்பர் அவ்தீப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்’ என்று கூறினார்.

Related posts

நடிகை பலாத்கார வழக்கு நடிகர் சித்திக்கிடம் போலீஸ் 3 மணி நேரம் விசாரணை

மழை தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான 1913 என்ற எண்ணுக்கு 150 கூடுதல் இணைப்பு: மாநகராட்சி ஆய்வு கூட்டத்தில் தகவல்

இந்தியா-மாலத்தீவு இடையே நாணய மாற்று ஒப்பந்தம்: டெல்லியில் பிரதமர் மோடியுடன் அதிபர் முய்சு பேச்சுவார்த்தை