பாஜ அரசின் அவலம்

பாஜ ஆளாத மாநிலங்களில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என மைக் கிடைக்கும் இடங்களில் எல்லாம், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜ கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உண்மைக்கு புறம்பாக பேசி வருகின்றனர். பாஜ ஆளும் மாநிலங்களில் நிலைமை எப்படியிருக்கிறது என்பதற்கு, உத்தரப்பிரதேச மாநிலத்தில் மத வழிபாட்டு கூட்டத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகளை உதாரணமாக கூறலாம். உ.பி மாநிலம், ஹத்ராஸ் மாவட்டம், ரதிபன்பூர் கிராமத்தில் சாமியார் போலே பாபா நடத்திய சத் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாட்டில் ஏகப்பட்ட குழப்பம் நிலவியிருக்கிறது.

நிகழ்ச்சிக்காக போடப்பட்ட பந்தல் ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையிலேயே அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 2 லட்சம் பேருக்கு மேல் நிகழ்ச்சியில் பங்கேற்க திரண்டதால், ஆரம்பம் முதலே மக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர். உ.பி.யில் தற்போது நிலவும் கடும் வெயிலால் அனல் காற்று, காற்றோட்டமில்லாத சூழலால் துவக்கத்தில் இருந்து சிலருக்கு லேசான மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிலர் நிகழ்ச்சியில் தொடர்ந்து இருக்க முடியாமல், ஆரம்பக்கட்டத்திலேயே வெளியே செல்ல முயன்றுள்ளனர். இதனால் துவக்கத்திலிருந்தே ஒரு அசாதாரண சூழல் நிலவியுள்ளது.

மேலும், போலே பாபா சாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்க முண்டியடித்து சென்ற பக்தர்களாலும், கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. பலர் மயங்கி கீழே விழுந்துள்ளனர். அவர்களை கண்டுகொள்ளாமல் மனிதாபிமானமின்றி மேலே மிதித்து, முன்னேறி சென்றவர்களால் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மயங்கி சரிந்துள்ளனர். 130 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். இவர்களில் 100க்கும் மேற்பட்ட பெண்களும் அடக்கம் என்பதுதான் வருந்தத்தக்க விஷயம். நிகழ்ச்சியில் போதுமான முன்னேற்பாடு வசதிகள் இல்லாததே இந்த விபரீதத்துக்கு முதன்மையான காரணமாக விமர்சிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முறையான சிகிச்சை கூட தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போலீசார் அனுமதி மறுத்தும் நிகழ்ச்சி நடந்தது எப்படி? பக்தர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவதில் அலட்சியம் காட்டியது எப்படி? நிகழ்ச்சியில் பக்தர்கள் சிரமமின்றி செல்ல, வெளியேறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தி தராதது ஏன்? சேறும், சகதியுமாக இருந்த வயல்வெளி பகுதியில் நடத்தியது ஏன்? சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரள்வார்கள் என உளவுத்துறை கணிக்கவில்லையா? இத்தனை பேர் திரண்ட கூட்டத்தில் 50க்கும் குறைவான போலீசாரை காவல் பணியில் ஈடுபடுத்தியது எப்படி? இப்படி எண்ணற்ற கேள்விகள் அனைவர் மனதிலும் எழுகின்றன.

பாஜ அரசு கடந்த 7 ஆண்டாக ஆளும், இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தில் இப்படியொரு கவலைக்கிடமான நிலைமை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றாததால்தான், கடந்த 2019 எம்பி தேர்தலில் 62 சீட்களில் ஜெயித்த பாஜ கட்சி, 2024 தேர்தலில் வெறும் 33 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது என எதிர்க்கட்சியினர், நடுநிலையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆளும் மாநிலங்களில் ஆட்சி செய்வதில் கோட்டை விடும் பாஜ கட்சி, மக்களவையில் எதிர்க்கட்சிகளை குறை கூறுவதை மட்டுமே ஒழுங்காக செய்து வருகிறது. இனியாவது பாஜ ஆளும் மாநிலங்களில் குறை சொல்லாத வகையில் ஆட்சி நடத்த பழகட்டும். அதன்பின்னர் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் போக்கை கையாளட்டும் என மக்கள் குரல் எழுப்புகிறார்கள்…

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்