கரன்சி இல்லாமலும் கூட்டணி ஆதரவு இல்லாமலும் கலங்கிக் கிடக்கும் வேட்பாளரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இடைத்தேர்தலில் பாஜவை நம்பி களத்தில் குதித்த வேட்பாளர் கரன்சி இல்லாமலும், கூட்டணி கட்சியினர் இல்லாமலும் புலம்புகிறாராமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தே.ஜ. கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கரன்சி இல்லாமல் தவிக்கிறாராம்… தேஜ கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக போட்டியிட முன்வந்தபோதிலும் பாஜ தலைமை அனுமதி கொடுத்த பிறகு தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதாம்.. இதனால் இடைத்தேர்தல் செலவுகளை பாஜ பார்த்துக்கொள்ளும் என்ற கனவில் பாமகவும் களமிறங்கியதாம்.. ஆனால் அங்கிருந்து கரன்சியை இறக்கவில்லையாம்.. இதுவரை சொந்த காசை போட்டுதான் செலவு செய்து வருகிறாராம் வேட்பாளர்.. எதிர்த்துப் போட்டியிடும் கட்சிகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் வேட்பாளரோ, மக்களவை தேர்தலில் செய்த செலவை விட அதிகமாக செலவாகிறது. கட்சியும் ஓரளவுக்குதான் செலவு செய்யுது.. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் களமிறக்கப்பட்டு பல கோடியை செலவு செய்தேன். தற்போது இடைத்தேர்தலில் மீண்டும் களம் இறக்கப்பட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறேன். கூட்டணி கட்சி நிர்வாகிகள் எட்டிக்கூட பார்க்கவில்லை.. பாஜ தலைவர்கள் ஒரு சிலர் மட்டும், பிரசாரத்தில் எட்டி பார்த்துவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு தலைமறைவாகிட்டாங்க.. மொத்தத்தில் பாமக தலைவரு, தலைவரின் மனைவி, கட்சிக்காரர்கள் மட்டுமே தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறோம்னு தனது சகாக்களிடம் புலம்பி வருகிறாராம் வேட்பாளர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பில் கலெக்டர் பணிக்கு ‘புல்’ மப்புல வரும் இளநிலை உதவியாளர்பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் பணிபுரியும் இரண்டு வரி வசூலர்கள், வசூலில் உச்சக்கட்டத்தில் இருக்கிறார்களாம்.. வரி வசூல் செய்வதைவிட, சொத்து வரி விதிப்பு, பெயர் மாற்றம், காலியிடவரி, நிர்ணயிப்பதில்தான் குறிக்கோளாக உள்ளார்களாம்.. இந்த மண்டல அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்பட யார் சொன்னாலும் கோப்புகள் கையெழுத்து ஆவதில்லையாம்.. மண்டல உயரதிகாரி, பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் பணியையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருவதால், கீழ்நிலை ஊழியர்களின் ஒழுங்கீனம்பற்றி கண்டுகொள்ள இவருக்கு நேரம் இல்லையாம்.. மேலும், பொள்ளாச்சி நகராட்சி அலுவலக கோப்புகளை, இம்மண்டல அலுவலகத்திற்கே வரவழைத்து இங்கேயே அமர்ந்து எல்லா கோப்புகளையும் பார்த்து விடுகிறாராம்.. இவர், கண்டுகொள்ளாத காரணத்தால், மேற்கண்ட இரு பில் கலெக்டர்களையும் கையில் பிடிக்க முடியவில்லையாம்.. இதேபோல், கிழக்கு மண்டல அலுவலகத்தில், மண்டல உயர் அதிகாரியின் வீட்டுக்கு மீன், மட்டன், சிக்கன், காய்கறி போன்ற பொருட்கள் வாங்கிக்கொடுத்து, சமையல் செய்து கொடுத்து, ஒரு பெண் ஊழியர், வரி வசூலர் பணியை வாங்கி விட்டாராம்.. இவரையும் யாரும் கையில் பிடிக்க முடியவில்லையாம்.. இது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் இளநிலை உதவியாளர் ஒருவர், காலையிலேயே டாஸ்மாக் சரக்கு அடித்துவிட்டு ஆபீசுக்கு வருகிறாராம்.. இவருக்கும் தற்போது பில் கலெக்டர் பணி வழங்கப்பட்டுள்ளதாம்.. இதன் காரணமாக, இந்த அலுவலகத்தில் கோப்புகள் தேக்கமடைந்து கிடக்குதாம்.. இந்த அடாவடி பில் கலெக்டர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்ற வேண்டும்னு கோரிக்கை குரல் ஒலிக்க தொடங்கியிருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கண்டா வரச்சொல்லுங்க…பாடல் பாணியில எம்எல்ஏ ஒருத்தர தொகுதிக்குள்ள தேடுறாங்களாமே…’’ தெரியுமான்ன கேட்டார் பீட்டர் மாமா.
‘‘போன 2021 சட்டமன்ற எலக்‌ஷன்ல இலை கட்சி சார்புல சென்னைக்கு பக்கத்துல மல்லி என்று முடியுற ஊரைச் சேர்ந்த ஒரு பார்ட்டியோட தலைவருக்கு வெயிலூர்ல இருக்குற 2 எழுத்து இனிஷியல் கொண்ட தொகுதியில சீட் கொடுத்தாங்க.. அவரும் வெற்றி பெற்றாரு, அப்புறம் தொகுதியில நடக்குற சில நிகழ்ச்சிகளுக்கு தலைய காட்டினாராம்.. அது இல்லாம அப்பப்போ தொகுதி பக்கம் வந்து போவாராம்.. இதுல பாராளும் மன்றத்தோட எலக்‌ஷன் அறிவிச்சதுல இருந்து, இப்ப வரைக்கும் சுமார் 3 மாதமாக ஆளையே காணோமாம்.. விசாரிச்சா, பாராளும் மன்றத்தோட எலக்ஷன்ல ஒரு சீட் கேட்டாராம்.. இலை பார்ட்டிங்க ஆசை காட்டி மோசம் பண்ணிட்டாங்களாம்.. இந்த மன வேதனையிலேயே இவரு பாராளும் எலக்‌ஷனுக்குகூட வேலை பார்க்கவில்லையாம்.. சரி எல்லாம் முடிஞ்சு ரிசல்ட்டும் வந்தாச்சு.. ஓட்டு போட்டு ஜெயிக்க வெச்ச மக்களையாவது வந்து பார்ப்பாருன்னு பார்த்தா, சட்டசபைக்கு போயிட்டாரு.. அட மக்கள் கோரிக்கை என்னவென்று தெரியாம சட்டத்தோட மன்ற உறுப்பினரு, அங்க போயி என்ன செய்ய போறாருன்னு கேள்வி கேட்டு, அவர கண்டா வரச்சொல்லுங்கன்னு தொகுதிக்குள்ள பேசிக்கிறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அரசியல் படிப்பு படிக்கப்போவதா மாஜி போலீஸ்காரர் சொல்வதில் தந்திரம் இருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மலராத கட்சியின் மாநில தலைவராக இருப்பவர் கர்நாடக மாஜி போலீஸ்காரர். ஐபிஎஸ் அதிகாரியான இவரு ரிசைன் பண்ணிட்டு வந்தவுடன் தலைவர் பதவி காத்திருந்தது. கட்சியில் அடியிலிருந்து வேலை செஞ்சிட்டு வந்தவங்களை எல்லாம் இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு தூக்கிட்டதாக அவரது கட்சியினரே குற்றச்சாட்டை சொல்லிட்டு இருக்காங்க.. பிரதமரே அவரது அரசியல் செயல்பாடுகளை பார்த்து முதுகில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தும் அளவுக்கு பவர் புல்லான தலைவராக இருந்துக்கிட்டிருக்காரு.. இவரது செயல்பாட்டினால் கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் பெரும் வெற்றியை பெற்றிடுவோம்னு டெல்லி தலைமை ரொம்பவே நம்பிச்சாம்.. ஆனால் ரிசல்ட் பூஜியத்தில் முடிஞ்சிப்போச்சாம்.. இதனால மெஜாரிட்டி கிடைக்காம ரொம்பவே திணறுறாங்களாம்.. தமிழ்நாட்டில் கூட்டணி வச்சிருந்தா ஏதாவது கொஞ்சம் சீட்டை பிடித்திருக்கலாமுன்னு கட்சியின் முன்னணி தலைவர்களே சொல்லிட்டு இருக்காங்க.. அதுவும் உண்மைதான்னு தலைமைக்கு தெரிஞ்சிப்போச்சாம்.. இதனால் அந்த மாஜி போலீஸ் அதிகாரிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்காம்.. தலைவர் பதவியில் இருந்து தூக்கிடுவாங்கன்னு அவரது போலீஸ் மூளைக்கு உறுதியா தெரிஞ்சிப்போச்சாம்.. இதனால திடீரென அரசியல் படிப்பு படிக்கப் போறேன்னு ஒரு குண்டை உருட்டி விட்டிருக்காராம் அந்த தலைவரு.. லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில ஆறு மாதம் தங்கி இருக்கணுமாம்.. ஒரு கட்சியின் மாநில தலைவராக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஐபிஎஸ் அதிகாரியாகவும் இருந்திருக்காரு.. திடீரென அரசியல் படிப்பு படிக்கப் போறேன்னு சொல்றது பெரும் சந்தேகம் எழுந்திருப்பதாக அவரது கட்சியினரே சொல்றாங்க.. எப்படியும் பதவி பறிபோய்விடும், இது பெருத்த அவமானமாகி விடும் என்பதால் படிக்கப்போறேன்னு சொல்றதா கட்சிக்காரர்களே சொல்றாங்க.. படிப்பு முடித்து திரும்பி வந்தவுடன் டெல்லி அரசியலுக்கு கொண்டு போக வாய்ப்பு இருப்பதாகவும் மலராத கட்சியினரிடையே பேச்சு எழுந்திருக்காம்..’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

மக்களவை தேர்தலில் வென்றவர்கள் 50.58% வாக்குகள் பெற்றுள்ளனர்: 2019 தேர்தலை விட 2% குறைவு, ஏடிஆர், தேர்தல் கண்காணிப்பகம் அறிக்கை

வங்கி ஆவணங்களை வழங்கக் கோரிய செந்தில் பாலாஜி வழக்கு 8ம் தேதிக்கு தள்ளிவைப்பு

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி அபு சலீம் நாசிக் சிறைக்கு மாற்றம்