அடிப்படை வசதி இல்லாத வாசுதேவநல்லூர் அரசு மருத்துவமனை: நோயாளிகள் தவிப்பு

சிவகிரி: வாசுதேவநல்லூரில் உள்ள அரசு வட்டார மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். வாசுதேவநல்லூரில் தலைமை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. யூனியன் அலுவலகத்திற்கு அருகே அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் பொது மருத்துவம், குழந்தைபேறு, சித்த மருத்துவம் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளிப்பதற்காக மூன்று அரசு மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் தேவிபட்டணம், தலைவன்கோட்டை, வடமலாபுரம், ராயகிரி உட்பட 8 அரசு ஆரம்ப சுகாதார மையங்களுக்கு தலைமை இடமாக இந்த மருத்துவமனை விளங்கி வருகிறது. வாசுதேவநல்லூர் அரசு மருத்துவமனையில் அனைத்து கட்டிட வசதிகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. தினந்தோறும் சுமார் 300க்கு மேற்பட்ட நோயாளிகள் வருகை தந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். குறிப்பாக மருத்துவமனையில் கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை.

மருத்துவமனை வளாகம் முழுவதும் புதர்மண்டி பாழ்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாடவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறுநீர் பரிசோதனை செய்ய பொது இடத்தில் நின்று சிறுநீர் பிடிக்கும் அவலம் உள்ளது. கழிப்பறைகள் இருந்தும் அவை பூட்டி வைக்கப்பட்டு பயன்படாத நிலை உள்ளது. பொதுமக்கள் குடிநீர் குடிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகள் இருந்தும் அவற்றில் தண்ணீர் நிரப்பாமல் பயனற்ற நிலையில் காணப்படுகிறது. தலைமை வட்டார மருத்துவமனையாக விளங்கும் இந்த அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் கூடிய சுகாதாரம் நிறைந்த குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

மதுபான கொள்கை வழக்கில் விசாரணை தாமதமாவதால் ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்க மணிஷ் சிசோடியா முறையீடு

67 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்ற விவகாரத்தில் சந்தேகம் எழுந்துள்ளது: உச்சநீதிமன்றம்

தஞ்சையில் கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் எண்ணெய் பனை சேவை மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் டிஆர்பி ராஜா..!!