இறுக்கமான முகத்தோடு சொந்த ஊர் வந்து சேர்ந்த இலைத்தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தலைமை மீது கடும் கோபத்துல இருக்காங்களாமே இலைக்கட்சியின் டெல்டா நிர்வாகிகள்..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘தேர்தல் ரிசல்ட் தேதி நெருங்கி வருவதால், இலைக் கட்சியினர் ஒருவிதமான பீதியில் இருக்காங்களாம்.. ஆனால், டெல்டாவில் உள்ள இலைக்கட்சியின் வேட்பாளர் மற்றும் கூட்டணி வேட்பாளரோ தங்களை தலைமை கண்டுகொள்ளவில்லையென புலம்பி தவித்து வருகிறார்களாம்.. தேர்தல் ரிசல்ட் வந்த பிறகு, தங்களை அழைத்து தலைமை விசாரித்தால், அதற்கு தக்க பதிலடி கொடுப்போம்னு இலைக்கட்சியினர் சக நிர்வாகிகளிடம் தெரிவித்து வருகிறார்களாம்.. தேர்தலின் போது, ‘விட்டமின் ப’ தங்களுக்கு தலைமை தரவில்லை என்று கடும் கோபத்திலும் அவர்கள் இருக்கிறார்களாம்.. தேர்தல் முடிவுக்கு பிறகு டெல்டா இலைக்கட்சியின் நிர்வாகிகளை, தொண்டர்களை இலைக்கட்சியின் தலைமை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதுதான் பெரும் கேள்வியாக இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கரன்சிக்காக ஆட்டம் போடும் பெண் அதிகாரிங்களுக்கு விஜிலென்ஸ் வலை விரிச்சிருக்கிற கதை தெரியுமா?..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகராட்சியில், வெளிமாவட்ட வருவாய் துறையில் இருந்து வந்த மூன்று எழுத்து பெயர் கொண்ட ஒரு பெண் அதிகாரி, வடக்கு மண்டல உதவி கமிஷனராக பணிபுரிகிறாரு.. இவர், வழக்கமான கோப்புகளில்கூட கையெழுத்து போடாமல் இழுத்தடித்து வருகிறாராம்.. ஏன் என்று கேட்டால், எல்லாம் `உள்குத்து’ என்கிறார்கள். மாநகராட்சி உதவி கமிஷனர்களில் இவர்தான், எல்லா வகையிலும் உச்சத்தில் இருக்கிறாராம்.. இவரது டேபிளுக்கு எந்த கோப்புகளை கொண்டுசென்றாலும் சந்தேக கண்ணுடன் பார்க்கிறாராம்.. தனக்கு ஏதேனும் பிரயோஜனம் இல்லாமல் எந்த கோப்பிலும் கையெழுத்து போடுவது இல்லையாம்.. குறிப்பா, நகரமைப்பு பிரிவை சேர்ந்த கோப்புகளில் அதிக கவனம் செலுத்துவது இல்லையாம்.. புதிதாக வந்துள்ள உதவி நகரமைப்பு அலுவலர் என்னதான் எடுத்துச் சொன்னாலும், அசைந்து கொடுக்க மாட்டேங்கிறாராம்.. இதனால், கோப்புகள் மலைபோல் குவிந்து கிடக்கிறதாம்.. இவரிடம் கோப்புகளை கொண்டு செல்வதற்கே வருவாய் பிரிவு மற்றும் நகரமைப்பு பிரிவு ஊழியர்கள் தயங்குகிறார்களாம்.. உள்ளூர் திட்டக்குழுமத்தில் இருந்து லே-அவுட் அனுமதி வாங்கிய பின்னரும், மாநகராட்சி சார்பில் வரைபட அனுமதி வழங்காமல் இவர் இழுத்தடிக்கிறாராம்.. விண்ணப்பதாரர்களை நடையாய் நடக்க வைக்கிறாராம்.. எல்லாம் அந்த கரன்சி படுத்தும்பாடு என்கிறார்கள், இங்குள்ள ஊழியர்கள். இவரைப்போலவே கிழக்கு மற்றும் மேற்கு மண்டல பெண் அதிகாரிகளும் ஆட்டம் போட தொடங்கிட்டாங்களாம்.. இங்கெல்லாம் விஜிலென்ஸ் போலீசார் வலைவிரித்து காத்திருக்கிறார்களாம்… சிக்கப்போவது யாருன்னு தெரியவில்லையே..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேர்தல் ரிசல்ட் புது தகவலை கேட்டு சொந்த ஊருக்கு இறுக்கமான முகத்ததோடு வந்தாராமே சேலத்துக்காரர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரர், ஒரு காலத்தில் சின்ன மம்மியின் சொல்லுக்கு கட்டுப்பட்டிருந்தாராம்.. இவரோட பெயரை சொல்லி தான் சின்ன மம்மி அழைப்பாங்களாம்.. இலைக்கட்சி ஆட்சியின் போது, எந்தெந்த இலாகாவில் எவ்வளவு தேறும் என்பதை புள்ளிவிவரமா எடுத்துச்சொல்லி கணக்கு காட்டுவதில் சேலத்துக்காரரை விட்டால், அந்த நேரத்தில் ஆளே இல்லையாம்.. இதனால் தான், கூவத்தூரில் சேலத்துக்காரரை கை காட்டினாராம் சின்ன மம்மி. சீட்டில் உட்கார்ந்த பிறகு, அதிலிருக்கும் இன்பத்தை தெரிந்துகொண்ட சேலத்துக்காரர், இதற்கு யாரெல்லாம் இடையூறாக இருப்பாங்க என்று மைண்டில் வச்சு, அவர்களை எல்லாம் தூக்கிட்டாராம்..
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்து நின்றிருக்கார் சேலத்து தலைவர். இதில் தோல்வியை தழுவினால், கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டோர், தூக்கி வீசப்பட்ட டெல்லி தலைமை எல்லாம் ஒன்று சேர்ந்து, தன்னை ஓரம் கட்டிடுவாங்களோ என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டிருக்காம்.. தன்னை சந்தித்த மா.செக்கள் எல்லாம், தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளையும் நாம்தான் கைப்பற்றுவோமுன்னு உற்சாகமாக சொல்லி உசுப்பேத்துனாங்களாம்.. இதையும் உண்மையென நம்பிய இலைக்கட்சி தலைவருக்கு, சமீபத்தில் கிடைத்த தகவல் ரொம்பவே கவலை தரக்கூடியதாக இருக்காம்.. இதனால் சோகம் அவரை கவ்விடுச்சாம்.. வழக்கமா மாங்கனி நகருக்கு வந்தால், அவரோட முகம் மலர்ச்சியாக இருக்கும். ஆனால் சொந்த ஊருக்கு நேற்று அவர் இறுக்கமான முகத்துடனேயே வந்திறங்கினாராம்.. இதை பார்த்த கட்சிக்காரர்கள் அதிர்ச்சியடைந்ததோடு மட்டுமல்லாமல், எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் போது, ஒரு பதற்றம் இருக்கத்தானே செய்யும்னு ஆறுதல் சொல்லிட்டு போயிருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இன்ப சுற்றுலா போன வேகத்துல மெமோவால பாதியில திரும்பி வந்தாங்களாமே ஒன்றிய அலுவலக ஊழியர்கள்’’ என பரிதாபமாக கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகர் மாவட்டத்தில் இருக்கும் மங்கலகரமான ஊரில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 25க்கும் அதிகமானோர் சில நாட்களுக்கு முன் ஒரே நாளில் மொத்தமா மலைகளின் ராணி ஊருக்கு குடும்பத்துடன் இன்ப சுற்றுலா போனாங்களாம்.. ஆனா, மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெறவில்லையாம்.. இந்த தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்றதால் குளிர்ச்சியை அனுபவித்து ஊர் திரும்புவதற்குள் எரிமலையாய் அனைவருக்கும் மெமோ அனுப்பப்பட்டுள்ளதாம்.. இதை பார்த்து அனைவரும் பாதியிலேயே அவசரஅவசரமாக ஊர் திரும்பியிருக்காங்க.. இன்ப சுற்றுலாவிற்கு வராத கீழ் நிலை பணியாளர்கள்தான், இவ்வளவு பிரச்னைக்கும் காரணம்னு பழிவாங்கும் படலத்தை டூர் சென்ற அலுவலர்கள் ஆரம்பிச்சிட்டாங்களாம்.. கீழ் நிலை ஊழியர்களின் நாற்காலியை எடுத்து விட்டதோடு, மின்விசிறி இணைப்பையும் தற்காலிகமாக துண்டித்து விட்டார்களாம்.. இதனால் மங்கலமான ஊரின் ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் கீழ் நிலை ஊழியர்கள் அனைவரும் பணிநேரம் முழுவதும் நின்று கொண்டே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்காங்க.. இதனால், யாரிடம் தங்கள் குறையை சொல்வதுன்னு தெரியாமல் புலம்புறாங்களாம் கீழ் நிலை ஊழியர்கள்…’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Related posts

ஒவ்வொரு மாவட்டத்திலும் பால் உற்பத்தியாளர் சங்கம்: அமித்ஷா அறிவிப்பு

2ம் கட்டமாக நடந்த ஈரான் அதிபர் தேர்தல் பெசஸ்கியான் வெற்றி: ஒரு மாதத்திற்குள் பதவியேற்பு

இங்கிலாந்து புதிய பிரதமர் கியர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி பேச்சு: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய உறுதி