பனி மூட்டத்துடன் கூடிய மழையால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மண்சரிவு

*ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன; மரம் விழுந்து வீடுகள் சேதம்

குன்னூர் : பனி மூட்டத்துடன் கூடிய தொடர் சாரல் மழை காரணமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது.வடதமிழக கடலோர பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கத்தால் நீலகிரி மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக குன்னூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. குறிப்பாக, மாவட்டத்தின் நுழைவுவாயில் பகுதியான குன்னூரில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை, ஊட்டி-மஞ்சூர் சாலை, மஞ்சூர்-குன்னூர் சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்ட படியே சென்று வருகின்றன. சாரல் மழை காரணமாக கடும் குளிர் நிலவுகிறது. இதனால், தேயிலை தோட்டங்கள் மற்றும் காய்கறி விவசாய நிலங்களுக்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

போதிய ெவயிலின்றி மழைப்பொழிவு உள்ளதால் ேதயிலை செடிகளில் கொப்பள நோய் தாக்குதல் ஏற்பட துவங்கியுள்ளது. குன்னூர் அருகேயுள்ள லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் போன்ற சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியுள்ளன. தொடர்ந்து பெய்யும் மழையால் மண்ணில் ஈரப்பதம் அதிகரித்து மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை குன்னூர்-மேட்டுபாளையம் சாலையில் காட்டேரியை அடுத்து நந்தகோபால் பாலம் அருகே மண்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் மற்றும் மண் சாலையில் சரிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி உதவியுடன் சாலையில் விழுந்த பாறை, மண் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தினர். இச்சாலையில் மண்சரிவு ஏற்பட கூடிய அபாயம் நீடிப்பதால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். இதேபோல் குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் மரம் விழுந்து இரு வீடுகள் சேதமடைந்தது.

குன்னூர் நன்கெம் மருத்துவமனை சாலை மற்றும் ஓட்டுப்பட்டறை பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. இவற்றை தீயணைப்புத்துறையினர் உடனுக்குடன் வெட்டி அகற்றினர். ரன்னிமேடு அருகே மலைரயில் பாதையில் மரம் விழுந்தது. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து 10.30 மணிக்கு குன்னூர் வர வேண்டிய மலை ரயில் மரம் அகற்றப்பட்ட பின் ஒரு மணி நேரம் தாமதமாக குன்னூர் வந்தது. இதேபோல் கடந்த சில நாட்களாக ஊட்டியில் மழை குறைந்து காணப்பட்ட நிலையில் நேற்று ஊட்டியிலும் சாரல் மழை மற்றும் பனிமூட்டமான காலநிலை நிலவியது. இதனால் கடும் குளிர் நிலவியது.

ஊட்டி மலை ரயில் இன்றும், நாளையும் ரத்து

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையிலான மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையிலான மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக நேற்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சேரனூரில் வீடு இடிந்தது

மஞ்சூரில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய தொடர்ந்து பெய்த மழையில் மஞ்சூர் ஊட்டி பிரதான சாலையில் குந்தா ராமையா பாலம் அருகே சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது. இரவு நேரத்தில் விழுந்ததால் வாகன போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது. இதை தொடர்ந்து, தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் நஞ்சூண்டன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சாலை பணியாளர்கள் ரோட்டில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றி சீரமைத்தனர்.

இதேபோல் சேரனுார் பகுதியில் முன்தினம் இரவு விடிய, விடிய பெய்த மழையால் சுதாகர், நர்மதா தம்பதியர் குடியிருந்து வந்த வீட்டின் ஒரு பகுதி இடிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த குந்தா தாசில்தார் கலைச்செல்வி மேற்பார்வையில் கிராம நிர்வாக அலுவலர் ராஜன் சேரனூர் பகுதிக்கு சென்று மழையில் இடிந்த வீட்டை பார்வையிட்டு விசாரித்தனர்.

இதையடுத்து நேற்று கீழ்குந்தா பேரூராட்சி சார்பில் பேரூராட்சி தலைவர் சத்தியவாணி, செயல் அலுவலர் ரவிக்குமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் டி.கே.எஸ் பாபு, கவுன்சிலர்கள் சதீஷ்குமார், மாடக்கன்னு, சண்முகன், ராஜேஸ்வரி ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட சுதாகர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி அளித்தனர். இந்நிலையில் நேற்றும் காலை முதல் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் மேக மூட்டத்துடன் தொடர்ந்து பலத்த மழை பெய்தது.

மிதி படகு சவாரி நிறுத்தம்

ஊட்டியில் நேற்று காலை முதல் லேசான காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் ஊட்டி ஏரியில் பாதுகாப்பு கருதி மிதி படகுகள் மற்றும் துடுப்பு படகுகள் சவாரி நிறுத்தப்பட்டது. மோட்டார் படகுகள் மட்டும் இயக்கப்பட்டன. மிதி படகுகள் நிறுத்தப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைந்துள்ளது. இதனால், சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் குறைந்தளவே காணப்பட்டது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி