99 இடங்களில் வெற்றி மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராகிறார் ராகுல்காந்தி?

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் 99 இடங்களை பிடித்தததால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுல்காந்தி ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். 18வது மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக பாஜ 240 தொகுதிகளில் வென்றுள்ளது. அதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஒன்றியத்தில் 3வது முறையாக ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை பாஜ மேற்கொண்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.  அதே வேளையில் 234 தொகுதிகளை வென்ற இந்தியா கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்த கேள்வி காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களிடையே எழுந்துள்ளது. இதில், ராகுல்காந்தி எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்க ேவண்டும் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் விரும்புகிறார்கள். 2014 மக்களவை தேர்தலில் 44 இடங்களும், 2019 தேர்தலில் 52 இடங்களையும் மட்டுமே பெற்றதால் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சி பெற முடியவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் பதவியை மோடி தலைமையிலான பா.ஜவும் வழங்கவில்லை. எனவே 2014ல் மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவராக மல்லிகார்ஜூன கார்கேவும், 2019ல் ஆதிர்ரஞ்சன் சவுத்திரியும் இருந்தனர். இந்த முறை 99 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று உள்ளதால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கண்டிப்பாக வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த பதவி ஒன்றிய அமைச்சருக்கு இணையான அதிகாரம் கொண்டது. மேலும் ஆளும்கட்சியை கேள்வி கேட்கும் அதிகாரம் கொண்டது. எனவே ராகுல்காந்தி எதிர்க்கட்சி தலைவர் பதவியில் அமர்ந்து மோடி தலைமையிலான பா.ஜ அரசை கேள்வி மேல் கேள்வி கேட்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதன் அடிப்படையில் ராகுல்காந்தி விரைவில் முடிவு எடுப்பார் என்று தெரிகிறது.

* நாளை செயற்குழுவை கூட்டி ஆலோசிக்கிறது காங்கிரஸ்
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களை பிடித்தது. இதுபற்றி விவாதிக்க நாளை காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடுகிறது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்திற்கு கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கட்சித் தலைவர்கள் ஆலோசிப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் காரணங்கள் இல்லை.. பிற குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை: காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் விளக்கம்!!

பேரனுக்கு பதிலாக நடந்த மூதாட்டி கொலை வழக்கில் உறவுக்கார பெண் சிக்கினார்

குற்றவியல் சட்டங்கள்: புதுச்சேரியில் ஜூலை 8-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்