ஆடிக்காற்றால் காற்றாலை மின் உற்பத்தி அபாரம்

நெல்லை: ஆடிக்காற்றால் காற்றாலை மின் உற்பத்தி தமிழகத்தில் தொடர்ந்து அபாரமாக உள்ளது. தமிழகத்தில் தற்போது ஒருநாள் மின் தேவை சராசரியாக 16,381 மெகாவாட்டாக உள்ளது. இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று உச்சம் பெற்றுள்ளதால் காற்றாலை மின் உற்பத்தி தொடர்ந்து அபாரமாக உள்ளது. நெல்லை மண்டலம், உடுமலைப்பேட்டை மண்டலம் ஆகிய நிலையில் காற்றாலை மின் உற்பத்தி கணக்கிடப்படுகிறது.

தென்மாவட்டங்களிலும் கோவை சுற்று வட்டார மாவட்டங்களிலும் உள்ள 13 ஆயிரத்திற்கும் அதிகமான காற்றாலைகள் மூலம் 8,621 மெகாவாட் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. ஆயினும் இயங்கும் நிலையில் உள்ள காற்றாலைகள் மூலம் அதிகபட்ச மின் உற்பத்தி காற்று சீசன் காலங்களில் 4000 மெகாவாட்டை கடந்து சாதனை படைக்கிறது. கடந்த ஒரு வாரமாக காற்றாலை உற்பத்தி சராசரியாக 4000 மெகாவாட்டை விட அதிகமாக பதிவாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ காற்று (ஆடிக்காற்று) உச்சம் பெற்றுள்ளதால் காற்றாலை மின் உற்பத்தியும் அபாரமாக உள்ளது. நேற்று முன்தினம் மாலை 5.30 மணி பதிவுப்படி காற்றாலை மின் உற்பத்தி அதிகபட்சம் 4,767 மெகாவாட்டை தொட்டது. அன்றைய தினம் பீக் ஹவர்ஸ் மின் உற்பத்தி 3,505 மெகாவாட்டும், ஆப் ஹவர்ஸ் மின் உற்பத்தி 3094 மெகாவாட் என்ற நிலையிலும் இருந்தது. சராசரி மின் உற்பத்தி 3667 மெகாவாட்டாக பதிவானது. தொடர்ந்து மின் உற்பத்தி அதிகரித்து வருவதால் தனியார் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அவர்களது தேவைக்கு போக சராசரியாக 20 சதவீதத்திற்கும் அதிகமாக அரசு கொள்முதலுக்கு தருகின்றனர். வழக்கமான பிற மின் உற்பத்தியும் சீராக நடைபெறுவதால் தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத நிலை நீடிக்கிறது. அக்டோபர் மாதம் வரை காற்றாலை மின் உற்பத்தி அபாரமாக இருக்கும் என்பதால் அடுத்த 3 மாதங்களுக்கு காற்றாலைகள் மூலம் தொடர்ந்து அதிக மின்சாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் தற்போது அரசு, தனியார் அமைப்புகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் உற்பத்தி திறன் சராசரியாக 4,964 மெகாவாட்டாக உள்ளது. வரும் காலங்களில் சோலார் மின் பயன்பாடும் அதிகரிக்கலாம்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது