சூறைகாற்று, பதநீர் உற்பத்தி குறைவால் உயர்ந்து வரும் கருப்பட்டி விலை

*கிலோ ரூ.350க்கு விற்பனை

ராமநாதபுரம் : சூறை காற்று மற்றும் நுங்கு விளைச்சலால் பதநீர் உற்பத்தி குறைந்து கருப்பட்டி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 15 லட்சத்திற்கு அதிகமான பனை மரங்கள் உள்ளன. சுமார் 2 லட்சம் குடும்பங்கள் பனை மரம் மற்றும் பனைமர உப தொழில் செய்து வருகின்றனர். மாவட்டத்தில் சாயல்குடி, திருப்புல்லாணி, மண்டபம், ராமேஸ்வரம், தொண்டி ஆகிய கடற்கரை சார்ந்த பகுதிகளில் அதிகமாக இத்தொழில் நடந்து வருகிறது.

பொதுவாக பருவ மழை நன்றாக பெய்து, நெல் அறுவடை செய்யும் தை, மாசி மாதங்களில் கருப்பட்டி உற்பத்திக்காக பனை மரத்தின் பதநீருக்காக பாளை வெட்ட துவங்குவது வழக்கம். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக வழக்கத்தை விட அதிமாக பருவமழை பெய்தது. பனை மரத்தை பொறுத்தவரை நல்ல மழை பெய்தால், மறுவருடம் தான் நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதனையொட்டி இந்த வருடம் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி இரண்டாவது வாரம் முதல் தொழிலாளர்கள் பனைமரம் சீவுதல், பாளை சீவுதல், மண்கலையம் கட்டுதல், பதநீர் இறக்கி 4 மாதங்களாக கருப்பட்டி தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடந்தது.இந்நிலையில் சமீபத்தில் பெய்த கோடை, தற்போது உள்ள சூறை காற்று போன்றவற்றால் பாளை உற்பத்தி குறைந்து பதநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் நுங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் பதநீர் இறக்க போதிய பாளை கிடைக்காமல் கருப்பட்டி உற்பத்தி குறைந்துள்ளதாக தொழிலாளர் கூறுகின்றனர்.

இதுகுறித்து பனைமரத் தொழிலாளிகள் கூறும்போது, ஆண்டு தோறும் தை மாதம் சீசன் துவங்கும். கடந்த சில வருடங்களாக ஏற்பட்ட தொடர் வறட்சியால் பங்குனி, சித்திரை என காலம் கடந்து சீசன் துவங்கியது. கடந்தாண்டு நல்ல மழை பெய்தும் கூட, அவை இந்தாண்டிற்கு பயன்பட வில்லை. இந்தாண்டு பதநீர் உற்பத்தி குறைந்து விட்டது.சுமார் 15 லிட்டர் பதநீருக்கு வெறும் 2 கிலோ கருப்பட்டி மட்டுமே தயாரிக்க முடிகிறது. இதனால் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ கருப்பட்டி ரூ.200க்கு விற்று வந்த நிலையில் தற்போது உற்பத்தி குறைவால் ரூ.300ஆக அதிகரித்து விட்டது. மொத்த வியாபாரிகள் கடைகளில் விற்று, பொதுமக்களிடம் ஒரு கிலோ கருப்பட்டி ரூ.350க்கு விற்கப்படுகிறது. இது கடந்த 10 வருடங்களில் இல்லாத விலை ஏற்றம் ஆகும். ஆனால் உற்பத்தி செய்கின்ற தொழிலாளர்களுக்கு உரிய லாபம் கிடையாது.

மேலும் தற்போது நுங்கு அதிகமாக விளைந்துள்ளது. இதனால் பதநீர் உற்பத்தி முற்றிலும் குறைந்து விட்டது. தற்போது சூறை காற்று பலமாக வீசி வருவதால் பனை மரம் ஏறி தொழில் செய்ய முடியவில்லை. மேலும் பனை மரம் ஏறி பதநீர் முட்டிகளை கட்ட முடியவில்லை. கட்டப்படும் முட்டிகளும் காற்றிற்கு விழுந்து உடைந்து விடுகிறது. இதனால் தொழில் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அதனை நம்பி வாழும் குடும்பங்கள் வறுமையில் வாடி வருகிறது.

பெரும்பாலான தொழிலாளர்கள் தொழில்வாரிய உறுப்பினர்களாக இல்லை. பனை மர முதலாளிகள், கருப்பட்டி வியாபாரிகளை நம்பியே காட்டு பகுதியில் குடிசை அமைத்து சீசன் தொழில் செய்கிறோம். எனவே அரசு பனைமர தொழிலாளர் நலவாரியம் மூலம் கணக்கெடுத்து உறுப்பினர்களாக உடனடியாக சேர்த்து அரசு நலத்திட்ட உதவிகள், உதவி தொகை போன்றவற்றை வழங்க வேண்டும் என்றனர்.

நுங்கு விற்பனை படுஜோர்

கடந்த 2 மாதங்களாக நுங்கு உற்பத்தி அதிகரித்து காணப்படுவதால் மாவட்டத்திலுள்ள ராமேஸ்வரம் போன்ற சுற்றுலா தலங்கள் செல்லும் ரோடுகள், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் வாரச்சந்தைகள், மார்க்கெட் போன்ற பகுதிகளில் நுங்கு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். 5 எண்ணிக்கையுள்ள நுங்குகள் ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

 

Related posts

ஆடி மாத அம்மன் கோயில் திருவிழாவுக்காக மண்பானை பொருட்கள் தயாரிப்பு பணி தீவிரம்

பொன்னை அருகே துணிகரம் அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை திருட்டு

வலங்கைமான் அருகே இன்று விபத்து பைக் மீது வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி