முயன்றால் முடியாதது எதுவும் இல்லை

நேரத்தை மதிக்கத் தெரிந்தவர்கள்தான் வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள். இன்று வெற்றியாளர்களாய் நம் கண்முன்னே உலாவும், வெற்றியாளர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். அவர்கள் நேரத்தை எவ்வாறு கையாண்டு உள்ளார்கள் என்பது புரியும்.சிலர் வாழ்க்கையில் ஒரு சிறிய கஷ்டம் வந்தாலும் எனக்கு நேரமே சரியில்லை என்பார்கள். நேரத்தைச் சரியாக பயன்படுத்தாமல் எனக்கு நேரமே சரியில்லை என்று புலம்புவது சரியா! உங்கள் இயலாமைக்காக நேரத்தைக் குறை கூறாதீர்கள். நேரம் எல்லோருக்கும் பொதுவானது. இங்கே நல்ல நேரம் கெட்ட நேரம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. நேரத்தை எப்படிப் பயன்படுத்துவது? என்ற வித்தையை கற்றுக்கொள்வது தான் எல்லா வெற்றியும் அடங்கியிருக்கிறது.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 16 வயதிலேயே இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து விட்டார் என்று நாம் ஆச்சரியப் படுகின்றோம்.ஆனால் அவர் சாதனைக்குப் பின்னால் எத்தனை மணி நேரம் பயிற்சி எடுத்திருக்கிறார் தெரியுமா? ஒரு நாளைக்குப் பல மணி நேரம் ஓய்வில்லாமல் பயிற்சி, இங்கே ஒரு போட்டியில் விளையாடி அவுட் ஆனதும் இன்னொரு மைதானத்திற்கு ஓடி இன்னொரு போட்டியில் கலந்துகொண்டு ஆடுவார். அங்கேயும் அவுட் ஆகிவிட்டால், மூன்றாவது ஒரு மைதானத்திற்கு பறப்பார். இப்படி ஓய்வே இல்லாமல் பத்தாயிரம் மணி நேரத்திற்கு மேல் கிரிக்கெட் பழகிய பிறகுதான் அவரால் இந்த உயரத்தைத் தொட முடிந்தது.

சாதித்த ஒவ்வொருவரும் அவர்களுடைய துறையில் தொடர்ந்து பயிற்சி எடுத்து, கீழே விழுந்து காயம்பட்டு, மறுபடியும் எழுந்து விடாமுயற்சியுடன் உழைத்தவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள். அப்படி நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தி வெற்றி பெற்ற இளம் கண்டுபிடிப்பாளராக உருவானவர்தான் ஆஸ்தா.முதியோர்கள் ஒவ்வொரு வேளையும் தவறாமல் மருந்து எடுத்துக்கொள்ள நினைவூட்டும் வகையில் ஒரு புதுமையான கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளார் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியான ஆஸ்தா.வீட்டில் இருக்கும் வயதான பெரியவர்களிடம் சாப்பிட்டீர்களா? என்கிற கேள்விக்கு அடுத்தபடியாக வேளை வேளைக்கு மருந்து சாப்பிட்டீர்களா? என்கிற கேள்வியே பிரதானமானதாக இருக்கும். முதியவர்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு காரணத்திற்காக மருந்து எடுத்துக்கொள்வார்கள். இவர்கள் மறதி காரணமாக சரியான நேரத்தில் மாத்திரை எடுத்துகொள்ள மறந்துவிடுவதுண்டு. இந்தப் பிரச்னைக்கு தீர்வை உருவாக்கியுள்ளார் 12 வயதாகும் ஆஸ்தா மேத்தா என்ற பள்ளி மாணவி.

மும்பையைச் சேர்ந்த மாணவியான ஆஸ்தா முதியவர்கள் சரியான நேரத்தில் மருந்து எடுத்துக்கொள்ள நினைவுப்படுத்தும் விதத்தில் ஒரு புதுமையான கண்டுபிடிப்பை உருவாக்கினார்.இந்த யோசனை உதித்த தருணம் ஒரு நாள் மதிய நேரம், ஆஸ்தாவும் அவரது தாத்தாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் இருந்த மேஜையில் மாத்திரைகள் இருந்தன. அந்த வேளை சாப்பிடவேண்டிய மாத்திரையை எடுத்துக்கொண்டாரா என்று தாத்தாவிடம் கேட்டார். அப்போது அவர் மறந்துவிட்டேன் என்றார்.

அந்தத் தருணத்தில்தான் இந்தக் கண்டு பிடிப்பு பற்றிய சிந்தனை அவருக்கு உதித்துள்ளது. அந்தந்த வேளைக்கு மருந்து எடுத்துக்கொள்ள நினைவுப்படுத்தும் பிரேஸ்லெட் ஒன்றை வடிவமைக்கத் திட்டமிட்டார். சுலபமாக கையில் அணிந்துகொள்ளும் வகையிலும் பயன்படுத்துவது மிகவும் எளிதாக இருக்கும் வகையில் பிரேஸ்லெட் ஒன்றை உருவாக்க விரும்பினார். அதற்கான வேலைகளையும் தொடங்கினார். 2020ம் ஆண்டு இதற்கான பல முன்வடிவங்களையும் உருவாக்கினார். இறுதியாக அவர் எதிர்பார்த்த விதத்தில் தயாரிப்பு உருவாக்கப்பட்டது.

ஆஸ்தா உருவாக்கியுள்ள பிரேஸ்லெட்டைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. காலையில் மாத்திரையை எடுத்து பிரேஸ்லெட்டில் வைத்துவிட்டு அதை அணிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகு மருந்து எடுத்துக்கொள்ளவேண்டிய நேரம் வந்ததும் இந்த பிரேஸ்லெட் அதை அணிந்திருப்பவர்களுக்கு நினைவூட்டும். முதியவர்களைக் கருத்தில் கொண்டே இந்த கருவியை வடிவமைத்துள்ளார்ஆஸ்தா. காரணம் மற்ற வயதினர் போல் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட மற்ற சாதனங்களைப் பயன்படுத்துவதில் முதியவர்களுக்குத் தயக்கம் இருக்கும். மேலும் கையாளுவதும் சிரமமாக இருக்கும். இதனால் அவர்களின் முக்கியப் பிரச்னைகளுக்கு மட்டுமே தீர்வாக இருக்கக்கூடிய ஒரு எளிய தயாரிப்பை வழங்க விரும்பி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

முதியவர்களுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது என்றாலும் அனைத்து வயதினரும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறார் இளம்கண்டுபிடிப்பாளர் ஆஸ்தா.மும்பை மற்றும் அகமதாபாத்தில் நிறுவனங்களை தொடங்கி பிரேஸ்லெட் வடிவிலான மருந்து வைக்கும் கருவி தயாரிக்கப்பட்டது.அடுத்தடுத்த கட்டமாக வளர்ச்சியடையும் நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் தயாரிப்புப் பணிகளைத் தொடங்க ஆஸ்தா திட்டமிட்டுள்ளார். தனித்துவமான இந்தத் தயாரிப்பு நிச்சயம் பலருக்குப் பலனளிக்கும் என்று திடமாக நம்புகிறார் ஆஸ்தா. குடும்பத்தினர் தன்னை ஊக்கப்படுத்தியதால் தான் இந்த கண்டுபிடிப்பு சாத்தியமானது என்றும், புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்கும் சூழல் தனக்கு கிடைத்தது அதிர்ஷ்டம் என்கிறார் ஆஸ்தா. மேலும் என்னுடைய பல மணி நேர உழைப்புதான் கண்டுபிடிப்பாக உருவாகியுள்ளது என்கிறார் ஆஸ்தா.தொழில் செய்யக்கூடிய பின்னணி கொண்ட குடும்பம் என்பதால் தொழில் முயற்சிக்கான ஊக்கமும் உந்துதலும் ஆஸ்தாவிற்கு எளிதாகக் கிடைத்தது. மனதில் தோன்றும் யோசனைகளை வீட்டில் இருக்கும் பெரியவர்
களிடம் தயக்கம் இல்லாமல் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது என்கிறார் ஆஸ்தா.

12 வயதே ஆன ஆஸ்தா நேரத்தை முறையாகத் திட்டமிட்டு, பயனுள்ள வகையில் பயன்படுத்தி படிப்பிலும் கவனம் செலுத்தி சிறந்த முறையில் படித்தும் வருகிறார். அது மட்டுமல்ல, இளம்தொழில்முனைவோராக உருவாகி சாதித்தும் உள்ளார். எதிர்காலத்தில் அறிவியல் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து உருவாக்கி, அதை வணிக வாய்ப்பாக மாற்றவும் திட்டமிட்டு வருகிறார் சாதனைப் பெண் ஆஸ்தா. இவரைப் போல ஒவ்வொரு மணித்துளியையும் பயனுள்ளதாக்கி முன்னேற முடியும் என்று நம்புங்கள், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. பொழுதைப் போக்குபவராக இல்லாமல் பொழுதை ஆக்குபவராக மாறுங்கள்.
பேராசிரியர்,
அ. முகமது அப்துல்காதர்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு