விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் ரைபாகினா: விலகினார் மர்ரே

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா தகுதி பெற்றார். முதல் சுற்றில் ருமேனியாவின் எலனா கேப்ரியலா ரூஸ் (26 வயது, 152வது ரேங்க்) உடன் நேற்று மோதிய ரைபாகினா (25 வயது, 4வது ரேங்க்) 6-3, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 11 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு முதல் சுற்றில் ஸ்பெயினின் பவுசாஸ் மனீரோவை (21 வயது, 83வது ரேங்க்) எதிர்கொண்ட செக் குடியரசு நட்சத்திர வீராங்கனை மார்கெடா வோண்ட்ருசோவா (25 வயது, 6வது ரேங்க்) 4-6, 2-6 என்ற நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

முன்னணி வீராங்கனைகள் ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா), லாரா சீஜ்மண்ட் (ஜெர்மனி), ஜின்யு வாங் (சீனா), ஹேரியட் டார்ட் (இங்கிலாந்து) ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்க இருந்த உள்ளூர் நட்சத்திரம் ஆண்டி மர்ரே (37 வயது, 113வது ரேங்க்) கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 10 நாட்களுக்கு முன் முதுகுப் பகுதி காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில், முழு உடல்தகுதி இல்லாததால் அவர் விலகினார். கடைசி முறையாக மர்ரே விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் விளையாடுவதைக் காண ஆவலுடன் காத்திருந்த அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். எனினும், சில தினங்களில் நடைபெற உள்ள இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் அவர் தனது சகோதரர் ஜேமி மர்ரேவுடன் இணைந்து களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

தங்கம் சவரனுக்கு ₹520 உயர்வு: மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை