விம்பிள்டன் டென்னிஸ் இன்று தொடக்கம்

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. புல் தரை மைதானங்களில் நடக்கும் உலகின் மிகப் பழமையான, பாரம்பரியம் மிக்க டென்னிஸ் தொடரான இப்போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்), செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச், யானிக் சின்னர் (இத்தாலி), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), டேனியல் மெட்வதேவ் (ரஷ்யா) உள்பட முன்னணி வீரர்கள் பட்டம் வெல்லும் கனவுடன் களமிறங்குகின்றனர்.

இத்தொடரில் 7 முறை சாம்பியனான ஜோகோவிச், பிரெஞ்ச் ஓபன் 4வது சுற்றில் விளையாடியபோது ஏற்பட்ட முழங்கால் மூட்டு காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். போதிய பயிற்சி இல்லாமல் களமிறங்கும் அவர் மீண்டும் சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  2019ல் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஷ்வரன் பிரதான சுற்றில் விளையாடிய நிலையில், 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மற்றொரு இந்திய வீரர் சுமித் நாகல் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்க உள்ளார்.

அவர் இரட்டையர் பிரிவில் செர்பியாவின் துசான் லஜோவிச்சுடன் இணைந்து விளையாட உள்ளார். ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டன் (ஆஸி.), ஸ்ரீராம் பாலாஜி – லூக் ஜான்சன் (பிரிட்டன்), யுகி பாம்ப்ரி – அல்பனோ ஆலிவெட்டி (பிரான்ஸ்) ஜோடிகளும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் களமிறங்குகின்றன.

மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் மார்கெடா வோண்ட்ருசோவா (செக்.), நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து), கோகோ காஃப் (அமெரிக்கா), அரினா சபலெங்கா (பெலாரஸ்), எலனா ரைபாகினா (கஜகஸ்தான்), மரியா சாக்கரி (கிரீஸ்), ஆன்ஸ் ஜெபர் (துனிசியா), நவோமி ஒசாகா (ஜப்பான்) ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தொடருக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.533.65 கோடியாகும். இது கடந்த ஆண்டை விட 11.9 சதவீதம் அதிகம். ஒற்றையர் பிரிவு சாம்பியன்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.28.5 கோடி வழங்கப்பட உள்ளது. நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட்ஸ்டார்.

Related posts

சர்வதேச டி20 போட்டியில் இருந்து கோஹ்லியை தொடர்ந்து கேப்டன் ரோகித், ஜடேஜா ஓய்வு

ஸ்நேஹ் ராணா 8 விக்கெட் வீழ்த்தினார்: ஃபாலோ ஆன் பெற்றது தென் ஆப்ரிக்கா

சொல்லிட்டாங்க…