தேனிக்காரரை சேர்ப்பதற்கு தடை போடும் அந்த ரெண்டு பேரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பலாப்பழக்காரர் விஷயத்துல நிர்வாகிகளுக்குள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ற நிலையால் தென் மாவட்ட இலைக்கட்சியில சலசலப்பு ஏற்பட்டிருக்கிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி ஒருங்கிணைப்பாளராக பலாப்பழக்காரர் இருந்தபோது, ஹனீபீ மாவட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் சிலர் கோலோச்சி இருந்தாங்க… அவரை கட்சியிலிருந்து நீக்கிய பிறகு பவர் இழந்து படுமோசமான நிலைக்கு சென்றுவிட்டாங்க.. நடந்து முடிந்த எம்.பி. தேர்தலின்போது, ஹனீபி தொகுதியில் போட்டியிட்ட குக்கர்காரரை ஆதரித்து பிரசாரம் செய்த தாமரையின் மாநில தலைவர், தேர்தல் முடிந்த பிறகு, இலைக்கட்சி பலாப்பழக்காரரிடம் சேர்ந்து விடும் என்றார். இதை எதிர்பார்த்து பலாப்பழக்காரரின் ஆதரவாளர்களும் இருந்தாங்க.. தற்போது, சேலத்துக்காரரின் தீவிர ஆதரவாளர்கள் 6 பேர், பலாப்பழக்காரர் மற்றும் சின்ன மம்மியை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்னு போர்க்கொடி தூக்கியுள்ளனராம்.. எப்படியும், ‘பலாப்பழக்காரர் விரைவில் இலைக்கட்சியில் இணைந்து விடுவார்.

மீண்டும் ஹனிபீ மாவட்டத்தில் எங்கள் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கும்’னு அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனராம்.. அதே நேரம், ஹனிபீ மாவட்ட இலைக்கட்சி நிர்வாகிகளோ, ‘பலாப்பழக்காரரை கட்சியில் மீண்டும் சேர்த்தால், கூண்டோடு விலகி விடுவோம்’னு எதிர்ப்பு தெரிவிக்கிறாங்களாம்.. அதே நேரம் சிலர், ‘சேர்த்தால் என்ன தப்பு? கட்சி பலமாகும்ல’ என்கின்றனராம். என்ன செய்வதுன்னு தெரியாம இலைக்கட்சி தலைமை மண்டையை பிய்த்து வருகிறதாம்.. இந்த இருதலைக்கொள்ளி எறும்பு நிலையால் தென்மாவட்ட இலைக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டிருக்கு…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காவல் நிலையத்திலேயே பல விஷயங்களை சுமுகமாக பேசி முடித்து, மிக முக்கியமான கேஸ் போடாம இருக்கும் வழியை பாலோஅப் செய்றாங்களாமே ரயில்வே காக்கிகள்…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடைக்கோடி மாவட்டத்தில் ரயில்வே காக்கிகள் ரொம்பவே உற்சாகமாக இருக்கிறார்களாம்.. போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் குறைகளை கண்டுபிடிச்சு எஸ்.பி.க்கு தகவல் கொடுக்க ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் தனித்தனி எஸ்.பி. ஏட்டுக்கள் உண்டு. ரயில்வே போலீசிலும் எஸ்.பி. ஏட்டாக இருந்தவரு, கடந்த சில மாதங்களுக்கு முன் ரிட்டையர்டு ஆகி விட்டாராம்.. அதன் பின்னர் இன்னும் எஸ்.பி. ஏட்டு போடாமலேயே இருக்கிறார்களாம்.. இதனால காவல் நிலையத்தில் என்ன நடக்குதுனு உயர் அதிகாரிகளுக்கு தெரிய வில்லையாம்.. பல விஷயங்கள், காவல் நிலையத்திலேயே பேசி சுமுகமாக முடிச்சி விடுகிறார்களாம்.. மிக முக்கியமாக கேஸ் போடாம இருக்க என்ன வழி உண்டோ, அதை பாலோ அப் செய்கிறார்களாம்.. எஸ்.பி. ஏட்டு இல்லாததால் உயர் அதிகாரிகளுக்கு எதுவும் தெரியாமல் ரகசியமாக பாதுகாத்துக்கொள்கிறார்களாம்.. ரயில் நிலையங்களுக்கு ரவுண்ட் போறதும் இல்லையாம்.. இதனால் உடனடியாக எஸ்.பி. ஏட்டு போடணும். அப்போது தான் குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி இருக்கும்னு சில காக்கிகளே கூறி வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேனிக்காரரை கட்சியில் சேர்க்கவே முடியாது என்ற சேலத்துக்காரரின் முடிவுக்கு அவரை இயக்கும் பட்டியலில் இருக்கும் ரெண்டு பேர்தான் காரணமாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நாடாளுமன்ற தேர்தலில் இலைக்கட்சி படுதோல்வி அடைந்தது குறித்து அக்கட்சியின் தலைவர் மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை அழைத்து கருத்துகளை கேட்டுட்டு வர்றாரு.. முதல்சுற்று கூட்டம் முடிந்த நிலையில் ரெண்டாம் கட்ட கூட்டத்துக்கு ரெடியாகிகிட்டு இருக்காரு.. தேனிக்காரரை கட்சியில் சேர்க்க வேண்டும்னு யாரும் பேசக்கூடாதுன்னுதான் அழைச்சிக்கிட்டு வந்தாங்களாம்.. அதேநேரத்துல, ஆறு மாஜிக்கள் சந்தித்து பேசியதில் எந்த முன்னேற்றமும் ஏற்படலயாம்.. இலைக்கட்சியில் சேர்த்து பழையது போல கேஷியர் பொறுப்பை வழங்கிடலாம்னு எண்ணம் இலைக்கட்சி தலைவருக்கு இருந்ததாம்..

அப்படி சேர்த்தால் எல்லாவற்றிலும் பங்கு கேட்பார் என அவரை இயக்கும் பட்டியலில் இருக்கும் ரெண்டுபேர் அதிகாலை ஆறு மணிக்கு உசுப்பேத்துனாங்களாம்.. அதற்கு பல உதாரணங்களையும் எடுத்துச்சொன்னாங்களாம்.. ரெண்டு எம்பி பதவி கட்சிக்கு வந்தபோது, எனக்கு ஒன்று தந்தே ஆகவேண்டும் என்பதில் விடாபிடியாக இருந்து பெற்றுக்கொண்டார். அப்போதே அவருக்கென கட்சியில் ஒரு கோஷ்டியை உருவாக்கிவிட்டாரு.. இதனால் உண்மையாக உழைத்த கட்சிக்காரர்களுக்கு எம்பி பதவி கொடுக்க முடியாமல் போயிட்டு.. மீண்டும் அவரை சேர்த்து கேஷியர் பதவி கொடுத்தால் கட்சியில் பாதியை கேட்பார். வடமாவட்டத்தை உங்களது கட்டுப்பாட்டிலும், தென் மாவட்டத்தை எனது கட்டுப்பாட்டிலும் வைத்துக்கொள்வோம் என்பார்.

அவருக்கு வேண்டியவர்கள் வெற்றி பெறவே பாடுபடுவார். உங்களது ஆதரவாளர்களுக்கு எதிராக செயல்படுவார். இதனால் கட்சி ரெண்டாக உடைந்துவிடும்’ என அவரது காதில் வேகமாக ஓதினாங்களாம்.. அதோடு வேண்டாம்னு உதறித்தள்ளிய மலராத கட்சியின் முழு ஆதரவாளராக மாறியிருக்கும் தேனிக்காரர், அவர்களுடன் கைகோர்த்துக்கொண்டு பெரும் குடைச்சல் கொடுப்பார். கட்சி நல்லா இருக்கணுமுன்னு சொல்லும் தேனிக்காரர், தேர்தலில் இலைக்கட்சிக்கு எதிராக பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்டது ஏன் என்ற கேள்வியையும் விரிவா சொன்னாங்களாம்… இதன்பிறகே இலைக்கட்சி தலைவர் சேர்க்கவே முடியாது என்கிற முடிவுக்கு வந்திருக்காராம்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘நெற்களஞ்சிய மாவட்டத்தில் தான் அசைக்க முடியாத நபரா இருக்கணும்னு திரைமறைவு வேலையில் இறங்கியவருக்கு எதிராக இலைக்கட்சியினர் போர்க்கொடி தூக்கப் போறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மனுநீதிசோழன் மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சியின் முக்கிய நிர்வாகி தற்போது நெற்களஞ்சியம் மாவட்டத்தில் தனக்கான ஆதரவை வலுப்படுத்திக் கொண்டு வருகிறாராம்.. இது அங்குள்ள இலை கட்சியின் நிர்வாகிகள் பலருக்கு பிடிக்கவில்லையாம்.. இருந்தாலும் வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருகிறார்களாம்.. நெற்களஞ்சியம் மாவட்டத்தில் இலை கட்சியில் தான் அசைக்க முடியாத நபராக இருக்க வேண்டும்னு அவர் முடிவு செய்துள்ளாராம்..இதற்காக பல்வேறு வேலைகளை திரைமறைவில் செய்து வருகிறாராம்.. இந்த தகவலை இலை கட்சியின் நிர்வாகிகள் சிலர் தலைமைக்கு எடுத்து சென்றார்களாம்.. ஆனால், தலைமையும் பெரிதாக கண்டுகொள்ளவில்லையாம்.. மனுநீதி சோழன் மாவட்டம் மற்றும் நெற்களஞ்சியம் ஆகிய இரு மாவட்டங்களும் அவருடைய கட்டுப்பாட்டில் சென்றால், நம் நிலைமை என்னவாகும் என இலை கட்சியின் நிர்வாகிகள் புலம்பி தவித்து வருகிறார்களாம்.. இதனால் அந்த முக்கிய நிர்வாகிக்கு எதிராக விரைவில் அவர்கள் போர்க்கொடி தூக்க போறாங்களாம்..’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

அமெரிக்கா சென்றுள்ள முதல்வருக்கு ஓபிஎஸ் வாழ்த்து

பாலியல் தொழில் தலைவியுடன் தொடர்பு ; டிஎஸ்பி சஸ்பெண்ட்: வாட்ஸ்அப்பில் அழகிகளின் படங்கள் சிக்கியது

வெம்பக்கோட்டை அகழாய்வில் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு