நடைபயணத்தில் மாயமாகும் பொருட்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா


‘‘இலைகட்சி வேட்பாளர் யாருப்பானு ரத்தத்தின் ரத்தங்களே ஆதங்கமா கேட்குறாங்களாமே…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர் நாடாளுமன்ற தொகுதியில போனமுறை நடந்த எலக் ஷன்ல, இலைக்கட்சி கூட்டணியில 3 எழுத்துக்காரர் போட்டியிட்டு தோல்வியடைஞ்சாரு. வர்ற நாடாளுமன்ற எலக்‌ஷன்ல வெயிலூர் தொகுதியில, இலை, தாமரை கட்சி கூட்டணியில 3 எழுத்துக்காரர் போட்டியிட தயாராகி அதற்கான முன்னேற்பாடுகளாக, மக்கள் பணிகளை செய்ய களமிறங்கினாரு. இந்நிலையிலதான், இலைக்கட்சிக்கும், தாமரை கட்சிக்குமான கூட்டணி உறவு முறிஞ்சது.

இதுல 3 எழுத்துக்காரர் தாமரை பக்கமே இருக்காரு. இதனால் இலை கட்சி சார்பில் இதுவரைக்கும் வெயிலூர் தொகுதியில போட்டியிடுவதற்கு, தொகுதிக்கு பரிட்சயமான நபர் யாருமே இல்லையாம். லிஸ்ட் போட்டு பார்த்ததுலயும், முக்கிய நிர்வாகிங்க யாருமே இல்லையாம். நாடாளுமன்ற தொகுதியில இருக்குற 6 சட்டமன்ற தொகுதிக்கு சேர்த்து செலவு செய்ற அளவுக்கு நிர்வாகிங்க யாரும் இல்லையாம். இதனால் வெயிலூர் தொகுதியில இலைக்கட்சி வேட்பாளர் யார் என்று தொண்டர்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நடைபயணத்தில் செல்போன், பர்ஸ், தங்கச்சங்கிலி எல்லாம் லவட்டி விட்டார்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘பூட்டு மாவட்ட தலைநகரில் சமீபத்தில் தாமரைக்கட்சியின் மவுண்டைன் நடைபயணம் மேற்கொண்டார். இரவில் நடந்து சென்றதால், இவரின் முகத்தில் மட்டும் மின்விளக்கு ஒளிரும்படி முன்புறமாக ஒரு வாகனம் சென்றது. இவருக்கு பின்னால் கட்சியினருடன், அமைப்பினரும் என நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் இருட்டில் தடுமாறியபடியே சிரமத்துடன் நடந்து சென்றனர். கூட்ட நெரிசல், இரவு நேரத்தை பயன்படுத்தி சிலர், தாமரை தொண்டர்களின் செல்போன்கள், பர்ஸ்கள் துவங்கி கழுத்து தங்கச்சங்கிலி வரை லவட்டிக் கொண்டு சென்று விட்டனராம்.

பொருட்கள் திருடப்பட்டதை உணராத தொண்டர்கள், பயணம் முடிந்த பிறகே நகை, பணம், செல்போன் மாயமாகி இருந்ததைக் கண்டு அதிர்ந்து போயிருக்கின்றனர். இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுக்க பாதிக்கப்பட்டவர்கள் செல்ல முயன்றபோது, அக்கட்சியின் மாவட்ட தலைமையானவர், கட்சிக்குத்தான் அவப்பெயர். யாரும் செல்லாதீர்கள் என கறாராக தடுத்து நிறுத்தி விட்டாராம். ‘தொலைந்த பொருட்களுக்கு நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை. போலீசிலும் புகார் கொடுக்க விடுவதில்லை.. இது என்னய்யா கொடுமை’ என்றபடி புலம்பித்தவித்த தாமரை தொண்டர்கள், அடுத்தடுத்த கூட்டங்கள், பயணங்களுக்கு போக வேண்டாம்… அப்படியே போனாலும் பர்ஸ் முதல் செல்போன், நகை வரையிலும் வீட்டிலேயே வைத்து பூட்டி விட்டே போவதென்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேட்பாளர்களை தேடி அலையுதாமே தாமரை தலைமை..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், புதுச்சேரி தொகுதியில் தாமரை போட்டியிட விரும்புகிறது. இதற்காக வேட்பாளர்களை தேடி கட்சி தலைமை அலைந்து கொண்டிருக்கிறது. ஒரு சிலர் போட்டியிட ஆசைப்பட்டாலும், தாமரை தலைமையோ, வேட்பாளர்கள் தேர்வு மீது அதிருப்தியடைந்துள்ளதாம். ஏற்கனவே தென்னிந்திய மாநிலங்களில் பாஜ முழுமையாக ஆட்டம் கண்டுள்ளது. இதனால் வரும் தேர்தலில் புதுச்சேரி தொகுதியை எப்படியாவது, கைப்பற்ற வேண்டுமென துடிக்கிறது. கட்சியின் சீனியர், ஜூனியர் முதல் எல்லோரும் கோரசாக புல்லட்சாமியின் மருமகன் சிவமானவர்தான் சரியான தேர்வு என கூறிவிட்டார்களாம்.

பெரும்பான்மை சமூகம், எல்லோருக்கும் பரிட்சையமான முகம் என்பதால் வெற்றி உறுதி என கூறியிருக்கிறார்களாம். இதனை வைத்து கட்சி தலைமை சிவமானவரை அழைத்து பேசினார்களாம். எனக்கு மாநில அரசியலில்தான் விருப்பம், தற்போது என்னை வேட்பாளராக அறிவித்தால், புதுச்சேரியில் கட்சிக்கு ஏற்படும் பாதிப்புகள். அமைச்சரவை மாற்றத்தில் ஏற்படும் குழப்பம், இடைத்தேர்தல் என அடுத்தடுத்த சிக்கல்களை எடுத்துக்கூறியிருக்கிறாராம். இதனை கேட்டுக்கொண்ட தாமரை தலைமை, அப்படியானால் வேட்பாளரை நீங்களே தேர்வு செய்து கொடுங்கள் என கூறிவிட்டதாம்.ப விட்டமின் நிறைந்த 3 பேரை தேர்வு செய்து வைத்துள்ள சிவமானவரு, கட்சியின் ஒப்புதலை பெற டெல்லி சென்றிருக்கிறாராம். ஒப்புதல் கிடைத்துவிட்டால் தாமரை அடுத்த தேர்தல் பணியை துவங்க இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காக்கி துறையில் கறுப்பு ஆடுகளை களை எடுக்கும் வேலை நடக்கப் போகுதாமே..’’ என கேட்டார் பீட்டர் மாமா.‘‘தமிழக அரசில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் ஓரளவு முடிந்து விட்டதாம். இனி பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காதாம். இந்த மாற்றங்களுக்குப் பிறகு அரசின் சக்கரம் முறையாக சுழல ஆரம்பித்து விட்டதாம். இதனால் கடந்த சில மாதங்களாக அரசு வளர்ச்சிப் பாதையை நோக்கி நடைபோட்டு வருகிறதாம். போலீசைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்குக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ரவுடிகள் வேட்டையாடப்பட்டு வருகிறார்கள்.

இதனால் கூலிப்டையினர் மூலம் நடைபெறும் கொலைகள் முற்றிலும் நின்று விட்டது என்கின்றனர். தமிழக போலீசார் கடந்த 10 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள வழக்குகளை எல்லாம் தோண்டி எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இதற்காக பழைய வழக்குகளின் தற்போதைய நிலையை எடுத்து, அதற்கென தனி தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாம்.  அதோடு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கும் பணிகளும் தீவிரமாகியுள்ளது. இனி, சிபிசிஐடி, லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள சில கறுப்பு ஆடுகளை களை எடுக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்’’ என்றார் விக்கியானந்தா

 

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்