பலாப்பழக்காரரின் ரகசிய ஆலோசனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா


‘‘தேர்தலில் போட்டி மோடியா, ராகுலா என்பதால்தான் இலைக்கட்சி புறந்தள்ளப்பட்டு விட்டதுன்னு சமாளித்தாங்களாமே இலைக்கட்சி நிர்வாகிங்க..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சி அடுத்தடுத்து தேர்தல்களில் தொடர் தோல்வியை தழுவி வரும் நிலையில் கட்சி மேலிடம் தொகுதிதோறும் விசாரணையை தொடங்கி இருக்காம்.. அந்தவகையில் கடைகோடி மாவட்டத்தில் மக்களவை தேர்தலில் மிக குறைந்த வாக்குகளை மட்டுமே பெற்றிருந்ததால் ஏன் இவ்வாறு நடந்ததுனு இலை கட்சி தலைமை விசாரணையை நடத்தி முடித்துள்ளது. அந்த வகையில் திருப்பதி கடவுளின் பெயரை கொண்ட மாஜியை அனுப்பி விசாரித்து வர கூறியுள்ளது.. அவரும் தலைவர்களை அழைத்து விசாரணையை நடத்தி முடித்தாராம்.. மக்களவைக்கு மட்டுமின்றி, சட்டமன்றத்திற்கும் நடந்த தேர்தலில் இவ்வளவு வாக்குகள் குறைய காரணம் என்ன என்று நிர்வாகிகளை கேட்டாராம்.. அப்போது உள்ளூர் தலைவர்கள் ‘போட்டி என்பது மோடியா, ராகுலா?’ என்று இருந்தது, அதனால் நாம் புறம் தள்ளப்பட்டுட்டோம்’ என்று கூறினார்களாம்.. சரி, சரி தொடர்ந்து 2026 தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள், மனமாச்சரியங்களை விட்டுவிட்டு தேர்தல் பணியாற்றுங்கள்னு அட்வைஸ் கூறிவிட்டு புறப்பட்டு சென்றாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வெயிலூர் தாமரை பார்ட்டிகளுக்குள்ளும் கோஷ்டி பூசல் கடுமையாக தலைவிரித்தாடுதாமே..’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நாடாளும் மன்றத்தோட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குறதுக்கு முன்னாடியே ஸ்டேட்ல மட்டுமில்லாம, டிஸ்ட்ரிக்லயும் தாமரை பார்டிகளிடையே கோஷ்டி பூசல் இருந்துச்சு.. ப வைட்டமின் பட்டுவாடா செய்றதுல இந்த பூசல் ஏற்பட்டு அடிதடி வரைக்கும் போச்சாம்.. இதுல குறிப்பாக வெயிலூர் மாவட்டத்துல பட்டு என்று முடியுற தாலுகாவுல, இந்த பட்டுவாடா விஷயத்துல ஏற்பட்ட தகராறுல, ஒன்றியத்தை முழுவதுமாகவே கலைச்சிட்டாங்க.. ஆனா, அது அத்தோட முடியவே இல்லையாம்.. இப்ப, மாவட்ட நிர்வாகிகளுக்குள்ளும், மாநகர நிர்வாகிகளுக்குள்ளும் பனிப்போரே நடந்து வருதாம்..

வெயிலூர் மாவட்டத்துல பொறுப்புல இருக்குறவங்க, ஆரம்ப கால நிர்வாகிகளை கண்டுகொள்வதே இல்லையாம்.. இதனால மாவட்டம், மாநகர, நகர, ஒன்றிய அளவிலான தாமரை பார்ட்டிகளுக்குள் கோஷ்டி பூசல் தலைவிரித்தாடுதாம்.. சமீபத்துல தாமரை பார்ட்டி தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றபோதும், நடந்த கொண்டாட்டங்கள் தனி தனியாக நடந்துச்சாம்.. இனிதான் கோஷ்டி பூசல் வேகமா வெடிக்கும்னு கட்சிக்குள்ளவே பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேசிய அரசியலில் கால் பதிக்க சுயேச்சையா போட்டியிட்டு அமைச்சராகிடலாம் என்ற கனவு பலிக்காததால் பலாப்பழக்காரர் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறாராமே..’’ என அடுத்த கேள்விக்கு போனார் பீட்டர் மாமா.

‘‘ஹனிபீ மாவட்டத்தில் பிக் பாண்ட் நகரில் பிறந்து வளர்ந்தவர் பலாப்பழக்காரர். இவர் இலைக்கட்சி சார்பில் கடந்த 3 முறையாக மாவட்டத்தில் உள்ள இரண்டெழுத்து தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தொடர்ந்து வருகிறார்.. இலைக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் சேர இவர் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து போச்சு.. தேசிய அரசியலில் கால் பதிக்க நினைத்து நடந்து முடிந்த எம்பி தேர்தலில், கடலோர மாவட்டத்தில் தாமரையுடன் கூட்டணி சேர்ந்து சுயேச்சையாக போட்டியிட்டாரு.. கடலோர மாவட்ட தொகுதியில் வெற்றி பெற்று தாமரையின் ஒன்றிய அமைச்சரவையில் இடம் பிடிக்கலாம் என நினைத்தவர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவிட்டாரு.. தோல்வியை தழுவினாலும், தாமரையின் தலைமை தனக்கு ராஜ்யசபா வழங்கி அமைச்சராக்குவார்கள் என்ற ஆசையில் டெல்லிக்கு சென்று பிரதமர் பதவி ஏற்பு விழா வரை காத்திருந்தாராம்.. ஆனால் அங்கும் இவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லையாம்.. இதையடுத்து தனது தொகுதியில் முழுக்கவனத்தையும் செலுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கு.. தொகுதியில் நிலவும் அதிருப்தியை சமாளிக்க ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை செய்து வருகிறாராம் பலாப்பழக்காரர்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாஜி அமைச்சர் வைத்தியானவருக்கு எதிராக இலை கட்சியில் அணி திரளும் நிர்வாகிகளால் தயக்கத்தில் இருக்கும் சேலத்துக்காரர்பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தாமரையுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்ட தேனிக்காரர் படுதோல்வியை சந்தித்தாரு.. இதனால் அவரது ஆதரவாளர்கள் பலரும் அவரிடமிருந்து விலகி வருகிறார்களாம்… இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சேலத்துக்காரர், டெல்டா மாவட்டத்தில் செல்வாக்குடன் இருந்து வரும் தேனிக்காரர் அணியில் உள்ள நெற்களஞ்சியத்தை சேர்ந்த மாஜி அமைச்சரை தனது அணி பக்கம் இழுப்பதற்கான வேலையை அவரது டீமிடம் பிளான் போட்டு கொடுத்துள்ளாராம்..

இதற்கான வேலையில் சேலத்துக்காரர் டீம் திரைமறைவாக இறங்கியுள்ளதாம்… இந்த தகவல் இலை கட்சிக்குள்ளே கசிந்ததால் நெற்களஞ்சியம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலரும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்து இருக்காங்க… வைத்தியானவர் இலை கட்சிக்கு வந்து விட்டால் மீண்டும் டம்மியாக்கப்படுவோம்.. இதனால் வைத்தியானவர் மீண்டும் கட்சிக்கு வராத அளவுக்கு அதற்கான வேலையில் இறங்கிவிட வேண்டும்னு அவர்களுக்குள் பேசி வருகிறார்களாம்… இந்த தகவல் தெரிய வந்த சேலத்துக்கார், நிர்வாகிகளின் எதிர்ப்பை மீறி வைத்தியானவரை இலை கட்சியில் சேர்க்க தயக்கத்தில் இருந்து வர்றாராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Related posts

பள்ளிக்கூட வாசலில் வாகனத்தை நிறுத்திய தகராறு கன்னத்தில் ‘பளார்’ விட்டதில் ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு: கொலை வழக்கில் ஆங்கிலோ இந்தியன் கைது

முதல்வர் கான்வாய் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் சிறப்பு எஸ்ஐ மீது தாக்குதல் பாஜ பிரமுகர் உள்பட 5 பேர் கைது: போலீசார் நடவடிக்கை

டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி