இலை கட்சியில் ரெண்டாம் கட்ட தலைவர்களுக்குள் பிளவு ஏற்படும் நிலை வந்திருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘வடமாநில நதி பெயரை கொண்ட மாவட்டத்தில் இலைக்கட்சி யார் கட்டுப்பாட்டிலும் இல்லாததை நினைத்து தொண்டர்கள் புலம்பிக்கிட்டு இருக்கிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நடந்து முடிந்த எம்பி தேர்தலில் வடமாநில நதி பெயரைக் கொண்ட மாவட்ட தொகுதியில் வரும் 6 சட்டமன்ற தொகுதிகளில், முக்கியமான 3 தொகுதிகளில் இலைக்கட்சி வேட்பாளருக்கு 3வது இடம்தான் கிடைச்சது.. இந்த தொகுதியில் தாமரை வேட்பாளருக்கு அடுத்த இடம்தான் இலைக்கட்சி வேட்பாளருக்கு கிடைத்தது… இதற்கு இலைக்கட்சி தரப்பிற்குள் உள்ள கோஷ்டி பூசல், தேர்தலில் எதிரொலித்ததே காரணம்னு அந்தக் கட்சியினரே சொல்றாங்களாம்.. மேலும், மாஜி அமைச்சர், மாவட்ட முக்கிய பொறுப்பாளர் உள்பட மூத்த நிர்வாகிகள், தொண்டர்களை கண்டுகொள்வதில்லையாம்.. இதனால் இலைக்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வேலை பார்க்க யாரும் கிடைக்கவில்லையாம்.. இதைவிட கொடுமை என்னவென்றால், வேலை பார்க்க உத்தரவிட கூட, இங்கு யாருமே இல்லாததால் கட்சி பலவீனப்பட்ட நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கிறதாம்.. அதோட கட்சி யார் கட்டுப்பாட்டிலும் இல்லையாம்.. இதேநிலை நீடித்தால் அடுத்தடுத்து வரும் தேர்தலில் இலைக்கட்சி இருக்கும் இடமே தெரியாத நிலைதான் ஏற்படும்னு தொண்டர்கள் புலம்புறாங்களாம்… இந்த விவகாரம் சென்னையில் நடக்கவுள்ள கட்சி கூட்டத்தில் பலமாக எதிரொலிக்கும் என்ற பேச்சும் பரவலாக ஓடுகிறது…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேனிக்காரரை மீண்டும் சேர்க்க முடியாது என இலைக்கட்சி தலைவர் சொல்வது பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம் தானாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மத்தளத்துக்கு ரெண்டுபக்கம் தான் இடி. ஆனால், இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரருக்கோ நாலா பக்கமும் இடியா இருக்காம்.. அனைவரையும் ஒருங்கிணைப்பேன்னு சபதம் போட்டு தன்னந்தனியே குரல் கொடுத்து வரும் சின்ன மம்மியையும், பலாப்பழத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த தேனிக்காரரையும் கட்சியில் சேர்த்தே ஆக வேண்டும்னு குரல் வலுத்திக்கிட்டிருக்காம்.. சேலத்து தலைவருடன் இருக்கும் ரெண்டாங்கட்ட தலைவர்கள் எல்லாம் ஒருகாலத்தில் வேண்டாமுன்னு குரல் கொடுத்தவங்கதான்.. ஆனால் தொடர்ந்து கட்சி தோத்துக்கிட்டே வருது, இப்படியே போனால் கட்சி எழுந்து நிற்காமலே போயிடும் நிலை வந்தால் அதற்கு நாமும் பொறுப்பேற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்காங்களாம்.. இதனால இலைக்கட்சி தலைவரை சந்திச்சி பேசியிருக்காங்க.. கடுமையான வார்த்தையை பேசிய காளிமுத்துவைக்கூட கட்சியில் சேர்த்து மம்மி அழகு பார்த்தாங்கன்னு முன்பு நடந்ததையெல்லாம் சொல்லி சமாதானப்படுத்தி பார்த்தாங்களாம்.. ஆனால், ‘டெல்லி கட்சியுடன் விசுவாசமாயிருந்து நாலாண்டு ஆட்சியை வெற்றிகரமாக முடித்ததோடு ஈரோடு இடைத்தேர்தலில் சின்னத்தை வாங்க நான் பட்டபாடு இருக்கே’ன்னு இழுத்தாராம்.. அவங்கள சேர்த்தா தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாகத்தான் இலைக்கட்சி தலைவர் மீண்டும் சேர்க்க முடியவே முடியாதுன்னு உறுதியா சொல்லிட்டாராம்.. இதனால, விரைவில் ரெண்டாங்கட்ட தலைவர்களுக்குள் பிளவு ஏற்படும் என்ற கருத்தும் பரவலாகியிருக்கு.. இதை திசை திருப்பும் வகையில்தான் தஞ்சாவூரில் இருந்து தேனிக்காரரின் கூட்டத்தை சேர்ந்த ஏழு பேரை தன்பக்கம் இழுத்துட்டாராம்.. அந்த 7 பேரும் ஏற்கனவே கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர்களை சேர்த்துக்கொண்டு 700 பேரை சேர்த்ததா இலைக்கட்சி தலைவர் கூறிக்கிட்டிருப்பதாக தேனிக்காரரின் மாங்கனி ஆதரவாளர்களே சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பணியிட மாற்றத்தை சவால்விட்டு அரை மணி நேரத்தில் கேன்சல் செய்துட்டு மீண்டும் அதே இடத்துக்கு வந்த கில்லாடி அதிகாரியால பதிவுத்துறை அதிகாரிங்க அதிர்ச்சியில உறைந்த கதை தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல காட்டுப்பாடி தாலுகாவுல பத்திரத்தை பதியுற அலுவலகத்தில கிரிவலம் கடவுள் பெயரை கொண்டவரு பணியாற்றி வந்தாரு.. இவர 2 ஆண்டுகளுக்கு மேலாக காட்டுப்பாடி தாலுகாவுல பதிவு அலுவலரு இல்லாத நேரத்துல, பொறுப்பு அதிகாரியாக நியமிச்சாங்களாம்.. அப்போ 100க்கும் மேற்பட்ட அரசு நிலத்தை தனி நபருக்கு பதிவு செய்து கொடுத்து, பல எல்களை கறந்துவிட்டாராம்.. கடந்த ஆண்டு நடந்த தணிக்கையில, 8 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை செஞ்சது வெளிய தெரியவந்தது. இதையடுத்து கிரிவலம் கடவுள் பெயரை கொண்டவரு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து, பதிவு துறை அதிகாரிங்க நடத்திய விசாரணையில அடுத்தடுத்து பல அதிர்ச்சி சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துச்சாம்.. ஓராண்டுக்கு முன்பாக பணியில முறைகேடு கண்டுபிடிச்சு காட்டுப்பாடி அலுவலகத்தில இருந்து வேறு அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்தாங்களாம்.. இதைக்கேட்டதும் ஆவேசமான கிரிவலம் கடவுள் பெயரை கொண்டவரு, யாரைக் கேட்டு வேற அலுவலகத்திற்கு மாற்றினீங்க? என்னோட செல்வாக்கு உங்களுக்கு ெதரியாது. இன்னும் அரை மணி நேரத்தில இதே அலுவலகத்திற்கு வரேன் பாருன்னு அதிகாரியிடம் சவால் விட்டாராம்.. அதேபோல உயர் அதிகாரிங்க துணையோடு, அரை மணி நேரத்தில தன்னோட பணியிட மாற்றத்தை கேன்சல் செய்துட்டு மீண்டும் காட்டுப்பாடி பதிவு அலுவலகத்திற்கே வந்து பணியை ெதாடர்ந்தாராம்.. பதிவுத்துறை அதிகாரிங்க விசாரணையில இந்த விஷயம் தெரியவந்ததும் அதிர்ச்சியாயிட்டாங்களாம்..’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்

மதுராந்தகத்தில் பாழடைந்த கட்டிடத்தில் வட்டார கல்வி அலுவலகம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

சிறுமிக்கு பாலியல் தொல்லை