ஜெயில் துறையில் நடக்கும் பரபரப்பு சம்பவம் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘அதிகாரி ஆய்வுல மாட்டிக்கிட்டு திருடனுக்கு தேள் கொட்டுன கதையா தவிக்கிறாராமே ஊராட்சி செகரட்ரி..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல ரெண்டு எழுத்து இன்ஷியல் கொண்ட குப்பம்னு முடியும் ஒன்றியத்துல, ஊரக வளர்ச்சியோட மாவட்ட அதிகாரி கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஆய்வுக்கு சென்றிருக்காரு.. அப்போ அந்த ஒன்றியத்துல இருக்குற 39 ஊர் ஆட்சிகளோட கோப்புகளை பார்த்திருக்காங்க.. அதுல மேல்னு தொடங்குற ஊர் ஆட்சியோட பைல்ஸ்களை பார்த்தபோது, முறையாக கணக்குகளை பராமரிக்காம இருக்குறதை கண்டுபிடிச்சி, சம்பந்தப்பட்ட செகரட்ரிக்கு டோஸ்விட்டு, அந்த பைல்களையும் கையோட கொண்டுபோயிட்டாராம்.. அந்த ஊர் ஆட்சிக்கு பெண் தலைவரு, ஆனா அவங்க வீட்டுக்காரர் தான் எல்லாமுமாய் செயல்படுவாராம்.. கணக்கு பராமரிக்காததுக்கும் அவர் வீட்டுக்காரரும் காரணம்னு சொல்றாங்க.. இப்போ அந்த பைல்களை மீட்க செகரட்ரியும், பெண் தலைவரோட வீட்டுக்காரரும் மாவட்ட அதிகாரி ஆபீசுக்கும், வட்டார ஆபீசுக்கும் நடையா நடக்குறாங்களாம்.. இதற்கிடையில மாவட்ட அதிகாரி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிட்டாராம்.. இதனால திருடனுக்கு தேள் கொட்டுன கதையா முழிக்குறாங்களாம் ரெண்டுபேருமே…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சி தலைவரை உளவியல் ரீதியாக முடக்கியது ரெண்டாங்கட்ட தலைவர்கள்தான் குற்றஞ்சாட்டுறாங்களாமே ரத்தத்தின் ரத்தங்கள்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரர் கடந்த நாற்பத்தைந்து நாளா மிகுந்த சோகத்தில் இருக்காராம்.. தேர்தல் தோல்விக்கு பிறகு, எடுத்த சபதம் முடிப்பேன் தயங்காதேன்னு கட்சிக்காரங்களுக்கு பதவி வழங்கப்படும் என உற்சாகமா வாக்குறுதி கொடுத்தாராம்.. இதையடுத்து ரெண்டு தொகுதிக்கு ஒரு மா.செயலாளர் பதவியை உருவாக்க திட்டமிட்டதுடன், கட்சி தேர்தலையும் நடத்தி உழைப்போருக்கு பதவி வழங்க திட்டம் போட்டிருக்காரு.. இதை தெரிந்துகொண்ட பழம் தின்னு கொட்டைப்போட்ட மூத்த ரெண்டாங்கட்ட தலைவர்கள் ஷாக்காயிட்டாங்களாம்.. மம்மி மறைவுக்கு பிறகு அந்தந்த மாவட்டத்திற்கு குறுநில மன்னராக இருக்கோம்.. ஆனால் ரெண்டு தொகுதிக்கு ஒரு மா.செ. பதவி போட்டால் நம்முடைய பவர் என்னாவதுன்னு அதிர்ச்சியடைந்ததோடு மட்டுமல்லாமல், இதற்கு உளவியல் ரீதியாக சரியான பதிலடி கொடுக்கணும், இதன்பிறகு நம்மை கேட்காமல் இலைக்கட்சி தலைவர் எந்த முடிவையும் எடுக்க கூடாதுன்னு முடிவு செஞ்சி, தேனிக்காரரை கட்சியில் சேர்க்கணும், மலராத கட்சியோட கூட்டணி வைக்கணும் என்ற அஸ்திரத்தை கையில் எடுத்தாங்களாம்.. இதனை கொஞ்சமும் எதிர்பாராத இலைக்கட்சி தலைவர் நிலைகுலைந்து போனாராம்.. கட்சிக்காக உழைப்போர், தன்னை நம்பி தேர்தலில் பல கோடிகளை இழந்தவர்களுக்கு பதில் சொல்ல முடியாத தவிப்புக்கு ஆளாகி போனாராம்.. கட்சி பிரச்னைகளை சொல்வோரிடம் சமாதானம் சொல்லி அனுப்புறாராம் இலைக்கட்சி தலைவர். கட்சியை எழுச்சியுடன் வைத்திருக்க வேண்டும்னு நினைத்த இலைகட்சி தலைவரை, அவர்கள் நினைத்தது போலவே நிலைகுலைய வைத்ததோடு செயல்பட விடாமல் ரெண்டாங்கட்ட தலைவர்கள் ஆக்கிவிட்டதாக இலைக்கட்சி தலைவரின் நெருங்கிய ரத்தத்தின் ரத்தங்கள் வருத்தத்தில் இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாஜி அமைச்சர் வைத்தியானவரை மீண்டும் இலை கட்சியில் சேர்க்க நெற்களஞ்சியத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அடுத்தாண்டு இறுதிக்குள் இலை கட்சியில் ஒற்றுமை ஏற்படும் என ெநற்களஞ்சிய மாவட்ட மாஜி அமைச்சரான தேனிக்காரர் அணியை சேர்ந்த வைத்தியானவர் தெரிவித்தார். திடீரென இலை கட்சியில் ஒற்றுமை ஏற்படும்னு வைத்தியானவர் வெளிப்படையாக தெரிவித்தது டெல்டா மாவட்டத்தில் இலை கட்சி முக்கிய நிர்வாகிகள் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாம்… இதனால் நெற்களஞ்சியத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், வைத்தியானவரை மீண்டும் கட்சியில் சேர்க்க கூடாது என்பதில் ரொம்பவும் கவனமாக இருக்கிறாங்களாம்.. தொடர்ந்து அவரை சேர்த்தால், ஒட்டு மொத்தமாக நாங்கள் வெளியேறி விடுவோம்னு தலைமைக்கு முக்கிய நிர்வாகிகள் தெரிவித்து விட்டார்களாம்… இதை கேட்ட சேலத்துக்காரர் அமைதியாக இருங்கள், அப்படி எதுவும் நடக்காதுனு அவர்களிடம் உறுதியளித்துள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா..

‘‘ஜெயில் விவகாரத்தில் ஒரு கோஷ்டியின் கை இருக்காமே..’’ என்றார் பீட்டர மாமா.
‘‘வெயிலூர் சென்ட்ரல் ஜெயிலில் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரம் ரொம்பவே பரபரப்பாகிகிட்டு இருக்காம்.. கொலை வழக்கில் தண்டனை பெற்ற அந்த கைதி ஒன்பது ஆண்டுகளா தண்டனை அனுபவிச்சிக்கிட்டு வர்றாராம்.. நன்னடத்தை உள்ள கைதிகளை சிறையின் வெளிப்புற வேலைக்கு அழைச்சிட்டு போவாங்க.. ரொம்ப நல்ல கைதியா இருந்தா வீட்டு வேலையை செய்ய சொல்வாங்களாம்.. இப்படித்தான் இந்த கைதியும் வீட்டு வேலைக்கு போனதா சொல்றாங்க.. இந்நிலையில்தான், அதிகாரி வீட்டிலேயே பணத்தின் மீது கைவச்சிருக்காரு.. கடந்த சில மாதங்களவே இந்த விவகாரம் கொஞ்சம் கொஞ்சமா வெளியே கசிஞ்சிருக்கு.. விவகாரம் அப்புறம் நீதிமன்ற கதவை தட்டிய நிலையில், வேலூர் நீதிபதியின் அறிக்கையின் அடிப்படையில் ஜெயில் அதிகாரிகள் 14 பேர் மீது எப்ஐஆர் பதிவாகியிருக்காம்.. அதோடு மட்டுமல்லாமல் 81 நாட்கள் தனிச்சிறையிலும், 14 நாட்கள் மூடிய தனிச்சிறையிலும் அந்த கைதியை அடைத்து வைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்காம்.. இதனால சிபிசிஐடி ஆபீசர்ஸ், பாதிக்கப்பட்ட கைதியிடமும், வழக்கு பதிவு செய்யப்பட்ட அதிகாரிகளிடமும் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்காங்களாம்.. என்றாலும் இந்த விவகாரத்தில் ஒரு கோஷ்டியின் கை இருப்பதாகவும் சிறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருது.. எப்.ஐ.ஆரில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் அந்த பெண் அதிகாரிக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு சரியான நேரத்துல கிடைக்கலையாம்.. நீதிமன்ற கதவை தட்டித்தான் வாங்கினாராம்.. ஜெயில் துறையை பொறுத்தவரையில் உயர்ந்த பதவி கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாம்.. 5க்கும் மேற்பட்ட சிறைகளில் சூப்பிரண்டு பதவி காலியாகவே இருக்காம்.. தற்போதுள்ள சூழ்நிலையில் உள்ளே வந்துவிடவேண்டும்னு ஒரு கோஷ்டியினர் படுதீவிரமாக இருப்பதாகவும் சொல்றாங்க.. இதனால இந்த விவகாரம் சூடுபிடிச்சிருப்பதாகவும் வார்டன்களிடையே பேச்சு எழுந்திருக்காம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Related posts

ரெட்டியார்சத்திரம் அருகே 10  மயில்கள் விஷம் வைத்து கொலை?

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு; போர்மேன் கைது!!

காட்டுக் கோழி (Junglefowl)