ஓரங்கட்டப்பட்டவரை குழு தலைவரா போட்டதால புலம்பும் தாமரை நிர்வாகிகள் பற்றி சொல்கிறார் wiki யானந்தா


‘‘ஆறு அணி ஊர் ஆட்சியில ஆடியோ மேட்டர் ஹாட்டாக போய்கிட்டிருப்பதுபற்றி சொல்லுங்க..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டம் ஆறு அணி ஊராட்சி ஒன்றியத்துல 4 எழுத்து பெயர் கொண்ட ஊர் ஆட்சியில 3 எழுத்து பெயர் கொண்டவரு ெசக்ரட்ரியாக பணிபுரிஞ்சுட்டு வந்தாரு.. இவருமேல பல புகார்கள் போனதால, இரும்புன்னு தொடங்குற ஒரு ஊருக்கு டிரான்ஸ்பர் செஞ்சாங்களாம்.. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு பெண் துணை தலைவர்கிட்ட அந்த செக்ரட்ரி பேசுற ஆடியோ வெளியே வந்திருக்குது..
அதுல மக்களை சாலை மறியல் செய்ய சொல்லு, ஜனங்களை பலிகடா ஆக்கு, உயர் அதிகாரி எல்லாம் ஜீப் எடுத்துக்கிட்டு வந்து பேசுவாங்கன்னு சொல்றதும், ஊர் ஆட்சி நிதி 10 எல் இருக்குது, அதுல 1 எல் உனக்கு கொடுக்குறேன்னு சொல்றதும்னு இருந்துச்சு.. அதோட ஆடியோவுல காது கொடுத்து கேட்க முடியாத மாதிரியான பேச்சும் இருந்துச்சு.. இது சமூக வலைதளங்கள்லயும் பரவி பரபரப்பையும் ஏற்படுத்துச்சு.. இப்ப இந்த மேட்டர் தான் கிரிவலம் மாவட்டத்துலயே ஹாட்டா போய்கிட்டிருக்குதாம்.. துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படாம, ஏதோ சில சக்திகள் துணை நிற்குதுன்னு விஷயம் தெரிஞ்சவங்க சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வில்லங்கமான காக்கி நிலையத்தில் வில்லங்கம் பண்ணுகிறாராமே உதவி எஸ்ஐ..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் கிராமப்புற வில்லங்கமான காக்கி நிலையம் ஒன்றில் பணிபுரியும் இசையமைப்பாளர் பெயர் கொண்ட சேட்டைமிக்க உதவி எஸ்ஐ பற்றி சம்பந்தப்பட்ட துறைக்கு புகாருக்குமேல் புகார் குவிகிறதாம்… புதிதாக பதவி உயர்வு பெற்றுள்ளதால் தலைகால் புரியாமல் ஆடுகிறாராம் அந்த நபர். வியாபாரிகளிடம் கெடுபிடி, அரசியல் மிரட்டல் உள்ளிட்டவை இருப்பதால் யாரும் தன்னை அசைக்க முடியாதுனு பிதற்றும் உதவி எஸ்ஐ, நிலையமே தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறிக்கொண்டு இரவு நேரங்களில் குத்தாட்டமும் போடுகிறாராம்.. ஸ்டேஷனுக்கு வரும் புகார்களை படித்து பார்த்து தீர்க்காமல், கட்டப்பஞ்சாயத்து செய்யும் வகையில் பிரச்னையை திசைதிருப்பிவிட்டு அதன்மூலம் கிடைக்கும் ‘ப’ விட்டமினால் குளிர்காய்கிறாராம்.. விவரம் தெரிந்தவர்கள் இதை தட்டிக் கேட்டால், கஞ்சா வழக்கு பாயும்னு மிரட்டுகிறாராம்.. அடக்க உத்தரவுக்கு பணம் கேட்கும் அவலத்தால் டென்ஷன் ஆன சில சமூகநல விரும்பிகள், ஏற்கனவே இந்த நிலையத்தில் எஸ்ஐ, லஞ்சப் பணத்துடன் கையும் களவுமாக பிடிபட்டு பதவி பறிபோன நிலையை மறந்து விட்டாரோ அந்த உதவி…என்ற வார்னிங் முணுமுணுப்புதான் தற்போதைய புதுச்சேரி ஹைலெட்..’’ என்கிறார் விக்கியானந்தா.

‘‘ஓரங்கட்டப்பட்டவர் தலைமையில் குழு அமைத்ததால் ஓரங்கட்டிய நிர்வாகிகள் மண்டை காய்கின்றனராமே தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வடமாநில நதி பெயர் கொண்ட மாவட்டத்தின் மலராத கட்சியின் முன்னாள் தேசிய செயலாளருக்கு திடீர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கு.. இவருக்கு கட்சியில் எந்த பதவியும் வழங்காமல், கடந்த சில ஆண்டுகளாக தலைமையால் ஓரங்கட்டப்பட்ட நிலையில் இருந்தார். கடந்த எம்பி தேர்தலில் போட்டியிட நிச்சயம் சீட் கிடைக்காதுனு முன்னரே தெரிந்து வைத்திருந்தார். இதையடுத்து தனக்கு வாய்ப்பு தராமல் ஒதுக்கினால், வெளியே தலைகாட்ட முடியாது எனக்கருதி, எம்பி தேர்தலில் போட்டியிடப் போவதில்லைனு கூறியிருந்தார். இதனால் மாவட்ட அளவில் இவரை பெரிய அளவில் யாரும் கண்டுக்கவில்லை.. முக்கிய நிகழ்ச்சிகளுக்குக் கூட அழைப்பதில்லையாம்.. கட்சி நிகழ்வு நடப்பதாக தெரிந்தால் இவரே, அழைக்காமல் ஆஜராயிடுவாராம்.. அங்கு ஏதாவது ஏடாகூடமாக பேசி பிரச்னையை ஏற்படுத்தி விட்டு சைலண்டாக நகர்ந்துடுவார்.. இதனாலேயே மாவட்டத்தில் தாமரை கட்சிக்கு இருந்த கொஞ்ச நஞ்ச செல்வாக்கும் குழிதோண்டி புதைச்ச கதையா இருக்கு.. எதிர்பார்த்தபடியே எம்பி தேர்தலிலும் கட்சி தோற்றதால், இவர் மாவட்டம் பக்கமே தலைகாட்டாமல் தலைநகரில் தங்கியிருந்தார். இந்த சூழலில் கட்சி மாநில தலைவர் படிப்புக்காக வெளிநாடு சென்றிருப்பதால் இவர் தலைமையில் கட்சியை வழி நடத்த குழு அமைக்கப்பட்டிருக்கு.. இதனால் இவரை ஓரங்கட்டியவர்கள் மண்டை காய்கின்றனராம்… இவரை நைசாக ஒதுக்கிடலாம்னு முடிவு செஞ்சா, தலைமை வான்ட்டடா வண்டியிலே ஏத்தி விடுதே… இது எங்கே போய் முடியப்போகுதோ.. இவரு வேற மாவட்டம் பக்கம் வந்தால் போய் நிக்கணுமேனு புலம்புகின்றனர் நிர்வாகிகள்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘டெல்டாவில் இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது டென்ஷனில் இருக்காராமே சேலத்துக்காரர்’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘நெற்களஞ்சியம், மனுநீதி சோழன், கடலோரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் இலை கட்சி முக்கிய நிர்வாகிகள் இடையே பனிப்போர், கோஷ்டி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இது குறித்து தகவல்கள் சேலத்துக்காரரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாம்… விரைவில், அனைத்தும் சரியாகி விடும் என நினைத்தார். ஆனால், நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது சேலத்துக்காரருக்கு டென்ஷனை ஏற்படுத்தியுள்ளதாம். டெல்டாவில் நிலவி வரும் கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டு வருவது எப்படி என சேலத்துக்காரர் யோசனையில் தீவிரமாக இறங்கியுள்ளார். இதில், சில பேரை மாற்றினால், நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்து விடும் என அவர் நினைத்தாராம்… இதையறிந்து கொண்ட இலை கட்சி முக்கிய நிர்வாகிகள் சில பேர், கட்சியில் ‘பவர் புல்லாக’ இருக்ககூடிய நபரை அனுகியுள்ளனர். இந்த தகவல் தெரிய வந்த சேலத்துக்காரருக்கு மேலும் டென்ஷனை ஏற்படுத்தியுள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது

மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி

சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்