ஒரு எம்பி சீட்டுக்கு கடுமையாக போட்டிபோடும் மாஜி முதல்வர்கள் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘தாமரைக்கட்சியில் இணைந்தா ஒரு தொகையும், கட்சி பதவியும் உறுதின்னு சொல்லி ஆள்பிடிக்க கூட்டத்தோடு கிளம்பிட்டாராமே மாவட்ட நிர்வாகி ஒருவர்” எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மெடல் மாவட்டத்தில் வெள்ளரிக்கு பெயர் பெற்ற ஊருக்கருகே தாமரைக்கட்சியின் மாவட்ட முக்கிய நிர்வாகி வசித்து வருகிறார். வெள்ளரி நகர் பகுதிக்கான தேர்தல் பொறுப்பாளரும் இவரேதான். இவர் தனது வரம்பிற்கு உட்பட்ட இலைக்கட்சி உள்ளிட்ட மாற்றுக்கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை எல்லாம் ஒரு கூட்டத்தோடு போய் பார்த்துட்டு வர்றாராம்.. அந்த நிர்வாகிகளிடம், ‘தாமரைக்கட்சியில் மட்டும் இணையுங்கள். ஒரு தொகையுடன், கட்சிப்பதவியும் கட்டாயம். மாநில தலைமையிடம் பேசி அதை பெற்றுத் தருகிறேன் எனக் கூறுகிறாராம்.. ‘அட… இந்த டெக்னிக் நல்லாயிருக்கே’ என யோசித்த தலைமை, இப்படி மாவட்டத்தில் ஊருக்கு ஊர் ஆள் பிடிக்கும்படி கூறியுள்ளதாம்.. இதையடுத்து மெடல் மாவட்டத்தில் தாமரைக்கட்சியினர், மாற்றுக்கட்சி நிர்வாகிகளிடம் தங்கள் கட்சி பக்கம் வருமாறு பேசி வர்றாங்களாம்.. குறிப்பாக, இலைக்கட்சி நிர்வாகிகள்தான் முக்கிய டார்கெட்டாம்.. இதை அறிந்த இலைக்கட்சியினரோ புலம்பி தவித்து வர்றாங்களாம்.. நேற்றுவரை கூட்டணி எனச் சொல்லிக்கொண்டு ஓட்டியவர்கள், இப்போது கூட்டுச் சேர வா…ன்னு பேரம் பேசுகிறார்களேன்னு பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லி புலம்பி தவிக்கின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாநகராட்சி வடக்கு, கிழக்கு மண்டலங்களில் போட்டிபோட்டு கரன்சி குவிக்கிறாங்களாமே பெண் அதிகாரிங்க..”
‘‘கோவை மாநகராட்சியில் உள்ள சில அதிகாரிகள், கரன்சி குவிப்பதில் கடுமையாக மல்லுக்கட்டுறாங்களாம்.. கரன்சி வாங்காமல் எந்த கோப்புகளிலும் கையெழுத்து போடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவே இருக்கின்றனராம்.. குறிப்பா, கிழக்கு மண்டலம் மற்றும் வடக்கு மண்டலம் இந்த விஷயத்தில் உச்சத்தில் இருக்காம்.. கட்டிட வரன்முறை, கட்டிட பிளான் அப்ரூவல், சொத்து வரி, குடிநீர் வரி, காலியிட வரி போன்ற விண்ணப்பங்கள் வந்தால், அதில் குறை கண்டுபிடித்து, கரன்சி குவிப்பதில் ஒரு கை பார்த்து விடுகிறார்களாம்.. கட்டிட வரைபட அனுமதியை பொறுத்தவரை சதுர அடிக்கு ₹5,000 முதல் ₹10 ஆயிரம் வரை இலக்கு நிர்ணயிச்சு பல லட்சம் கரன்சிய தட்டி எடுக்கிறார்களாம்.. கரன்சி கைக்கு வந்தால்தான், எம்எல் புக் என்ற சொத்து வரி, காலியிட வரி உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்து விழுகிறதாம்.. இல்லையென்றால் விண்ணப்பதாரர்கள் மட்டுமின்றி, லைசென்ஸ் பில்டிங் சர்வேயர்களும் கூட அலைக்கழிக்கப்படுகின்றனராம்.. ரெண்டு மண்டல அலுவலகங்களிலும் முதன்மை பொறுப்பில் உள்ள இரு பெண் அதிகாரிகளும், வருவாய் துறையில் இருந்து இப்பணிக்கு வந்துருக்காங்க. அதனால வருவாய் குவிப்பதில் போட்டிப்போடுகின்றனர். கரன்சி கொடுக்காத எந்த கோப்புகளும் நகர்வதே இல்லையாம்.. இதுபற்றி யாரேனும் கேள்வி எழுப்பினால், ‘‘நாங்கள் மேலிடத்தில் கப்பம் கட்டிவிட்டுத்தானே இங்கு வந்துள்ளோம்.. அந்த பணத்த எல்லாம் எடுக்க வேண்டாமா..?’ என பகிரங்கமாகவே சவால் விடுகின்றனராம்.. இதனால், மாநகராட்சி கமிஷனரின் உத்தரவு காற்றில் பறப்பதுதான் மிச்சமாம்…” என்றார் விக்கியானந்தா.
‘‘காங்கிரசில் எம்பி தொகுதியை பெறுவதற்காக மாஜி முதல்வர்கள் கடும் போட்டிப்போடுறாங்களாமே’

.‘‘சின்னஞ்சிறிய மாநிலமான புதுச்சேரியில் ஒரு எம்பி சீட் மட்டுமே இருக்குது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரா முன்னாள் முதல்வரான வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு அனைத்து சமுதாய மக்கள் மத்தியிலும் எதிர்ப்பு இல்லாமல் ஆதரவு உண்டு. இவரால் புதுச்சேரிக்கு எந்த பாதிப்பும் கிடையாது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலைவர் பதவியை பிடிக்க புதுவை காங்கிரசில் கடும் கோஷ்டி பூசல் நிலவியது. முன்னாள் முதல்வர் சாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர் கந்தசாமி தலைமையில் ஒரு அணியும் தீவிரமாக களத்தில் இறங்கினாங்க.. இதனால டெல்லி வரை பிரச்னை போயிட்டு. சமரசம் செய்த டெல்லி தலைமை, இரண்டு தரப்பினருக்கும் பொதுவான சிட்டிங் எம்பியான வைத்திலிங்கத்திற்கு காங்கிரஸ் தலைவர் பதவியை கொடுத்தது. அவரோ இரு தரப்பினரையும் அனுசரித்து அரசியல் செய்துகிட்டு வர்றாரு. இதன் காரணமாக, இவருக்கு டெல்லியில் செல்வாக்கு அதிகரிச்சிருக்காம்.. இந்நிலையில் புதுவை மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் மீண்டும் எம்பி சீட்டை பெற சிட்டிங் எம்பியும், முன்னாள் முதல்வர் சாமியும் முயன்று வருகிறார்களாம்.. இதுவரை களத்தில் இல்லாத சாமி திடீரென முயற்சி செய்வது ஏன் என்றால் டெல்லியில் சிட்டிங் எம்பிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதுதானாம்.. புதுவையில் வெற்றி பெற்று சென்றால் தனது செல்வாக்கை மேலும் அதிகரிக்க உதவும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் அமைச்சராகிடலாம் என்று கணக்கு போடுகிறாராம்.. இதனால் இரண்டு மாஜி முதல்வர்களிடையே எம்பி சீட்டை பெற கடும் போட்டி நிலவுகிறதாம்..” என்றார் விக்கியானந்தா.

‘‘நெற்களஞ்சியத்துல வேட்பாளருக்கு ஆளு கிடைக்காம தேனிக்காரர் அணி தவிக்கிறதாமே…”
‘‘நெற்களஞ்சியம் மாவட்டத்துல நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேடுற வேலையில தேனிக்காரரு அணி தீவிரமா இறங்கியிருக்குதாம்.. ஆனா முக்கிய நிர்வாகிங்க போட்டிப்போட தயங்கி ஒதுங்குறாங்களாம்.. இதனால யார நிறுத்துறதுன்னு தெரியாம தேனிக்காரரு அணி தவித்து வருதாம்.. ஆனா சேலத்துக்காரரு அணிக்கு போயிட்டு திரும்ப தன்னோட அணிக்கு திரும்பியிருக்குற ஒருத்தர நிறுத்த தேனிக்காரரு முடிவு செஞ்சிருக்காராம்.. ஆனா மத்த அனைத்தையும் அவரே ‘கவனிச்சுக்கணும்ணு’ அவருகிட்ட சொன்னாங்களாம்.. இதனால அந்த நபரும் அச்சத்துலதான் இருக்காராம்.. இதனால வேற யாராவது சிக்குவாங்களான்னு தேடிக்கிட்டு இருக்காங்களாம்..” என்றார் விக்கியானந்தா.

‘‘மாணவர் விடுதியில அதிகாரிங்க ஆய்வுக்கு வந்தா 30, மத்த நேரங்கள்ல 10 கணக்கு காட்டுறாங்களாமே..” என்றார் பீட்டர் மாமா.
‘‘குயின் பேட்டை மாவட்டத்துல, ஆங்கிலத்துல மிக்சிங் பெயர் கொண்ட தாலுகா இருக்குது. இந்த தாலுகாவுல நல் ஊர் சாலையில கவர்மென்ட் மாணவர் விடுதி இயங்கி வருது. இந்த விடுதியில அதிகாரியாக 4 எழுத்து பெயர் கொண்டவரு பணியாற்றி வர்றாரு. இவரு வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் வருவாராம்.. அங்க சமையல் செய்றவரே மத்த எல்லா வேலையையும் பார்த்துக்குவாராம்.. இந்த விடுதியில 30 மாணவர்களுக்கு காலையில இருந்து இரவு வரைக்கு 3 வேளை உணவு அளிப்பதாக கணக்கு காட்டுவார்களாம்.. இரவு யாரும் தங்குறதில்லையாம்.. அதிகாரிங்க வர்றதாக தகவல் தெரிஞ்சா மட்டும், பசங்கள உடனே ரெடி பண்ணி தங்க வைப்பாங்களாம்..இது மட்டுமில்லையாம், ஒரு நாளைக்கு மதியம் மட்டும்தான் மாணவர், சமையலர் மற்றும் அவருடைய நண்பர்கள்னு 10 பேருக்கு மட்டுமே உணவு வழங்கப்படுமாம்.. ஆனா கவர்மென்ட் கணக்குல காலை, மதியம், இரவுன்னு 30 பேருக்கு உணவு வழங்குறதாக கணக்கு காட்டுறாங்களாம். வாரத்துக்கு ஒரு நாள் மட்டன் வழங்கியது போலவும் கணக்கு காட்டுறாங்களாம். அதிகாரிங்க ஆய்வுக்கு வந்தா 30, மத்த நேரங்கள்ல 10 பேர்னு கணக்கு காட்டுறாங்களாம்.. இந்த கணக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிங்க உண்மையா என விசாரிச்சு நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை எழுந்திருக்காம்..” என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

முறைகேடு புகார் காரணங்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது : உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டவட்டம்

கன்னியாகுமரி ஜீரோ பாயிண்டில் தேசிய கொடி பறப்பதை உறுதி செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

நிலஅளவை, நில ஆவணங்கள் தொடர்பான இணையவழிச் சேவைகளின் விவரம்