மனைவி, குழந்தைகள் பற்றி ஆபாச பதிவு சீமான் மீது எஸ்.பி மானநஷ்ட வழக்கு

திருச்சி: ‘சீமான், நாதக பொறுப்பாளர்கள் 2 பேர் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்’ என்று திருச்சி எஸ்பி வருண்குமார் தெரிவித்துள்ளார். திருச்சி எஸ்பி வருண்குமார் எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி எஸ்பியாக கடந்த ஒரு வருடமாக பணிபுரிகிறேன். எனது 13 ஆண்டு கால ஐபிஎஸ் வாழ்க்கையில் எல்லா ஆண்டுகளிலும் நன்மதிப்பை மட்டுமே உயர் அதிகாரிகளிடம் இருந்து பெற்றுள்ளேன்.

கடந்த 2021ம் ஆண்டு யூடியூபர் ஒருவர் ஒரு அரசியல் கட்சி பின்புலத்தோடு பொய் செய்திகளைப் பரப்பி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தினார். அப்போது, திருவள்ளூர் மாவட்ட எஸ்பியாக இருந்த நான் அந்த யூடியூபரை குண்டர் சட்டத்தில் அடைத்தேன். சமீபத்தில், அதே யூடியூபர் பதிவு செய்த சர்ச்சையான அவதூறுகளால் சைபர் கிரைம் போலீசில் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டார்.

சட்ட அடிப்படையில் பணியாற்றியதற்காக, அந்த யூடியூபர் சார்ந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் என்னைக் கடுமையாக (சில சாதி பெயர்களைக் குறிப்பிட்டு) சாடினார். அதற்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் அவதூறு நோட்டீசை எனது வழக்கறிஞர் மூலம் அனுப்பினேன். இதற்காக என்னைத் தாண்டி என் குடும்பத்தினர்கள், பெண்கள், குழந்தைகள் என என்னைச் சார்ந்தவர்கள் மீது வசைகளையும், ஆபாசமான, அவதூறான செய்திகளையும், அருவருப்பான வாக்கியங்களுடன் எக்ஸ் தளத்தில் பரப்பினர்.

அந்த கட்சியின் தூண்டுதலின் காரணத்தினாலேயே வெளிநாடுகளில் வாழும் தமிழ் தெரிந்த நபர்களுக்கு பணம் கொடுத்து ஆபாச பதிவுகளை பதிவிட உத்தரவிட்டதாக தெரியவருகிறது. நான் இந்த விஷயத்தில் அளித்த 3 புகார்களில் 3 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். நானும், எனது மனைவியுமான வந்திதா பாண்டே ஐபிஎஸ்சும் தமிழ்நாட்டில் மத்திய காவல் மண்டலத்தில் முக்கியமான திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் எஸ்பிக்களாக பணிபுரிகிறோம்.

ஒரு சராசரி குடும்ப நபராக எங்கள் மூன்று குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மீதான அக்கறைக்காக இந்த எக்ஸ் இணைய உரையாடல்களிலிருந்து தற்காலிகமாக நானும், எனது மனைவியும் விலக முடிவு செய்துள்ளோம் . இதில் ஈடுபட்ட நபர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவது உறுதி. முக்கியமாக, இந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் 2 பொறுப்பாளர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன். எந்தவித சமரசமும் இன்றி இந்த சட்ட நடவடிக்கையை மேற்கொள்வேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு