பசுவை கோமாதா என வணங்குவது ஏன்?

பசுவை கோமாதா என வணங்குவது ஏன்?
– கங்கா, தில்லி.

பசு, மக்களுக்குப் பயன்படாதவற்றை (வைக்கோல், புல், தவிடு) சாப்பிட்டுவிட்டு, மக்களுக்குப் பயன்படும் வகையில் தாய்ப்பாலுக்கு நிகரான சத்துகள் நிறைந்த பாலைத் தருகிறது. அதாவது தீது செய்தவர்க்கும் நன்மையே செய் என்ற கருத்தையும் மறைமுகமாக உணர்த்துகிறது. பசுவின் உடலில் எல்லா தேவர்களும் வசிப்பதாக ஐதீகம். எனவே, பசுவைக் கோமாதா என வணங்குகிறோம்.

அமாவாசையன்று நல்ல காரியங்களை செய்யலாம் என்று சொல்வது ஏன்? அது நிலவே இல்லாத இருட்டு நிறைந்த நாள் அல்லவா?
– வளர்மதி, கிண்டி.

அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் ஒன்று கூடும் தினம். அன்று பிதுர்தேவதைகளுக்கு நாம் தர்ப்பணம் செய்கிறோம். அவர்களுடைய ஆசிகளை நாம் வேண்டினால் அவர்களுடைய பூரணமான கிருபை நமக்குக் கிடைக்கும். ஆகையால் அமாவாசையன்று பிதுர்தேவதைகளை வேண்டிக்கொண்டு எந்த நல்ல காரியத்தைத் தொடங்கினாலும் அவர்களுடைய நல்லாசியினால் நன்மையே விளையும் என்பது நம்பிக்கை.

ஆன்மிகத்தில் அதிக கவனம் செலுத்த தங்களின் ஆலோசனை என்ன?
– ஹரி, மேலூர்.

காலையிலோ மாலையிலோ கணநேரமாவது கடவுளை நினைக்க முயலுங்கள். பிறகு இது சாப்பிட உட்காரும் நேரம். வேலை ஆரம்பிக்கும் நேரம் என்று தொடர வேண்டும். இப்படி அதிகரித்துக் கொண்டால், வளரும் கொடிக்கு கொம்பு கிடைத்ததுபோல் மனம் ‘சிக்’ என்று கடவுளைப் பற்றிக்கொள்ளும்.

உண்மையான பிரார்த்தனை என்பது எது?
– பிரபு, கன்னிவாடி.

இன்ப,துன்பங்களைக் கண்டு பயப்படாமல் அவற்றைத் தாங்கிக்கொண்டு சமாளிக்கும் சக்தியை இறைவனிடம் வேண்டுவதே உண்மையான பிரார்த்தனையாகும்.

மனத்தில் கடவுளை நினைத்தாலே போதாதா? கையெடுத்து வணங்க வேண்டுமா?
– சுமன், புட்லூர்.

எல்லோரும் கையெடுத்துக் கும்பிடும்போது ஒருவர் கும்பிடாமல் இருந்தால்
அவரிடம் இன்னும் அகந்தை ஒட்டியிருக்கிறது என்று அர்த்தம்.

பக்தி வந்து விட்டது என்பதை எப்போது அறிய முடியும்?
– அர்ஜூன், பாண்டிச்சேரி.

கடவுளின் பெயரைச் சொன்னால் எப்போது உடம்பு சிலிர்த்து, கண்ணில் நீர் பெருகுகிறதோ அப்போது பக்தி வரத் தொடங்கி விட்டது. அல்லது கடவுளின் பெயர் ஒரு காதலி பெயரைப்போல நாவில் எப்போதும் தித்திப்பை உண்டாக்குகிறதோ அப்போதும் பக்தி வந்து விட்டது என்று புரிந்துகொள்ளலாம்.

கடவுள் நமக்குள் வாழ்கிறார் என்று பெரியோர்கள் சொல்லியுள்ளார்களே அதற்கான ஆதாரம் என்ன?
– கிரி, திருச்சி.

அவர்கள் அதை உணர்ந்திருக்கிறார்கள். அதனால் கூறுகிறார்கள். உணர்தலில் பெறும் அனுபவம் அது. நீங்களும் முயன்றால் உணரலாம். நவகிரக படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா? பூஜிக்கலாமா? வணங்கலாம்; பூஜிக்கலாம்.

சுவாமிக்கு விளக்கு ஏற்றும்பொழுது நெய்தான் ஊற்ற வேண்டுமா? நல்லெண்ணெய் ஊற்றக்கூடாது என்கிறார்கள். விளக்கம் வேண்டுகிறேன்.
– மீரா கிருஷ்ணன், மேலவலம்பேட்டை.

ஒரு காலத்தில் நெய் தாராளமாகக் கிடைத்தது. ஊற்றினார்கள். பெரும்பாலான கோயில்களில் நெய்விளக்குதான். நெய்யைச் சேகரித்து வைக்க பெரிய கிடங்கே (நெய்க்கிணறு) திருவரங்கம் கோயிலில் இருக்கிறது. காலப்போக்கில் கிடைப்பதைப் பொறுத்து நல்லெண்ணெய் அல்லது பிற எண்ணெய் என்று மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இதனால் தவறு இல்லை.

தொகுப்பு: அருள்ஜோதி

Related posts

சிலர் வீடுகளில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டி இருப்பது சரிதானா?

துலாம் ராசி குழந்தை

ஜாதகத்தில் விவாகரத்தை கண்டுபிடிக்க முடியுமா?