ஐஎன்எல்டி கட்சி மாநில தலைவர் கொல்லப்பட்டது ஏன்: அரியானா பாஜக முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்

 

ஜஜ்ஜார்: அரியானாவில் ஐஎன்எல்டி கட்சியின் மாநிலத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், மாநில முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) கட்சியின் அரியானா மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான நஃபே சிங் ராட்டி, நேற்று முன் தினம் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஜஜ்ஜார் மாவட்டம் பஹதுர்கர் பகுதி அருகே மற்றொரு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் நஃபே சிங் ராட்டி மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் நஃபே சிங் ராட்டியும் அவருடன் பயணம் செய்த பாதுகாவலர் ஒருவரும் உயிரிழந்தனர். அவருடன் சென்ற துப்பாக்கி ஏந்திய 3 தனிப் பாதுகாவலர்களும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த போலீசார், நஃபே சிங் ராட்டி மற்றும் கட்சித் ெதாண்டரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை சம்பவம் நடந்து பல மணி நேரங்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் குறித்த எந்த துப்பும் போலீசாரால் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால் கொலை குற்றவாளிகளை கைது செய்ய, இரண்டு டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘நஃபே சிங் ராட்டி சென்ற கார் மீது 40 முதல் 50 ரவுண்ட் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். நஃபே சிங் ராட்டி மீது தாக்குதல் நடந்தபோது, ​​அவரது காரில் மொத்தம் 5 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. பலியான நஃபே சிங் ராட்டி, ஓட்டுனர் இருக்கையின் அருகில் அமர்ந்திருந்தார். அவரது துப்பாக்கி ஏந்தி மூன்று தனிப் பாதுகாவலர்கள், காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர். பராஹி ரயில்வே கேட்டை தாண்டி கார் சென்ற போது, அந்த காரை பின் தொடர்ந்து வந்த கும்பல் ​நஃபே சிங் ராட்டியை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது. துப்பாக்கி சூட்டில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நஃபே சிங் ராட்டி மற்றும் அவரது பாதுகாவலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை’ என்றனர்.

இச்சம்பவம் குறித்து நஃபே சிங் ராட்டியின் மகன் ஜிதேந்திர ரதி கூறுகையில், ‘எனது தந்தையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, மாநில முதல்வர் மனோகர் சிங் கட்டாரை நேரில் சந்தித்து பாதுகாப்பு கோரினோம். ஆனால் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அதனால் அவரை சுட்டுக் கொன்றுள்ளனர். எனது தந்தையின் அரசியல் எதிரிகள் தான், அவரை கொன்றிருக்க வேண்டும்’ என்றார். இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏவும், கட்சியின் தலைவருமான அபய் சவுதாலா கூறுகையில், ‘உரிய பாதுகாப்பு வழங்கத் தவறி மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ், முதல்வர் மனோகர் சிங் கட்டார் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று கோரினார்.

Related posts

ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைப்பு

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்த நிலையில் தற்போது மீண்டும் மழை