படுதோல்வி ஏன்?

கண்ணீர் துளி வடிவில் இருக்கும் இலங்கை தீவு கடந்த 2022ம் ஆண்டு அதற்குரிய அனைத்து அம்சங்களோடும் காட்சியளித்தது. கொரோனா பாதிப்பு ஒருபுறம், அதையும் தாண்டி அந்நிய செலவாணி வரத்து குறைந்து, இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை, மின்வெட்டு, உணவு பஞ்சம் என பொதுமக்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டனர். நிதி நெருக்கடிகளை எதிர்கொண்ட இலங்கை அரசு திவால் நிலைக்கு தள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இலங்கையில் வெடித்த மக்கள் புரட்சியில், ஒருகாலத்தில் யாரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்களோ, அதே ராஜபக்சேவை ஆட்சியை விட்டே விரட்டி அடித்தனர். இதை தொடர்ந்து புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியறே்றார். இந்நிலையில் இலங்கையின் 9வது அதிபருக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், இலங்கை புரட்சியின் வடுக்கள் மக்கள் மனதில் இன்னமும் ஆறவில்லை என்பது தெளிவாக தெரிய வருகிறது.

தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயக இலங்கை அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இலங்கை அதிபர் தேர்தலின் முடிவுகள் இம்முறை வியத்தகு முடிவுகளை பிரதிபலிப்பதாக உள்ளது. இலங்கை ஆட்சியில் இதுவரை பண்டார நாயகே, ராஜபக்சே என குடும்ப ஆட்சிகளே கோலேச்சிய நிலையில், அங்கு முதன்முறையாக கம்யூனிச வாசம் வீசுகிறது.

சாதாரண கூலி தொழிலாளியின் மகனாக பிறந்து இடதுசாரி அரசியலில் தன்னை இணைத்து கொண்டு, மக்கள் போராட்டத்தை முன்னெடுத்த அனுர குமார திசநாயக இன்று மக்கள் போற்றும் மாபெரும் தலைவராக உருவெடுத்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெறும் 3 சதவீத ஓட்டுக்களை பெற்ற அவர், இப்போது அதிபர் அளவுக்கு உயர்ந்திருப்பது, இலங்கை மக்களின் மனதில் புரட்சியின் விதைகள் தூவப்பட்டிருப்பதை உணர்த்துகிறது.

பஞ்சம், பட்டினி, விலைவாசி உயர்வு, பொருளாதார மீட்சி ஆகியவை இலங்கை குருவியின் தலையில் பனங்காயாக அமர்ந்தபோது, பொதுமக்களை திரட்டிக் கொண்டு புரட்சி நாயகனாக அவர் களத்தில் நின்றார். அதன் விளைவு இப்போது மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார். புரட்சியின் பின்னாளில் அதிபராக தேர்வு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கே, தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

ராஜபக்சே குடும்பத்தை அவர் பாதுகாத்தார் என்பதும், ஊழல்களில் தொடர்புடைய அரசியல் பிரமுகர்களை அவர் தன்வசம் வைத்து கொண்டதும், தேர்தல் முடிவுகளில் அவரது கட்சி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதிலிருந்து தெளிவாகியுள்ளது. அவரது படுதோல்விக்கு இதுவே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நபராக கருதப்பட்ட சஜித் பிரேமதாசா, இந்த அதிபர் தேர்தலில் தொடர்ந்து கடின போட்டியை அளித்தார். இருப்பினும் அவருக்கு இரண்டாம் இடமே கிட்டியுள்ளது.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனுர குமார திசநாயக மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சிந்தனையாளர் என்பது மட்டுமின்றி, சீனாவோடு நெருக்கம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியா – இலங்கை உறவு சவாலாக மாறலாம் என தகவல்கள் வருகின்றன. இருப்பினும் பக்கத்து தேசமான இந்தியாவை அவர் பகைத்துக் கொள்ள மாட்டார் என்பதே அரசியல் ஆர்வலர்களின் கருத்தாகும். தமிழக மீனவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகளுக்கு ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும். இலங்கையின் இப்போதைய புதிய பரிணாமத்தை உலக நாடுகள் அனைத்தும் உற்று நோக்கத் தொடங்கி விட்டன என்பதே உண்மை.

Related posts

சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க 141 இடங்களில் முன்னெச்சரிக்கை கருவி

தஞ்சை,சேலம் மினி டைடல் பூங்காகளை திறந்துவைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்ததற்கு அன்புமணி வரவேற்பு!