Monday, September 16, 2024
Home » ஏன்? எதற்கு? எப்படி?

ஏன்? எதற்கு? எப்படி?

by Nithya
Published: Last Updated on

?சிவாலயங்களின் முகப்பில் நந்தி உருவ சிலை இருப்பது ஏன்?
– பி. கனகராஜ், மதுரை.

சிவாலய தரிசன விதிகளில் முதன்மையானதும் முக்கியமானதும் எது தெரியுமா, ஆலயத்தில் நுழைவதற்கு முன்னால் நந்தியம்பெருமானை வணங்கி அவரிடம் அனுமதி பெற்றுத்தான் உள்ளே நுழையவேண்டும் என்பது தான். சிவனின் வாகனம் ரிஷபம் என்பது நாம் அறிந்ததே. அவரது வாயிற்காப்போனாகவும் சிவகணங்களின் தலைவனாகவும் நின்று சதா சர்வ காலமும் சிவபெருமானை மட்டுமே தம் சிந்தையில் கொண்டிருப்பதால்தான் எல்லா சிவாலயங்களின் முகப்பிலும் நந்தியின் சிலை காணப்படுகிறது. அவரிடம் அனுமதி பெறாமல் உள்ளே சென்று வழிபாடு செய்வதில் பலன் இல்லை.

?ஆண்கள் நீண்டநாள் வாழ பெண்கள் நோன்பு இருக்கிறார்கள். இதே போன்று பெண்கள் நீண்ட நாள் வாழ ஏதாவது வழி உண்டா?
– வண்ணை கணேசன், சென்னை.

நம்முடைய சாஸ்திர சம்பிரதாயங்களைப் பொறுத்த வரை ஆண் பெண் பேதம் என்பது எங்கும் கிடையாது. தனது கணவன் தீர்க்காயுசுடன் வாழ வேண்டும் என பெண்கள் நோன்பு மேற்கொள்ளும்போது பெண்களின் ஆயுளும் சேர்ந்துதான் நீட்டிக்கப்படுகிறது. ஒரு பெண் நன்றாக இருந்தால் மட்டும்தான் அவரது கணவரும் தீர்க்காயுளுடன் வாழ முடியும் என்பது அடிப்படை விதி. அது மட்டுமல்லாது எல்லா நோன்புகளின் சங்கல்பத்திலும் கணவன்-மனைவி இருவரின் நலனக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். பிரதானமாக கணவரின் நலனுக்காக இந்த நோன்பு என்று சொல்லப்பட்டாலும் அதற்குள் பெண்ணின் நலனும் சேர்ந்துதான் சொல்லப்பட்டிருக்கும். ‘ஆவயோகோ சககுடும்பயோகோ’ என்றுதான் மந்திரம் சொல்வார்கள். எல்லா விரதங்களும் நோன்புகளும் கணவருக்கு மட்டுமல்ல, குடும்பத்தினர் அனைவரின் நலனுக்கும் சேர்த்துத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இதுவே நமது பாரம்பரியத்தின் சிறப்பம்சம் ஆகும்.

?கோயில்களில் இருந்து வாங்கி வரும் மாலை பைக் கார்களில் மாட்டுவது சரியா?
– பொன்விழி, அன்னூர்.

இறைவனுக்கு சாற்றிய மாலைகள் நிர்மால்யம் என்ற பெயரில் அழைக்கப்படும். இந்த நிர்மால்யம் என்பது யாருடைய கால்களிலும் மிதிபடக் கூடாது. இறைவனுக்கு சாற்றப்பட்ட புஷ்பங்கள் காலில் மிதிபடக் கூடாது எனும்போது இது போன்று வாகனங்களுக்கு நிச்சயமாக மாட்டக் கூடாது. வாகனங்களுக்கு இறைவனின் அருட்பிரசாதமாக மாலையை மாட்ட வேண்டும் என நினைப்பவர்கள் தனியாக ஒரு மாலையை வாங்கிச்சென்று அர்ச்சகரிடம் இறைவனின் பாதங்களில் வைத்துத் தரும்படி கேட்பது நல்லது. அர்ச்சகர் அந்த மாலையை இறைவனின் பாதங்களில் வைக்கும்போது நீங்கள் மனமுருகி பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும். அதன்பின்பு அதனை இறைவனின் பிரசாதமாக வாங்கிச் சென்று வாகனங்களுக்கு மாட்டலாம். இந்த விதியானது வாகனங்களுக்கு மட்டுமல்ல மனிதர்கள் ஆகிய நமக்கும் சேர்த்துத்தான் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

?என் வீட்டில் இரண்டே இரண்டு படிகள் மட்டும் நுழைவு வாயிலில் உள்ளது. அப்படி இருக்கக் கூடாது என்று சொல்கிறார்களே?
– ராஜகோபால், திருச்சி.

நுழைவு வாயில் படிகள் மட்டுமல்ல, பொதுவாக படிகள் என்பது ஒற்றைப்படையில்தான் இருக்க வேண்டும். இதனை எளிதில் புரிய வைப்பதற்காக ஒரு நடைமுறையை சொல்லிக் கொடுத்திருப்பார்கள். அதாவது முதற்படியில் கால் வைக்கும்போது லாபம் என்று சொல்லித்தான் மேலே ஏற வேண்டும். லாபம் என்ற ஒன்று இருந்தால் நஷ்டம் என்ற ஒன்றும் இருக்கத்தானே செய்யும். முதலில் வலது காலை எடுத்து வைக்கும்போது லாபம் என்றும் அடுத்தபடியாக இடதுகாலை எடுத்து வைக்கும்போது அதனை நஷ்டம் என்றும் சொல்வார்கள். இரண்டு படிகளோடு அல்லது இரட்டைப்படையில் படிகள் அமையும்போது வீட்டிற்கு உள்ளே நுழையும்போது நஷ்டம் என்று வரும். ஒற்றைப்படையில் படிகள் அமையும்போது லாபத்தில் முடிவடையும். ஆக என்றென்றும் அந்த இல்லத்தில் தனலாபம் என்பது இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒற்றைப்படையில் படிகளை அமைப்பதை வழக்கத்தில் கொண்டிருக்கிறார்கள்.

?ஆலயங்களில் கும்பாபிஷேகம் எதற்காக செய்கிறார்கள்?
– ரா. செந்தில்குமார், புதுச்சேரி.

கும்பாபிஷேகத்தில் நூதனம், ஜீர்ணோத்தாரணம், புனராவர்த்தனம் என்று பல வகைகள் உண்டு. புதிதாக ஒரு ஆலயத்தை நிர்மாணித்து அதற்கு செய்யப்படுகின்ற கும்பாபிஷேகம் நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் என்று அழைக்கப்படும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படுகின்ற கும்பாபிஷேகத்திற்கு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் என்று பெயர். அஷ்டபந்தனம், ரஜத பந்தனம், ஸ்வர்ண பந்தனம் என்ற பிரிவுகளுக்கு ஏற்றவாறு கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய கால இடைவெளியானது மாறுபடும். ஏற்கெனவே உள்ள ஆலயத்தில் பராமரிப்பு பணிகளைச் செய்து ஒரு சில மாறுதல்களோடு புதுப்பித்து செய்யப்படுகின்ற கும்பாபிஷேகத்தினை புனராவர்த்தன மஹா கும்பாபிஷேகம் என்று அழைப்பார்கள்.

இவற்றில் கும்பாபிஷேகத்தினை ஏன் செய்கிறார்கள் என்பதே உங்கள் கேள்வி. அதாவது, ஒரு ஆலயத்தை நிர்மாணித்து, ஸ்வாமி சிலையை பிரதிஷ்டை செய்து அதை அப்படியே பூஜை செய்யத் துவங்கலாமே, அதனை விடுத்து கும்பங்களை வைத்து யாகசாலை பூஜை செய்து இறுதியில் அந்த கும்பத்தில் உள்ள நீரினை கோபுர கலசங்களின் மீதும், மூலவர் உள்ளிட்ட சிலைகளின் மீதும் ஊற்றி கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய காரணம் என்ன என்பதே உங்களின் சந்தேகம். தெய்வீக மூர்த்தங்களை பிரதிஷ்டை செய்வதற்கான விதிமுறைகள் வேத ஆகமங்களில் உண்டு. ஆகமவிதிகளின்படி அந்த மூர்த்தங்களுக்கு சாந்நித்யம் வந்து சேர்வதற்காக பூஜைகள் நடத்தப்படுகின்றன.

கும்பாபிஷேக பத்திரிகையில் உள்ள நிகழ்ச்சி நிரலை கவனமாகப் படித்துப் பார்த்தால் அதில் பல வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும். ம்ருத்சங்க்ரஹணம், அங்குரார்ப்பணம், கலாகர்ஷணம், கும்ப அலங்காரம், ஆவாஹனம், ப்ராண ப்ரதிஷ்டை, சிலா பிரதிஷ்டை, நாடி சந்தானம், தத்வார்ச்சனை என்று பல நிகழ்வுகளைக் குறித்திருப்பார்கள். நன்கு அலங்கரிக்கப்பட்ட குடங்களில் நீர் நிரப்பி, ஏலக்காய், லவங்கம், பச்சைக் கற்பூரம் முதலான வாசனாதி திரவியங்களை சிறிதளவு கலந்து, அதில் மாவிலையை வைத்து, அதன் உச்சியில் முழு தேங்காயை வைத்து கும்பம் என்று யாகசாலை மேடையில் வைப்பார்கள். அந்த மேடைக்கு வேதிகை என்று பெயர்.

வேதிகையில் வைக்கப்பட்டுள்ள கும்பத்தில் எந்த தேவதையை பிரதிஷ்டை செய்ய உள்ளார்களோ, அந்த தேவதைக்கு உரிய சக்தி வாய்ந்த மந்திரத்தைச் சொல்லி ஆவாஹனம் செய்வார்கள். அந்தந்த தேவதைக்கு உரிய அர்ச்சனைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து அந்த தேவதைக்கு உரிய அவிர்பாகத்தைத் தரும் விதமாக யாகங்களை நடத்துவார்கள். அவரவர் வசதிக்கு ஏற்றவாறு நான்கு, ஆறு, ஒன்பது, பதினொன்று காலங்கள் என பூஜைகளைச் செய்து இறுதியில் கும்பாபிஷேக நாள் அன்று அந்த கும்பங்களில் உள்ள நீரினை சிலைகளின் மீது ஊற்றி கும்பத்தில் ஏற்றப்பட்ட சாந்நிதியத்தினை மூர்த்தங்களுக்கு மாற்றுவார்கள். முறையாக கும்பாபிஷேகம் செய்யாமல் வெறும் சிலையை மட்டும் வைத்திருந்தால் அது வெறும் கலைப்பொருளாகவே காட்சியளிக்கும்.

அதே நேரத்தில் அந்தச் சிலையை தெய்வமாக பாவித்து அதற்குரிய பூஜைகளைச் செய்து அந்த மூர்த்தங்களின் மீது கும்பத்தில் ஆவாஹனம் செய்யப்பட்ட புனித நீரை ஊற்றும்போது தெய்வத்தின் சக்தி முழுவதும் அந்த சிலையின் மீது வந்து இறங்கும். அருகில் இருந்து இந்த காட்சியினைக் காண்பவர்கள் அந்த அழகினை அனுபவித்து உணர்ந்திருப்பார்கள். எளிதில் புரியும்படியாக ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் கற்சிலைகளுக்கு உயிரூட்டும் விதமாகவும், அந்த சிலைகளின் மீது சாந்நித்தியத்தினையும், தெய்வீக சக்தியையும் கொண்டு வந்து சேர்க்கும் விதமாகவும் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

You may also like

Leave a Comment

fourteen − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi