ஏன்? எதற்கு? எப்படி?

?குபேரர் சிலையை வீட்டிலும் கடையிலும் எங்கு வைக்கலாம்? எந்த திசையில் வைக்கவேண்டும்?
– நா.சட்டநாதன், மயிலை.

ஹேப்பிமேன் என்றழைக்கப்படும் சீனத்து பொம்மையினை குபேரர் சிலை என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று எண்ணுகிறேன். குபேரனுக்கு என்று தனியாக சிலை வழிபாடு வீட்டினில் செய்வது கிடையாது. சங்கநிதி – பதுமநிதி சமேத குபேரனுக்கு மகாலட்சுமியிடம் இருந்து தனம் வந்து சேருகின்ற வகையில் நிறைய படங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்தப் படங்களில் லட்சுமி குபேர மந்திரமும் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில படங்களில் மகாலட்சுமி யந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற படங்களை வியாபார ஸ்தலங்களில் மாட்டி வைக்கலாம். வீட்டுப் பூஜையறையிலும் வைத்து பூஜிக்கலாம். மற்றபடி சிரித்தமுகத்துடன் காணப்படும் ஹேப்பிமேன் பொம்மையினை, நீங்கள் வீட்டினில் எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அதனைக் காணும்போது மனதிற்குள் மகிழ்ச்சி உண்டாவதால், வீட்டிற்குள் இருக்கும் மாடங்களில் ஆங்காங்கே அவற்றை இடம்பெறச் செய்யலாம். குபேரனுக்கு என்று தனியாக சிலை வைத்து வீட்டினில் வழிபடும் முறை நம் வழக்கத்தில் இல்லை.

?ஆனி மாதத்தில் ஏன் புதுமனைப் புகுவிழா செய்யக்கூடாது?
– சண்முகம், கடலூர்.

புதிய வீடு கட்ட பூமி பூஜை செய்தல், புதிய வீடு வாங்குதல், பால்காய்ச்சுதல், கிரகப்பிரவேசம் என குடியிருக்கும் வீடு சார்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஆனியில் செய்வதில்லை. வாஸ்து புருஷன் இந்த மாதத்தில் நித்திரையில் இருந்து எழுவது இல்லை. பூமிக்கு அடியில் உறங்கும் வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படும் பூதத்தை தொந்தரவு செய்யக்கூடாது என்பதால் வீடு சார்ந்த நிகழ்வுகளை இந்த மாதத்தில் நடத்துவதில்லை. இதே விதி புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களுக்கும் பொருந்தும்.

?ஜோதிடத்தில் வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் என இருவித கணிப்புகள் சொல்லப்படுகின்றன. இதனால் பலன்கள் வேறுபடுமா? தயவுசெய்து விளக்கவும்.
– சு.ந.ராசன், சென்னை.

ஜாதகங்களை கணிப்பதில் பல்வேறு முறைகள் உள்ளன. நமது இந்தியாவில் வாக்ய கணிதம், திருக்கணிதம் மற்றும் எபிமெரிஸ் ஆகிய முறை களில் பெரும்பாலான ஜோதிடர்கள் ஜாதகங்களை கணிக்கிறார்கள். அதிலும் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான அயனாம்ச கணக்குகளைப் பயன்படுத்துவார்கள். ஒரு ஜோதிடர், எந்த முறையில் தனது அறிவினை வளர்த்துக் கொண்டிருக்கிறாரோ அல்லது எந்த முறையை அவர் தெளிவானது என்று நம்புகிறாரோ அந்த முறையில் அவர் ஜாதகத்தைக் கணித்து பலனுரைக்கிறார். இதில் இந்த முறைதான் சரியானது, மற்றவை தவறானவை என்று சொல்லக் கூடாது. எந்த முறை நமக்கு ஒத்துப்போகிறதோ அதைப் பின்பற்ற வேண்டும். அதற்காக நேரத்திற்குத் தக்கவாறும் நமது மனநிலைக்குத் தக்கவாறும் அவ்வப்போது மாற்றிக்கொள்ளக் கூடாது. எளிதில் புரியும்படியாக சொல்ல வேண்டும் என்றால் சென்னையில் இருந்து பெங்களூர் செல்வதற்கு சாலை வழியில் வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியைப் பயன்படுத்தலாம்.

அதே போன்று ராணிப்பேட்டை, சித்தூர் வழியாகவும் பெங்களூர் செல்லலாம். இதே போல ரயில் மார்க்கத்தில் செல்லும்போது அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை என்று வேறு ஒரு மார்க்கத்தில் பெங்களூரை நோக்கி பயணிப்போம். ஆகாய மார்க்கத்திலும் பெங்களூர் செல்ல இயலும். நமது குறிக்கோள் பெங்களூரைச் சென்று அடைய வேண்டும் என்பதுதான். அதுபோல ஜாதகத்தைக் கொண்டு நமக்கு நடக்கும் பலன்களை அறிந்துகொள்வதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். ஜோதிடரும் எது சுலபமான முறை என்று அவர் எண்ணுகிறாரோ அந்த முறையில் மட்டும்தான் கணித்து பலன் சொல்ல வேண்டுமே தவிர அனைத்து முறைகளையும் கையில் எடுத்துக்கொண்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. அவ்வாறு ஏதேனும் ஒரு முறையில் மட்டும் ஜாதகப்பலன் அறியும் பட்சத்தில் தவறு உண்டாவதற்கான வாய்ப்பே இல்லை. எந்த முறையைக் கையாண்டாலும் பலன்கள் நிச்சயமாக மாறாது.

?பயபக்தி என்று சொல்கிறார்களே, பக்திக்குப் பயம் தேவையா?
– கணேசன், காஞ்சிபுரம்.

தேவையில்லை. மனிதனுக்கு மனதில் பயம் இருப்பதனால்தான் பக்தி உண்டாகிறது என்பதால்தான் அதனை பயபக்தி என்று சொல்கிறார்கள் போலும். தற்காலத்தில் சாதாரணமாக பண்டிகை நாட்களைவிட ராகு – கேதுப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி போன்ற கிரகங்களின் பெயர்ச்சி நாட்களில்தான் ஆலயங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த கிரகங்களினால் எந்தவிதமான கெடுபலனும் உண்டாகிவிடக் கூடாது என்ற பயத்தின் காரணமாக இறைவனின் மீதான பக்தி அதிகரிக்கிறது. உண்மையில் பக்திக்கு பயம் அவசியமில்லை. இறைவனின் மீதான நம்பிக்கையும், சிந்தனையைச் சிதறவிடாது அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி பிரார்த்தனை செய்யும் திறனும் இருந்தாலே போதும். இறைவனின் பால் கொண்டிருக்கும் அசையாத நம்பிக்கையே உண்மையான பக்தி. உண்மையான பக்திக்கு பயம் அவசியமில்லை.

?என்னிடம் 18 சித்தர்களின் படம் ஒன்று உள்ளது. அதை வீட்டில் வைத்து வணங்கலாமா? சிலர் வணங்கக்கூடாது என்கிறார்கள், ஏன்? அப்படி வணங்குவதாக இருந்தால் எந்த கிழமையில்? எந்த திசையில்? எந்த வேளையில் வணங்கலாம்?
– முனுசாமி, கும்மிடிப்பூண்டி.

18 சித்தர்களின் படத்தினை உங்கள் வீட்டுப் பூஜையறையில் வைத்து நீங்கள் வணங்கி வரலாம். இகபர சுகங்களைத் துறந்தவர்கள் சித்தர்கள் என்பதால், எங்கே இல்வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல் போய்விடுமோ என்ற பயத்தினால் அவர்களை வீட்டில் வைத்து வணங்கவேண்டாம் என்றிக் உங்களுக்கு யாராவது சொல்லியிருக்கலாம். சித்தர்களும் இறைவனோடு ஒன்றிக் கலந்தவர்கள் என்பதால், அவர்களை வணங்குவதில் எந்தவித தவறும் இல்லை. சிவனுக்கு உரிய திங்கட்கிழமையில் வணங்குவது தனிச் சிறப்பு. எப்பொழுதும் பூஜை அறையில் வழிபாடு செய்யும் வேளையிலேயே இவர்களையும் வணங்கலாம். மற்றபடி இதற்கென தனியாக திசையோ, வேளையோ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

Related posts

அயனமும் சயனமும் தருவது மஹாயோகம்…

ராகு, கேது தோஷம் வராமல் தடுக்க முடியுமா??

இந்த வார விசேஷங்கள்