நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் யார்?.. எதிர்க்கட்சி தலைவருடன் ஆலோசனை

இஸ்லாமாபாத்: நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவருடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தானின் 15வது நாடாளுமன்றம் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கியது. பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அவரது தலைமையிலான கூட்டணியிலிருந்து ஒரு முக்கிய கட்சி விலகியது. இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் அவர் பதவியிழந்தார். பின்னர், அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றார். அதே நேரத்தில் இம்ரான் கான் பதவி மீது ஊழல், மோசடி, கொலை, பயங்கரவாதம், தேச துரோகம் என பல்வேறு குற்றச்சாட்டுகளில் 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், உலக தலைவர்களிடம் இருந்து ரூ.14 கோடி மதிப்பிலான 58 நினைவு மற்றும் பரிசு பொருள்களை பெற்று விற்றதில் மிகப்பெரிய ஊழல் நடந்ததாக வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என கடந்த 5ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனுடன் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடையும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு அட்டோக் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் நிறைவடைய 2 நாள்களே உள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு கலைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்தாண்டு பிற்பகுதியில் நடைபெற உள்ளது. அதற்கு பிறகு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கும்வரை, இடைக்கால பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று தொடங்கினார். முதல்கட்டமாக, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராஜா ரியாஸை பிரதமர் இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இடைக்கால பிரதமர் பதவிக்கு முன்னாள் தூதரக அதிகாரி ஜலீல் அப்பாஸ் ஜிலானி, முன்னாள் தலைமை நீதிபதி தஸாதக் ஹுசைன் ஜிலானி ஆகியோரின் பெயரை பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) பரிந்துரைத்துள்ளதாகவும் சிந்து மாகாண ஆளுநர் காம்ரான் டெஸோரியின் பெயரை எம்க்யுஎம்-பி கட்சி பரிந்துரைத்துள்ளதாகவும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் அரசமைப்பு சட்டப்படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், அந்நாட்டில் அண்மையில்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனடிப்படையில் மக்களவை தொகுதிகளை தேர்தல் ஆணையம் மாற்றியமைப்பதற்கு அவகாசம் அளிக்கும் வகையில் மேலும் 2 மாதங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

சிவகங்கை மாவட்டத்தில் 4,600 மெட்ரிக் டன் யூரியா கையிருப்பு

மாநிலத்தில் முதன்மை முன்னோடி முயற்சியாக மகளிர் சுய உதவிக் குழுவினரின் மசாலா பொருட்கள் காலை உணவு திட்டத்துக்கு பயன்படுத்தி அசத்தல்

வேட்டவலம் அரசுப்பள்ளி மாணவிகள் குரு வட்ட தடகள போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்