எந்தக் கிரகம் நல்லது செய்யும்?

நண்பர் விசித்திரமான ஒரு கேள்வியைக் கேட்டார்.
‘‘எந்தக் கிரகம் நல்லது செய்யும்?
எந்தக் கிரகம் தீமையைச் செய்யும்?’’
‘‘என்ன திடீரென்று சந்தேகம்
உங்களுக்கு?’’
‘‘சும்மா தெரிந்து கொள்ளலாம் என்றுதான். பொதுவாக, சில கிரகங்களை தீமையான கிரகங்கள் என்று சொல்கிறார்கள். சில கிரகங்களை சுபகிரகங்கள் என்று சொல்லுகின்றார்கள்?’’

‘‘ஜோதிடத்தின் அடிப்படையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜாதகக் கட்டம் என்பது 12 பிரிவுகளாக இருக்கும். அதனை 12 பாவங்கள் என்று சொல்வார்கள். முதல் பாவம் ஜாதகரின் குணத்தைக் குறிக்கிறது. லக்ன பாவம் என்பார்கள். இரண்டாவது பாவம் அவருடைய படிப்பு, குடும்பம், செல்வநிலை போன்றவற்றைக் குறிக்கிறது. மூன்றாம் பாவம் அவருடைய வீரம், வெற்றி, பயணங்கள், இளைய சகோதரன் ஆகியவற்றைக் குறிக்கிறது. நான்காவது பாவம் தாயாரையும், வீடு, வாசல், வாகனம் முதலியவற்றைக் குறிக்கிறது. ஐந்தாம் பாவம் என்பது அவருடைய பூர்வ புண்ணியத்தையும், வம்ச விருத்தியையும் குறிக்கிறது. அதாவது ஒருவருடைய குழந்தைச் செல்வத்தைக் குறிப்பது ஐந்தாம் பாவம். காதலைக் குறிக்கக் கூடியதும் ஐந்தாம் பாவம்.
ஆறாம் பாவம் ஒருவருக்கு வருகின்ற பகை, கடன்கள், வியாதிகள் மற்றும் வழக்கு, வெற்றிகள், மற்றவர்களிடம் ஊழியம் செய்வது, அடிமைத் தொழில் முதலியவற்றைக் குறிப்பது. ஏழாம் பாவம் என்பது ஒருவருடைய நண்பர்கள், வெளி மனிதர்கள், களத்திரம், சுய தொழில் முதலியவற்றைச் சுட்டிக்காட்டுவது. எட்டாம் பாவம் ஆயுள் ஸ்தானம். ஒன்பதாம் பாவம் பாக்கியத்தையும், தந்தையையும் குறிக்கும். பத்தாம் பாவம் தொழில், உத்தியோகம், புகழ் முதலியவற்றைக் குறிப்பது. பதினோராம் பாவம் என்பது மூத்த சகோதரத்தையும், ஆசைகளையும், அதிர்ஷ்டத்தையும், லாபத்தையும் குறிப்பது. 12 ஆம் பாவம் என்பது ஒருவருடைய நிம்மதி, நிரந்தரச் சொத்துக்கள், இரண்டாம் தொழில் முதலிய விஷயங்களைக் குறிப்பது. எந்த நபருடைய வாழ்க்கையும், இந்த 12 கட்டங்களுக்குள்தான் அமையும்.

அரசனாக இருந்தாலும், 12 கட்டங்கள்தான். ஆண்டியாக இருந்தாலும் 12 கட்டங்கள்தான். இந்த 12 கட்டங்களின் நன்மை தீமைகளை தீர்மானம் செய்வது, இந்த கட்டங்களுக்குள் அமைந்திருக்கக் கூடிய ஒன்பது கிரகங்கள். இந்த 12 கட்டங்கள், ஒன்பது கிரகங்களின் துணைகளைக் கொண்டும், ஒன்பது கிரகங்கள் 12 பாவங்களின் துணையைக் கொண்டும் வாழ்வில் அம்சங்களைத் தீர்மானிக்கின்றன.

எனவே, இவற்றில் எந்த கட்டத்தை நல்ல கட்டம் (பாவம்) என்று சொல்வது? எந்த கிரகத்தை நல்ல கிரகம் என்று சொல்வது? பொதுவாக, குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், பாவிகளோடு சேராத புதன், இவர்களை நல்ல கிரகங்கள் என்று சொல்லுகிறார்கள். உண்மைதான். ஆனால், எந்த சுக்கிரதிசை ஒருவருக்கு பிரமாதமான வாழ்க்கை வசதிகளை கொடுத்ததோ, அதே சுக்கிரதிசை, சிலரை தெருவிற்கு கொண்டு வந்து பிச்சை எடுக்க வைக்கிறது என்பதையும் நாம் பார்க்கிறோம். அது சுக்கிரனின் பிழை அல்ல. அவர் எல்லோருக்கும் நல்லவர்தான். ஆனால், அவரவர்கள் செய்த புண்ணிய பாப விளைவுகளுக்கு ஏற்ப அவரே நல்லதும் செய்கின்றார், அவரே கெட்டதும் செய்கின்றார். அதனால் இந்தக் கிரகம் நல்ல கிரகம், இந்தக் கிரகம் கெட்ட கிரகம் என்று சொல்வது தகாது.

கிரகங்களின் ஆதிபத்திய விசேஷம் என்று ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது. உதாரணமாக, நாம் எல்லோரும் “குரு நல்லவர்; நல்ல கிரகம். குரு பார்த்தால் கோடி நன்மை” என்றெல்லாம் சொல்லுகின்றோம் அல்லவா! இதே குரு, ஒருவருக்கு, குறிப்பாக, துலா லக்கினக் காரர்களுக்கு மூன்று ஆறுக்கு உரியவராக மாறுகின்றார். இவர்களுக்கு குரு வலுப் பெற்று தசை நடத்தினால், அவ்வளவுதான், படாத அவஸ்தைப் படுவார்கள். இல்லாத துன்பமெல்லாம் வந்து சேரும். சொந்த பணத்திலேயே சூனியம் வைத்துக் கொள்வது போல அவர்கள் செய்கின்ற பல காரியங்கள் அவர்களுக்கு எதிராகப்போகும்.

துலா லக்னக்காரர்களுக்கு, குரு நல்லவர் என்று சொல்வதா? கெட்டவர் என்று சொல்வதா? இதே குரு இவர்களுக்கு, கெட்டுப் போயிருந்தால், நல்ல பலன்களைத் தருகின்றார். அதைப்போலவே மீன லக்னக்காரர்களுக்கு, சுக்கிரன் 3,8க்கு உரியவராகின்றார். இவர்களுக்கு சுக்கிரன் வலுப் பெற்று தசை நடந்தால், கடன்காரனாக்கும். சமயத்தில் சிறை வாழ்க்கையும் தந்துவிடும். அப்படித் தந்த சில ஜாதகங்களும் உண்டு. இன்னொரு விஷயம் பாருங்கள், சூரியன் சந்திரனைத் தவிர எல்லா கிரகங்களுக்கும் இரண்டு இரண்டு வீடுகள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. இதில் ஒரு வீடு சுப வீடாக இருக்கும். இன்னொரு வீடு அசுப வீடாக இருக்கும். உதாரணமாக, கும்ப லக்னக்காரர்களுக்கு சுக்கிரன் நான்கு ஒன்பதுக்கு உரியவர். நான்காம் இடம் என்பது சுகஸ்தானம். 9ம் இடம் என்பது பாக்கியஸ்தானம்.

ஆனால், கும்ப லக்கினம் ஸ்திரலக்னமாக இருப்பதால், இதே சுக்கிரன் இவர்களுக்கு பாதகாதிபதியாக வந்து தீமைகளையும் செய்துவிடுகின்றார். மேஷ லக்கினத்துக்கு லாபாதிபதியாக வரும் சனி பாதகாதிபதியாகவும் வந்து தீமை செய்கின்றார். சில நூல்களின் இரண்டு ஆதிபத்தியங்கள் இருந்தால், அதிலும் குறிப்பாக சுப ஆதிபத்தியமிருந்தால், மற்றொரு கெட்ட ஆதிபத்தியம் வேலை செய்யாது என்பார்கள். ஆனால் நடைமுறையில் அப்படி நடப்பதில்லை.

உதாரணமாக, துலா லக்னத்தை எடுத்துக் கொண்டால், லக்னாதிபதியே அவருக்கு எட்டாம் அதிபதியாகவும் வருகின்றார். அதாவது, ஆயுள் ஸ்தான அதிபதியாகவும் வருகின்றார். இந்த லக்கினக்காரர்களுக்கு சுக்கிரன் இரண்டு விஷயத்தையும் செய்துவிடுகின்றார். சிலர், பெண்கள் விஷயத்தில் மிகப் பெரிய துன்பத்தையும் அவமானத்தையும் சந்திக்கக் கூடிய நிலையை சில ஜாதகங்களில் பார்த்திருக்கின்றேன். எந்தப் பெண்களால் பாராட்டப்பட்டாரோ, அவர்களாலே களங்கமும் சொல்லி அவமானப்பட வைக்கும் விந்தை நிலையும் சுக்கிரன் செய்வார். காரணம், லக்னாதிபதியும் அவரே. அஷ்டமாதிபதியும் அவரே. இப்பொழுது இந்த சுக்கிரனை சுபகிரகம் என்று சொல்வதா? அசுபகிரகம் என்று சொல்வதா?
எனவே, நல்ல கிரகம் கெட்ட கிரகம் என்பதெல்லாம் இல்லை. நல்லது செய்யும் கிரகமே கெட்ட பலனையும் செய்கிறது. அதைவிட ஒரு விஷயம் பாருங்கள், நல்லது செய்வதற்காகவே கெட்டது செய்வதுண்டு. கெட்டது செய்வதற்காவே நல்லது செய்வதும் உண்டு. உதாரணத்தோடு விளக்குகிறேன்… அடுத்த இதழில் காணலாம்.

Related posts

ருத்ராட்சம் யாரெல்லாம் அணியலாம்!

ஊர்த்துவ நடனம் புரியும் திருவாலங்காடு நடராஜர்!

கலை மணம் கமழும் கிருஷ்ணர் கோயில்