உயர்ந்தது எது?

எல்லோருமே ஏதாவது ஒன்றைத்தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். அது கிடைத்து விட்டால், அடுத்தது-அடுத்தது என்று ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறோமே தவிர, யாரும் எங்கும் நிற்கத் தயாராக இல்லை.யாரையும் குற்றம் சொல்ல முடியாது. காலத்தின் கோலம்! அதற்கும் மேலாக ஆசை-பேராசையின் விளைவுகள் இவை.

அதையும் மீறி வெற்றி பெற்றவர்கள் பலர். மனித குலத்திற்கே வழி காட்டிகளாக இருக்கும் அந்த உத்தமர்கள் அதிகமான அளவில் தோன்றிய ஒரேநாடு, நம் ‘பாரத நாடு’.
அவர்களில் ஒருவர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி…

மான்கடே என்ற ஊரில், ஜீவன் தாகூர் என்ற பெரியவர் வாழ்ந்து வந்தார்; தலைசிறந்த பக்திமான். மிகவும் நல்லவரான அவரை வறுமை பீடித்தது.அத்துயர் தீர்வதற்காக, அவர் காசி விசுவநாதரிடம் போய் முறையிட்டார்; ‘‘காசி விசுவநாதா! என் குறை தீர, ஏதாவது ஒரு வழி காட்டு!’’ என மனமுருகி வேண்டினார்.அன்று இரவு ஜீவன் தாகூரின் கனவில் சிவ பெருமான் காட்சி கொடுத்தார்; ‘‘சனாதன கோஸ்வாமியிடம் செல்! உனக்கு நன்மை உண்டாகும்’’ என்று கூறி மறைந்தார்.

கனவு கலைந்ததும் ஜீவன்தாகூர் எழுந்து நீராடி, வழிபட்டுக் கோஸ்வாமியிடம் சென்றார்; நடந்தவைகளையெல்லாம் சொல்லி, கனவில் கண்டதையும் சொன்னார்.அவர் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கோஸ்வாமி யோசித்தார்; சில நாட்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வு ஒன்று நினைவிற்கு வந்தது.சில நாட்களுக்கு முன்னால் ஒருநாள், கோஸ்வாமி யமுனைக் கரையில் நடந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் காலில் ஏதோ தட்டுப்பட்டது; என்னவென்று எடுத்துப் பார்த்தார்.அது பரிச குளிகை எனப்படும் ‘ஸ்பரிச வேதி’க் கல்லாக இருந்தது. தான் தொட்டதை எல்லாம் தங்கமாக மாற்றும் கல் அது. அதைப் பார்த்ததும் கோஸ்வாமிக்கு ஓர் எண்ணம் தோன்றியது; அனைத்தையும் துறந்த உத்தமமான துறவி அவர்; ‘‘துறவியான நான் இதை வைத்துக் கொண்டு, என்ன செய்யப்போகிறேன்?’’ என்று எண்ணிய கோஸ்வாமி, தன்னிடம் அகப்பட்ட ஸ்பரிச வேதிக்கல்லை, யமுனா நதியில் வீச நினைத்தார்.

அதே சமயம் கோஸ்வாமிக்கு வேறோர் எண்ணமும் தோன்றியது; ‘‘வீணாக நதியில் விழுவதை விட, இது யாராவது ஏழைக்குப் பயன் படலாமே’’ என்ற எண்ணத்தில் அந்த ஸ்பரிச வேதிக்கல்லைக் கொண்டு வந்து, தன் குடிசையில் ஒரு பக்கமாகப் போட்டார்.அது நினைவிற்கு வந்தது; ‘‘அந்த ஸ்பரிச வேதிக்கல்லை நாம்கொடுக்க வேண்டும் என்பதற்காகவே காசி விசுவநாதர், இந்த ஜீவன் தாகூரை நம்மிடம் அனுப்பி வைத்திருக்கிறார்’’ என்று உணர்ந்தார் கோஸ்வாமி.

உடனே ஜீவன் தாகூரிடம், ‘‘அதோ! அந்தப் பக்கமாக மூலையில் கிடக்கும் ஸ்பரிச வேதிக்கல்லை எடுத்துச் செல்லுங்கள்! உங்களுக்குப் பல நன்மைகள் உண்டாகும்’’ என்றார் கோஸ்வாமி. ஜீவன்தாகூர் மிகுந்த மகிழ்ச்சியோடு ஸ்பரிச வேதிக்கல்லை எடுத்துக்கொண்டு, கோஸ்வாமியை வணங்கி நன்றி சொல்லி விட்டு, அங்கிருந்து வெளியேறி வழி நடந்தார்.

நடக்கும்போது, அவருக்குப் பல விதமான எண்ணங்கள் தோன்றின.‘‘ஸ்பரிச வேதிக்கல் மிகவும் உயர்ந்தது; யாருக்கும் கிடைக்காத கருவூலம் அல்லவா இது? இதையே அலட்சியமாக நினைத்து, நமக்குக் கொடுத்திருக்கிறார் என்றால், அந்தப் பெரியவரிடம் (கோஸ்வாமி) இதைவிட உயர்ந்ததான பொருள் இருப்பதாகத் தானே அர்த்தம்!
‘‘அடச்சீ! உலக வாழ்க்கையில் மூழ்கி, எவ்வளவு கேவலமாக வாழ்ந்து வருகிறேன் நான்?’’

‘‘காசி விசுவநாதர் அருளால் அந்த மகான் கோஸ்வாமியின் தரிசனம் கிடைத்தும் கூட, அவரிடம் அல்பமான பொருளைக் கேட்டுப் பெற்றேனே! என்ன முட்டாள் தனம்?அவரிடம் பிறவிப்பெருங்கடலைத் தாண்டும் வழியை அல்லவா கேட்டிருக்க வேண்டும்?’’ என்று நினைத்த ஜீவன் தாகூர் தன் கையிலிருந்த ஸ்பரிச வேதிக்கல்லை, யமுனை நதியில் வீசி எறிந்தார். அதன்பின் அப்படியே திரும்பிய ஜீவன்தாகூர், கோஸ்வாமியை மறுபடியும் சந்தித்து, ‘‘அடியேனைச் சீடனாக ஏற்று, ஞான உபதேசம் செய்ய வேண்டும்’’ என்று வேண்டினார்; தன் எண்ணங்களை எல்லாம் சொன்னார்.

கோஸ்வாமி மனம் மகிழ்ந்தார்; ஜீவன்தாகூரின் மனப்பக்குவத்தைப் பாராட்டி, அவரைச் சீடனாக ஏற்று உபதேசம் செய்தார். குரு உபதேசத்தைக் கடை பிடித்து, ஜீவன்தாகூரும் முக்தி அடைந்தார்.குருவருள் என்னவெல்லாம் செய்யும் என்பதை விளக்கும் நிகழ்வு இது.

தொகுப்பு: பி.என். பரசுராமன்

Related posts

திருச்செந்தூரின் கடலோரத்தில்…

வெற்றி தரும் வெற்றி விநாயகர்

இந்த வார விசேஷங்கள்