இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தேர்தலில் போட்டியிட இலை கட்சியில யாரும் முன்வராத நிலையில வைத்தியர் ஒருத்தர் களத்துக்கு வாரேன்னு சொல்றாராமே?’’ என்று கேள்வி எழுப்பினார் பீட்டர் மாமா. ‘‘நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கு… இதனால் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கிருச்சு. நெற்களஞ்சியம் மாவட்டத்துல இலை கட்சியின் சார்பில் போட்டியிட ஆட்களை கிடைக்காமல் கட்சி தலைமை தடுமாறி வருதாம். செலவு செய்யக்கூடியவங்கள நிற்க வைக்கணும்ன்னு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆசைப்படுறாங்களாம். ஆனா, கட்சியோட முக்கிய நிர்வாகிகள் யாரும் தேர்தல்ல நிற்க பயப்படுறாங்களாம். வைத்தியம் செய்யக்கூடிய நபர் ஒருவர் தைரியமாக நான் தேர்தலில் நிற்கிறேன் என்கிறாராம். முக்கியமாக, செலவுகளை நான் கவனிச்சுக்கிறேன்னு அவர் சொல்றதால அவர நெற்களஞ்சியம் மாவட்டத்துல போட்டியிட வாய்ப்பு உள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பச்சக்கொடியை கேட்டு வாங்கி அசைச்ச தாமரை பார்ட்டிங்க பற்றி சொல்லுங்களேன்’’ என்று ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவையில இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் புதிய ரயில் சேவையை காணொலி மூலம் பிரைம் மினிஸ்டர் தொடங்கி வைச்சாரு. இந்த துவக்க விழா நடந்த கோவையை விட வழித்தடத்தில் உள்ள ஸ்டேஷன்களில் தாமரை கட்சிக்காரங்க பயங்கர அலப்பறைய காட்டினாங்களாம். மாங்கனி நகர ஸ்டேஷனில் நடந்த விழாவிற்கு மக்கள் பிரதிநிதிகளை மட்டும் தான் ரயில்வே நிர்வாகம் தரப்பில் அழைச்சிருந்தாங்களாம். ஆனா ஸ்டேஷன் முழுமைக்கும் தாமரை கட்சிக்காரங்க அதிகளவு வந்து ரயிலை வரவேற்க காத்திருந்தாங்களாம்.

ஒருவழியாக ரயில் வந்ததும், அதனை வரவேற்று மீண்டும் வழியனுப்பி வைக்க மக்கள் பிரதிநிதி கையில பச்சக்கொடியை ரயில்வே அதிகாரிகள் கொடுத்தாங்களாம். இன்னொரு பச்சக்கொடி வேணுமுனு முன்கூட்டியே சொல்லி வைச்சு கேட்டு வாங்கினாராம் தாமரை கட்சி மாநில நிர்வாகி ஒருத்தரு. அந்த நிர்வாகியும் ரயில் புறப்படும் போது கொடியை அசைத்து ஆனந்தம் கொண்டாராம். இதையெல்லாம் பார்த்த ரயில்வே அலுவலர்கள், இப்படியெல்லாம் விளம்பரம் தேடிக்கலாம் என்பதை இவர்களிடம் இருந்துதான் கத்துக்கணும் என்று புலம்பியபடி சென்றார்களாம்’’ என்று சொல்லி சிரித்தார் விக்கியானந்தா.

‘‘இலைகட்சியில மகனுக்கே போஸ்டிங் போட்டுக்கிட்ட மதர் பத்தி தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டத்துல 8 சட்ட மன்ற தொகுதி இருக்கு. இலைகட்சியில 2 தொகுதிகளாக பிரிச்சு டிஸ்ட்ரிக் செக்ரட்ரிகளை நியமிச்சிருக்காங்க. இதுல போ என்று தொடங்குற தொகுதியையும், ஆறு அணி தொகுதியையும் சேர்த்து சென்ட்ரல் டிஸ்ட்ரிக் செக்ரட்ரியா இலை கட்சியில பெயரில் ஜெயத்தை கொண்டவரை நியமிச்சாங்க. இவரு ஏற்கனவே இலை கட்சியில ஒன்றியத்தோட செக்ரட்ரி போஸ்டிங்ல இருந்தாரு. இதனால, அந்த ஒன்றிய செக்ரட்ரி போஸ்டிங் வேற ஒருத்தருக்கு போடச்ெசால்லி கட்சி தலைமையில சொன்னாங்களாம்.அதுக்காக, யாருக்கு இந்த போஸ்டிங் போடலாம்னு நினைச்சவங்க, அதை ஏன் வெளியில உள்ளவங்களுக்கு போடணும்னு தன்னோட மகனுக்கே அந்த ஒன்றிய செக்ரட்ரி போஸ்டிங் போட்டுக்கிட்டாங்களாம். வேற, யாருக்காவது போஸ்டிங் கொடுப்பாங்கணு கட்சியில, நிர்வாகிங்க எதிர்பார்த்து காத்திருந்தாங்களாம். ஆனா? இப்படி மகனுக்கே போஸ்டிங் போட்டுக்குவாங்கன்னு நினைக்கவே இல்லைன்னு சென்ட்ரல் டிஸ்ட்ரிக் இலைகட்சிக்காரங்க அதிருப்தியில இருக்காங்களாம். இந்த குமுறல்கள் அனைத்தும் வர்ற எலக்‌ஷன்ல எதிரொலிக்கும்னு கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இருக்கிற இடமே தெரியாம இருக்காரே மாஜி.. என்ன காரணமாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகரத்தில இலைக்கட்சி சார்பில் உள்ளே – வெளியே என 2 மாஜி அமைச்சர்கள் இருக்கின்றனர். திடீரென ஏதாவது பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்துவதும், இல்லாவிட்டால் இருக்கும் இடமே தெரியாமல் மவுனம் காப்பதும் இருவருக்குமே வாடிக்கை. இவர்களில் ஒருவர் கடந்த சில மாதங்களாகவே மவுனியாகவே வலம் வருகிறார். கட்சி சார்பு நிகழ்வுகளுக்கும் கூட பட்டும் படாமலே இருந்து வருகிறாராம். ஆக்டிவ் அரசியல்வாதியாகவே தன்னை தொகுதிக்குள் காட்டிக் கொள்ளும் இவர், வழக்கத்திற்கு மாறாக மவுனம் காப்பது எதற்காக என்று ஆதரவாளர்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘எனக்கு கட்சியில் மற்றொரு மாஜி அளவுக்கு முக்கியத்துவம் வழங்குவதில்லை. கட்சியில் நான் சீனியர். எப்போதும் எந்த தலைமையையும் விட்டுத் தர மாட்டேன். அப்படிப்பட்ட என்னை தலைமை பத்தோட பதினொன்றாகவே கருதுகிறது. எனக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். அதற்காகத்தான் அமைதி காத்து வருகிறேன்’ என கூறியுள்ளார். இது தலைமையின் கவனத்திற்கும் சென்றுள்ளதாம். ‘கொஞ்ச நாள் பொறுங்க… அடுத்து எம்பி தேர்தல் வருது… அதில் கவனத்தை செலுத்துங்க… பார்த்துக்கலாம்’ என ஆறுதல் கூறியுள்ளாராம். ஆனாலும், சைலன்ட் மோடிலேயே மாஜி தொடர்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி