வாட்ஸ்அப் வழியாக களமிறங்கிய மோசடிக்கும்பல் ஆன்லைனில் மின் கட்டணத்தை செலுத்த ‘ஆப்’களை பதிவிறக்கம் செய்யவேண்டாம்: மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை

சென்னை: ஆன்லைன் மோசடி கும்பல் காலமாற்றத்திற்கு ஏற்ப அவ்வப்போது தனது மோசடி வேலைகளை மாற்றி வருகின்றனர். ஒவ்வொரு மோசடியிலும் சிலர் ஏமாறும் நிலையில் தற்போது பலரிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், தங்களின் மோசடிக்கு புதிய வழியைத் தேடிய கும்பல், தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரில் மோசடியை அரங்கேற்ற துவங்கியுள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆன்லைன் மற்றும் செயலிகள் மூலம் கட்டணம் செலுத்துகின்றனர்.

இதை கவனத்தில் கொண்ட மோசடி கும்பல் மின்சார வாரியத்தை குறிவைத்துள்ளது. ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்துவோரை குறிவைத்து, அவர்களது வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் மற்றும் செயலிக்கான லிங்க் இணைத்து அனுப்புகின்றனர். மின்சார வாரியத்தின் அலுவல் பயன்பாட்டிற்கான வாட்ஸ்அப் எண்ணைப் போல உள்ள அந்த தகவலில், ‘‘அறிவிப்பு, தங்களது மின் இணைப்பு இன்று இரவு 10.30 மணி முதல் மின்சார அலுவலத்தின் மூலம் துண்டிக்கப்படுகிறது. கடந்த மாதத்திற்கான மின் கட்டணம் இன்னும் சரி செய்யப்படவில்லை.

எனவே, மின்சார வாரியத்தின் இந்த குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்து, தேவையான விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 மட்டும்’’ என குறிப்பிடப் பட்டுள்ளது. இதன் இணைப்பாக செயலிக்கான லிங்க் ஒன்றையும் இணைத்துள்ளனர். இந்த தகவல் குறித்து விசாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால் அழைப்பை ஏற்பதில்லை.

மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர், தலைமைப் பொறியாளர் (பொ) மங்களநாதன் கூறுகையில், ‘‘மின்சார வாரியத்தின் சார்பில் இதுபோன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மின் நுகர்வோர் யாருக்கும் வாட்ஸ்அப் மூலம் எந்த தகவலும் இதுவரை பகிரப்படவில்லை. ஆன்லைன் மோசடி கும்பல் தங்களின் மோசடிக்கு துணையாக வாரியத்தின் பெயரை பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். குறிப்பாக செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் தகவல்கள் மட்டுமின்றி பணமும் பறிபோகும் வாய்ப்பு உள்ளது. எனவே, வாட்ஸ்அப் தகவலை நம்பி மின் நுகர்வோர் யாரும் ஏபிகே செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்’’ என்றார்.

Related posts

மோடி குறித்து அவதூறு கருத்து; சசிதரூர் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் நாகர்கோவிலில் மழைநீர் வடிகால் ஓடைகளில் மண் அகற்றம்

டெல்லி அளவிற்கு லடாக்கில் ஆக்கிரமிப்பு; மோடியால் சீனாவை சரியாக கையாள முடியவில்லை: அமெரிக்காவில் ராகுல் கடும் குற்றச்சாட்டு