வாட்ஸ்அப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட் வசதி: மேலாண் இயக்குனர் சித்திக் தொடங்கி வைத்தார்

சென்னை: வாட்ஸ் அப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெரும் புதிய வசதியை, மெட்ரோ ரயில்வே மேலாண் இயக்குனர் சித்திக் அறிமுகப்படுத்தினார். சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாட்ஸ் அப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட்டை பெறும் வசதியை மெட்ரோ மேலாண் இயக்குனர் சித்திக் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மெட்ரோ இயக்குனர்கள் ராஜேஷ் சதுர்வேதி, அர்ஜுனன் மற்றும் மெட்ரோ அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் மெட்ரோ மேலாண் இயக்குனர் சித்திக் கூறியதாவது: மெட்ரோ பயணிகள் பல வழிகளில் பயணச்சீட்டு பெற மெட்ரோ வழி வகை செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறும் புதிய வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தவிர பேடிஎம், ஏர்டெல் நிறுவன அப்ளிகேஷனில் மெட்ரோ டிக்கெட்டை பெறுவதற்கான ஏற்பாடுகளை திட்டமிட்டு வருகிறோம். வாட்ஸ் அப் மூலமாக எடுக்கப்படும் டிக்கெட் ஒரு நாள் முழுவதும் செல்லும். ஆனால் ஒரு முறை அந்த டிக்கெட்டை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டால் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் அந்த டிக்கெட் காலாவதி ஆகிவிடும் அப்படி நேரத்தை கடந்து பயணிக்கும் பயணிகளிடம் அபராதம் வசூலிக்கப்படும். சர்வர் பிரச்னையால் டிக்கெட் பெற முடியவில்லை என்றால் மற்றொரு நிர்வாகம் பணத்தை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கும்.

மேலும் வாட்ஸ்அப் மூலம் ஒரே நேரத்தில் 6 டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் அந்த 6 டிக்கெட்டுகளுக்கும் தனித்தனி கியூ ஆர் வழங்கப்படும். அதோடு இதனை நண்பர்கள் குடும்பத்தினர் என யாருக்கு வேண்டுமானாலும் பகிர்ந்து பயணிக்க முடியும். இது ஒரு ‘டிரான்ஸ்பர் டிக்கெட் சிஸ்டம்’. மேலும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகாமையில் 5 கிலோ மீட்டருக்குள் வசிக்கக்கூடிய மக்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு பயணிக்கக் கூடிய இலவச மற்றும் கட்டண சலுகையிலான ‘புரமோஷனல் டிக்கெட்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். மக்களின் வரத்து நாளொன்றுக்கு இரண்டு லட்சத்தை கடந்து வருகிறது. கூடுதல் ரயில் இயக்க 3 ஆயிரம் கோடி வரை தேவைப்படும்.

மேலும் நான்கு பெட்டிகளோடு இயங்கி வரும் சென்னை மெட்ரோ ரயிலில் கூடுதலாக இரண்டு பெட்டிகளை இணைக்கும் திட்டத்துக்கு ஒன்றரை ஆண்டுகள் ஆகும். முன்பை விட மெட்ரோவின் நிகர லாபம் அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப 6 மாதத்திற்கு முன்பாக மின்சார கட்டணங்களும் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. எனவே செலவும் வருமானமும் சரிசமமாக உள்ளது. கோவை மற்றும் மதுரை மெட்ரோவின் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அதற்கு அரசு ஒப்புதல் அளித்தவுடன் பணிகளை தொடங்குவோம். அதோடு சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான நீட்டிப்புக்கான பணிகளும் அரசு ஒப்புதலுக்கு பிறகு தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* 83000 86000’ என்ற எண்ணுக்கு ‘ஹாய்’ சொன்னால் டிக்கெட்
பயணிகள் தங்களுடைய வாட்ஸ் அப் எண்ணிலிருந்து ‘83000 86000’ என்ற எண்ணுக்கு ‘ஹாய்’ என குறுஞ்செய்தி அனுப்பினால், பயண சீட்டு, முன்பதிவு பயணம் தேர்ந்தெடுத்தல், மெட்ரோ நிலையங்கள் கண்டுபிடித்தல் உள்ளிட்ட விவரங்கள் வரும். அதில் ‘பயண சீட்டு தேர்ந்தெடுத்தல்’ என்பதை கிளிக் செய்து தனக்கான பயண விவரங்களை அதில் பதிவிட்ட உடனே கட்டண விவரங்கள் கிடைக்கும். அந்த தொகையை கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட ஆப்களின் மூலமாக கட்டணத்தை செலுத்தினால் சில நொடிகளில் கியூஆர் கோட் டிக்கெட் நமது வாட்ஸ் அப் எண்ணுக்கு வழங்கப்படுகிறது. ஒரே நேரத்தில் ஆறு டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும் அதே வேளையில் பயணம் தொடங்கியதில் இருந்து 2 மணி நேரத்தில் காலாவதியாகும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் பெறும் முறையை மெட்ரோ மேலான் இயக்குனர் சித்திக் செய்தியாளர்களின் முன்னிலையில் விளக்கி காட்டினார்.

Related posts

நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வில்சன் எம்.பி. வலியுறுத்தல்

துபாயில் முத்தமிழ் சங்கம் சார்பில் தமிழக வர்த்தகர்கள் சந்திப்பு

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவியது