வாட்ஸ்அப்பில் டிக்கெட் பெறும் வசதியை நாளை அறிமுகம் செய்யவுள்ளது மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: வாட்ஸ்அப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதியை மெட்ரோ ரயில் நிர்வாகம் நாளை அறிமுகம் செய்ய உள்ளது. செல்ல வேண்டிய இடம், கட்டணத்தை வாட்ஸ்அப் செயலில் செலுத்தி உடனே டிக்கெட் பெறலாம் என தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் நிரம்பி வழியும் வாகனங்களுக்கு மத்தியில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மக்கள் வேகமாக பயணம் செல்ல மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சென்னை மெட்ரோ ரயில் முதல் முதலாக கடந்த 2015 ஜூன் மாதம் துவங்கப்பட்டது. அப்போது சென்னை ஆலந்தூர் -கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.இந்த ரயில்களில் தினமும் ஏராளமானவர்கள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிகமான பயணம் செய்து வருகின்றனர்.

தற்போதைய சூழலில் சென்னை மெட்ரோ ரயிலை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வார நாட்களில் தினமும் 2.15 லட்சம் முதல் 2.20 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். வார இறுதி நாட்களில் இது இன்னும் அதிகரிக்கிறது.

சென்னை மெட்ரோ ரயிலில் தற்போது டிக்கெட் எடுக்க கவுண்ட்டர் டிக்கெட் வசதியோடு மேலும் 2 வகையான வசதிகள் உள்ளன. ஒன்று பயண அட்டை முறை, இன்னொன்று க்யூஆர் கோடு முறை. இதில் க்யூஆர் கோடு மற்றும் மெட்ரோ பயண அட்டைகளை பயன்படுத்துவோருக்கு 20 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இதனால் க்யூஆர் கோடு, மெட்ரோ பயண அட்டைகளை அதிகமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதிதாக 3-வது வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்கு வழங்க உள்ளது. இதற்கான திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வடிவமைத்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் செல்போனில் உள்ள வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் எடுத்து எளிமையாக பயணம் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வகையில் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டம் விரைவில் அறிமுகமாகும். இதன்மூலம் பொதுமக்கள் வீடு உள்பட எங்கிருந்தும் வேண்டுமானாலும் மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட்டை வாட்ஸ் அப் மூலம் எடுத்து கொள்ள முடியும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு தனி வாட்ஸ் அப் எண் வழங்கப்படும். இந்த எண்ணுக்கு பொதுமக்கள் தங்களின் வாட்ஸ்அப்பில் இருந்து ‛ஹாய்’ என மெசேஜ் செய்வதன் மூலம் ‛‛சார்ட் போட்” (Chatbot) என்ற முறையில் கிடைக்கும். இதில் டிக்கெட் எடுக்கும் அம்சத்தை பொதுமக்கள் கிளிக் செய்து பயணிகள் தாங்கள் புறப்படும் ரயில் நிலையத்தின் பெயர், செல்லும் ரயில் நிலையத்தின் பெயரை பதிவு செய்ய வேண்டும்.

அதன்பிறகு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை வாட்ஸ்-அப், ஜிபே, யு-பே மூலம் செலுத்தலாம். அதன்பிறகு ரயில் நிலையங்களில் உள்ள க்யூஆர் ஸ்கேனரில் காண்பித்து பயணத்தை எளிமையாக தொடங்கலாம். அதன்பிறகு வெளியே செல்லும் இடத்தில் உள்ள க்யூஆர் ஸ்கேனரில் காண்பித்து ரயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்லலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

அக்-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!