Thursday, September 19, 2024
Home » ஏழரைச் சனி என்ன செய்யும்?

ஏழரைச் சனி என்ன செய்யும்?

by Nithya

காலத்தை கி.மு., கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு., ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின் என்று வாழ்வு கனிகிறது. ஏழரைக்குப் பிறகு வரும் தெளிவும், நிதானமும் ஆச்சரியமானது. முதிர்ந்த வார்த்தைகளால் அனுபவபூர்வமாகப் பேச வைக்கிறது.

இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும் என்பதை பார்க்கலாம்.

உங்கள் ராசிக்கு முன்னும், உங்கள் ராசிக்குள்ளும், அடுத்துள்ள ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம்.

சிறு வயதில் வரும் முதல் சுற்றை “மங்கு சனி’’ என்றும், வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை “பொங்கு சனி’’ என்றும், கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை “கங்கு சனி’’ என்றும் அழைப்பர்.

பிறந்ததிலிருந்து இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச் சனியின் தாக்கத்தை மிகத் தெளிவாகக் காணலாம். சனியின் முழுத்திறனும் தெரியும். முதல் சுற்று முடக்கி முயற்சியை தூண்டும். ‘‘எதுக்கெடுத்தாலும் கத்தி கலாட்டா பண்றான்… எத்தனை தடவை அடிச்சாலும் துடைச்சுப் போட்டுட்டு மறுபடி மறுபடி தப்பு பண்றான்… எத்தனை தடவை டாக்டர் கிட்ட காண்பிச்சாலும் மூக்கு ஒழுகிட்டே இருக்கு…’’ என்பதுபோல பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும். குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன் – மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. மூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னை உருவாகும். அதிலும் முக்கியமாக, குறுகிய காலத்தில் அறிமுகமாகி நெருங்கிய நண்பராக மாறுவோரால்தான் பிரச்னை பெரிதாகும். தேன்கூடாக இருந்த குடும்பம், தேள் கொட்டின மாதிரி ஆகும் சூழ்நிலை நேரும்.

13லிருந்து 19வயது வரையுள்ள ஏழரை சனி நடக்கும் பிள்ளைகளுக்கு செல்போன் தராதீர்கள். உங்கள் குடும்பத்திற்கு வழக்கமில்லாத உணவு வகைகளை குழந்தைகள் எடுத்துக் கொள்வார்கள். மந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள். கூடா நட்பினில் சிக்குவார்கள். திணறி வெளியே வருவார்கள். கண்கொத்திப் பாம்பாக கண்காணிக்க வேண்டும்.

ஏட்டறிவு, எழுத்தறிவு, சொல்லறிவு எல்லாவற்றையும் தாண்டிய அனுபவ அறிவை ஏற்றி வைப்பார். தடவித் தடவி சொன்னால் கேட்காத பிள்ளையை தடியெடுத்துத் திருத்தும் வாத்தியார்தான் சனி பகவான்.

‘‘சாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டுப் போடா’’ என்று அம்மா சொன்னால், ‘‘எங்கயோ இருக்கற சாமிக்கு என் பிரேயர்தான் முக்கியமா?’’ என்பார்கள். ஆனால், சிக்கலில் தவிக்கும்போது தாயின் சொற்கள் நினைவுக்கு வரும். விபரீதங்களைப் பற்றி யோசிக்காமல், ‘‘சும்மா ஜாலிக்குத்தான் அப்படி பண்னேன்’’ என்று ஏழரையில் பல வினைகளைக் கொண்டு வருவார்கள்.

ஏழரைச் சனியில் பெறும் அனுபவங்களும், அவமானங்களும், காயங்களும், வடுக்களும் வாழ்க்கை முழுதும் மறக்காதபடி இருக்கும். ‘‘ரெண்டு மார்க் அதிகமா எடுத்திருந்தா தலையெழுத்தே மாறியிருக்கும். இன்னும் கொஞ்சம் பொறுப்பா படிச்சுருக்கலாமே’’ என்று ரிசல்ட் வந்தபிறகு புலம்ப வைப்பார். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார், சனி பகவான்.

சரி, இதற்கு என்னதான் செய்வது?

குழந்தைகளை விட்டுப் பிடியுங்கள். நீ இப்படிப் பண்ணா இதுதான் ரிசல்ட் என்று அன்பை மனதிற்குள் பூட்டி, வெளியே கண்டிப்பு காட்டுங்கள். சனி நேர்மறையாக மாறுவார். சனி தர்ம தேவன். அதர்மத்தில் திருப்பிவிட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும்.

அடுத்ததாக இரண்டாவது சுற்று! இருபத்தேழு வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும், அதற்கு பொங்கு சனி என்று பெயர். பறித்தல், பாதுகாத்தல், பலமடங்காக பெருக்கித்தருதல். இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவானம் போல பொங்க வைக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் கெடுக்கும். அதனால், கொடுத்துக் கெடுப்பவர்; கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு. ‘‘ஒண்ணுமே இல்லாத ஓட்டாண்டியா வந்தான். இப்போ உசரத்துக்கு போயிட்டான்’’ என்பார்கள். காசு, பணம், பதவி, கல்யாணம், சொத்து, சுகம் எல்லாவற்றையும் கொடுப்பார். ஆனால், நடுவில் பிடுங்கிக் கொள்வார்.

ஏன் இப்படி எடுத்துக் கொள்கிறார்? யாரிடமிருந்து பறித்துக் கொள்வார்?

‘‘என்னால்தான் எல்லாமும் நடக்கிறது. எனக்கு மிஞ்சி என்ன இருக்கு’’ என்று ஆணவத்தோடு பேசுவோரின் அனைத்து செல்வங்களையும் பறிக்கிறார். ஏனெனில், இந்த இரண்டாவது சுற்றின்போது சிலர், மிதமிஞ்சிய செல்வ வளத்தால் பிரச்னைகளை உருவாக்குவார்கள். ‘‘நான் யார் தெரியுமா?’’ என்று செல்வாக்கை நிரூபிக்கத் துணிவார்கள். தான்தான் பெரிய ஆள் என்று தன்னடக்கமற்ற மனோநிலையில் திரிவார்கள். அப்படி மாறிய அடுத்த நிமிடமே, ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார் சனி. பழைய நிலைக்கே கொண்டு செல்லத் திட்டமிடுவார். ஆகவே, கவனமாக இருங்கள். பேச்சிலோ, செயலிலோ கர்வக் கொம்பு முளைத்தால் கொடுத்ததைப் பிடுங்கத் தயங்க மாட்டார். சனி பகவான் வந்தால்தான் நம் அறிவுக்கும், சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கின்றன என்பதை உணர்வோம்.

‘‘நம்ம கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவமும் புரியும். எதுவும் இல்லாதபோது இருந்த வீரமெல்லாம், எல்லாமும் வந்த பிறகு போய்விடும். ‘‘நாலு பேர் என்ன நினைப்பாங்க’’ என்றே, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் தெரியாமல் ஓரமாக உட்கார்ந்து உள்ளுக்குள் அழ வைப்பார். ஏழரைச் சனியின்போது முடிந்தவரை கோர்ட், கேஸ் என்று போகக் கூடாது. பத்து லட்ச ரூபாய் பொருளுக்காக காக்கிக்கும், கறுப்புக்கும் இருபது லட்ச ரூபாய் செலவு செய்வீர்கள். எல்லா வி.ஐ.பி.யையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனா, ‘‘இந்த விஷயத்தைப் போய் நாம எப்படி சொல்றது? என்னை தப்பா நினைச்சிட்டா…’’ என்று தயங்குவீர்கள்.

பிறகு எப்படித்தான் இருக்க வேண்டும்?

வசதி வரும்போது எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருங்கள். கூழ் கிடைத்தாலும் குடியுங்கள். ஸ்டார் ஹோட்டலில் இருந்தாலும் குடிசை மனோநிலையிலேயே இருங்கள். அத்தனைக்கும் ஆசைப்பட்டு, வாரிச் சுருட்டும்போது சனி பகவான் சும்மாயிருக்க மாட்டார். அமைதியாக இருந்தால், வேலை பார்த்த நிறுவனத்தையே விலை பேசும் நிலைக்கு உயர்த்துவார். இந்த இரண்டாவது சுற்றில்தான் வியாபாரம் விருத்தியாகும். அதனால் தைரியமாக தொழில் தொடங்கலாம். ‘‘ரெண்டாவது ரவுண்டுல ரெட்டிப்பு வருமானம்’’ என்றொரு வாக்கியம் உள்ளது. ஆனால் பாதை மாறினால், அதலபாதாளம்தான். தவறான வாய்ப்புகள் வந்தாலும், திசை மாறக் கூடாது.

‘‘சார்… நம்ம தொழிலுக்கு மார்க்கெட்ல தனி மவுசு இருக்கு. அதனால டூப்ளிகேட்டையும் கலந்து விடுவோம்’’ என்று சனி சிலரை அனுப்பி சோதிப்பார். ஏனெனில், ஒரு மனிதனின் மனதை சோதித்துப் பார்ப்பதில் இவருக்கு நிகர் எவருமில்லை. நேர்மை என்கிற வார்த்தையை கல்வெட்டாக மனதில் பதித்துக் கொள்ளுங்கள். ஏழரை சனியின் முடிவில் நீங்கள்தான் அந்த வட்டாரத்தின் முக்கியஸ்தர். செல்வந்தர்.

இன்னொரு விஷயம்… நம்பிக்கைத் துரோகம் செய்தவர்களை பார்த்து துடிக்காதீர்கள். டென்ஷன் ஆகாதீர்கள். ஆரோக்கியம் பாதிக்கும். ஏழரை சனியில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும், அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அது பூர்வஜென்மத் தொடர்பு என்பதாகவே எடுத்துக் கொள்ளுங்கள். ஜென்ம சனியின்போது பார்ட்டி, கேளிக்கைகளை குறைத்துக் கொள்ளுங்கள். எல்லோரும் எது எதுவோ சாப்பிடும்போது, தயிர் சாதத்தோடு அமைதியாக இருங்கள். எல்லாவற்றிலும் எல்லை தாண்டக் கூடாது. எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்று இருக்கக் கூடாது. சனி பகவான், ‘‘நீ போய் கேளு. அவர் தர்றாரா இல்லையான்னு பார்க்கறேன்’’ என்று சிலரை அனுப்பி வைப்பார். பிரதிபலன் பாராமல் உதவிகள் செய்தால், பொங்குசனி நல்ல பலன்களைக் கொடுக்கும்.

அடுத்து மூன்றாவது சுற்று. கிட்டத்தட்ட ஐம்பது வயதைத் தாண்டி வரும் ஏழரை சனி. இதுதான் உங்களுக்கு கடைசிச் சனி என்று யாராவது பயமுறுத்தினால் கலங்காதீர்கள். படபடப்பையும் பயத்தையும் தரும் சுற்று இது. உங்களை முடக்க முயற்சி செய்யும். அதற்குள், உங்களையும் மீறி ஒரு கட்டுப்பாடு உள்ளுக்குள் வந்துவிட வேண்டும். ‘‘காலையில நாலு இட்லி சாப்பிடுவேன்’’ என்றால், அதை மூன்றாக்கி, அப்புறம் இரண்டே போதும் என்று நிறுத்திக் கொள்ளும் தெளிவு வேண்டும். அவ்வளவுதான்… அதீத இயக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தன்னை தாழ்த்தி, உயர்த்திக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். மருமகள் மார்க்கெட்டிற்கு போகத் தயாராக இருந்தால், பையை எடுத்துக் கொண்டு தான்போய் வாங்கிக் கொண்டு வரவேண்டும். எது நடந்தாலும் குற்றத்தைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. இள வட்டங்கள் ஏளனமாகப் பேசும். இந்த மூன்றாவது சனியில் முதல் மரியாதையை எதிர்பார்க்கக் கூடாது. ‘‘எங்க போறாங்கன்னு எங்கிட்ட சொல்றதேயில்லை’’ என்று அடிக்கடி சொல்லக் கூடாது. வீட்டில் தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது என்று நினைக்க வேண்டாம். ‘‘நான் எவ்ளோ பெரிய போஸ்ட்டுல இருந்தேன்’’ என்றெல்லாம் வீட்டை அலுவலகமாக பார்க்கக் கூடாது. ஆடையைத் துறந்தால் மகாத்மா ஆகலாம். ஆசைகளைத் துறந்தால் புத்தன் ஆகலாம் என்பதை இந்த சுற்றில் மறக்காதீர்கள். எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள். உங்களை சனி உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பார்.

ஏழரைச் சனியில் எப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று திரும்பத் திரும்ப சந்தேகம் வருகிறதா? ஏழரையில் மனசாட்சிக்கு பயப்படுங்கள். மனசாட்சியை மீறி எது செய்தாலும் சனியின் பாதிப்பிற்கு ஆளாவீர்கள். உங்கள் மனசாட்சி வேறல்ல. சனி பகவான் வேறல்ல என்பதை நீங்களே அறிவீர்கள். தடுக்கி விழுந்த குழந்தையை தூக்கி விடுவதைப் போல, ஆங்காங்கு கோயில்களில் வீற்றிருக்கும் இறைவனே மனிதர்களைத் தூக்கி நிறுத்துகிறார். ‘‘என்னைப் பார்த்து பயப்படாதீர்கள். நான் எத்தனை கருணைமிக்கவன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்’’ என்கிற விதமாக சனி பகவான் பல்வேறு தலங்களில் எழுந்தருளி இருக்கிறார். அப்படித்தான் திருநள்ளாறு தலத்திலும், திருவாரூர் – திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள திருக்கொள்ளிக்காடு தலத்திலும் பேரருள் புரிகிறார். இந்த தலங்களுக்கு சென்று வாருங்கள். பிரச்னைகளெல்லாம் எப்படித் தீர்கிறது என்று பாருங்கள்.

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வரும் பிரச்னைகளுக்கு தீர்வுகளைத் தேடி வந்தோம். ‘முட்ட முட்டப் பஞ்சமே ஆனாலும் பாரம் அவனுக்கு அன்னாய் நெஞ்சமே அஞ்சாதே நீ’ என்கிறாள் ஔவை பாட்டி. ‘‘மிகவும் கடுமையான பஞ்சமாக இருந்தாலும், பிரச்னைகள் துரத்தினாலும், நம்மைப் பாதுகாக்கும் பொறுப்பு ஈசனுடையது என்பதை நெஞ்சமே நீ மறக்காதே’’ என்கிறாள். எனவே, எத்தனை பிரச்னைகள் வந்தாலும் இறைவனை சரணாகதி செய்வோம்.

You may also like

Leave a Comment

four × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi