ரயில்வே உள்ளிட்ட பல்வேறு அரசு துறையில் பழைய ஓய்வூதியம் அமல்படுத்த போராட்டத்தை வலுப்படுத்துவோம்: சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் பேச்சு

சென்னை: ரயில்வே உள்ளிட்ட பல்வேறு அரசு துறையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த போராட்டத்தை வலுப்படுத்துவோம் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தெரிவித்துள்ளார். ரயில்வே உள்ளிட்ட அரசு துறையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பணியிடங்களை பறிப்பதை கைவிட்டு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிஆர்இயு மற்றும் சிஐடியு இணைந்து சென்னை சென்ட்ரல் அருகே டிஆர்இயு செயல் தலைவர் அ.ஜானகிராமன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில், சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் அரசியல் கட்சிகள் இந்த கோரிக்கையை ஏற்க வேண்டிய நிர்பந்தம் உருவாகி உள்ளது. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சட்டீஷ்கர் போன்ற மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். அதற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்திற்காக மாநில அரசுகள் கொடுத்த தொகையை ஒன்றிய அரசு திருப்பி தர மறுக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டம் அமலாக்கம் சாத்தியமே இல்லை என்று பாஜக நாடாளுமன்றத்தில் கூறுகிறது. இதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை ஏற்றுக் கொண்ட அரசுகளால் அமல்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனை முறியடிக்க நமது போராட்டத்தை வலுப்படுத்துவோம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் டிஆர்இயு பொதுச் செயலாளர் வி.ஹரிலால், ஓய்வூதியர் சங்க தலைவர் ஆர்.இளங்கோவன், ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் சத்யமூர்த்தி, ஐஆர்டிஎஸ்ஏ பொதுச் செயலாளர் கே.வி.ரமேஷ், ஏஐஎல்ஆர்எஸ்ஏ பொதுச் செயலாளர் கே.சி.ஜேம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

போலி சான்றுகள் விற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்