வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தொடர்: ஹர்திக் பாண்டியாவை டெஸ்ட் அணியில் சேர்க்க பிசிசிஐ திட்டம்

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலில் இந்தியா தோல்வியை சந்தித்த நிலையில் ஒரு மாத ஓய்வுக்கு பின் அடுத்த மாதம் வெஸ்ட்இண்டீஸ் செல்கிறது. அங்கு 2 டெஸ்ட், 3 ஒன்டே, 5 டி.20 போட்டிகளில் ஆட உள்ளது. இதற்காக இந்திய அணி அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது. இதில் அதிரடி மாற்றங்கள் இருக்கலாம். ரோகித்சர்மா இந்த தொடருடன் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெறலாம். கோஹ்லி, கில், ரகானே தங்கள் இடத்தை தக்க வைத்தாலும் புஜாராவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். கடந்த 2020ம் ஆண்டு முதல் 28 டெஸ்ட்டில் 52 இன்னிங்சில் அவர் ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார். சராசரி 29.69 என மோசமாக உள்ளது.

விக்கெட் கீப்பர் பரத்திற்கு கல்தா கொடுக்கப்படுகிறது. அவருக்கு பதிலாக ஆடும் லெவனில் இஷான்கிஷன் இடம்பிடிப்பார். ரிஷப் பன்ட் இல்லாத நிலையில் மற்றொரு விக்கெட் கீப்பராக சகாவை பரிசீலிக்க வாய்ப்பு உள்ளது. சர்ப்ராஸ்கான், சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால் ஆகியோரும் 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படுவார்கள் என தெரிகிறது. பவுலிங்கில் உமேஷ் யாதவிற்கு பதில் முகேஷ்குமாருக்கு இடம் கிடைக்கும். முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.

இதனிடையே ஆல்ரவுண்டர் ஹர்திக்பாண்டியாவை டெஸ்ட் அணியில் சேர்க்க பிசிசிஐ ஆர்வமாக உள்ளது. கடைசியாக அவர் 2018ம் ஆண்டு இங்கிலாந்துடன் டெஸ்ட்டில் ஆடினார். காயத்தில் இருந்து அவர் மீண்டுள்ள நிலையில் 5 ஆண்டுக்கு பின் அவர் மீண்டும் சேர்க்கப்படுவார் என தெரிகிறது. இருப்பினும் 50 ஓவர் உலக கோப்பையை கருத்தில் கொண்டு அவரை தேர்வு செய்வதுகுறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படும் என பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலி அளித்துள்ள பேட்டியில், “ஒரு தோல்வி எந்த வீரரின் திறமையையும் முடிவு செய்திடாது. புஜாரா, ரோகித் சர்மா இன்னும் சில ஆண்டுகள் விளையாடலாம். கோஹ்லிக்கு 34 வயது தான் ஆகிறது. அவரும் தொடர்ந்து விளையாட வேண்டும். அணியில் ரிசர்வ் வரிசையில் பலம் மிக்க வீரர்கள் இருக்கின்றனர். அணியின் எதிர்காலமும் பலம் மிக்கதாகவே இருக்கிறது. ஹர்திக் பாண்டியா டெஸ்ட் அணிக்குள் வர முயற்சிக்க வேண்டும்” என்றார்.

Related posts

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி