மேற்கு வங்கத்தில் ரெய்டுக்கு சென்ற ஈடி அதிகாரிகள் மீது அடுத்தடுத்து தாக்குதல்: திரிணாமுல் காங். நிர்வாகி கைது

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் சோதனையிடச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனையை தொடர்ந்து ஒருவர் கைதாகி உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் ரேஷன் ஊழல் தொடர்பாக மாநில உணவுத்துறை அமைச்சராக இருந்த ஜோதிபிரியா மல்லிக்கை கடந்த ஆண்டு அமலாக்கத்துறை கைது செய்தது. மல்லிக்கிற்கு நெருக்கமானவரான ஷேக் ஷாஜகானுக்கு சொந்தமான வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டம் சந்தேஷ்காலி பகுதியில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

அப்போது, திரிணாமுல் தொண்டர்களால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டனர். காயமடைந்த 3 அதிகாரிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே விவகாரம் தொடர்பாக வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் போங்கான் நகராட்சியின் முன்னாள் தலைவரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சங்கர் ஆதியா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். சுமார் 17 மணி நேரம் இச்சோதனை நடந்த நிலையில் இங்கும் அமலாக்கத்துறையினர் வந்த வாகனங்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதைத் தொடர்ந்து, சங்கர் ஆதியாவை அமலாக்கத்துறையினர் நேற்று கைது செய்தனர். இந்த விவகாரம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள ஷேக் ஷாஜகான் வெளிநாடு தப்பியிருக்கலாம் என்பதால் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்