மரண தண்டனை அளிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு உருவாக்காதது ஏன்? மேற்குவங்கம் எரிந்தால் அசாம், பீகார் ஜார்க்கண்ட், ஒடிசா, டெல்லியும் எரியும்: முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை

கொல்கத்தா: குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு உருவாக்காதது ஏன்? மேற்கு வங்கம் எரிந்தால் அசாம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, டெல்லியும் எரியும் என்று அம்மாநில முதல்வர் எச்சரித்துள்ளார். மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இதை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜ நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தியது. அதேநேரம் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வருமாறு ஒன்றிய அரசை, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி வருகிறார். ஆனால் சட்டம் கொண்டு வராமல், பாஜவினர் முழு அடைப்பு நடத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அணியின் 27வது நிறுவன தினம் நேற்று நடந்தது. இதில், முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:

மேற்குவங்க மாநிலம் எரிந்தால் அசாம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களும் எரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எங்கள் அரசுக்கு எதிராக பிரதமர் மோடியும், பாஜவும் கடந்த 2014ம் ஆண்டு முதலே சதியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில அரசை சீர்குலைக்க எடுக்கப்படும் எந்த முயற்சியையும் தடுத்து நிறுத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

பெண் டாக்டர் கொலைக்கு எதிராக போராடும் டாக்டர்களுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையையும் நாங்கள் எடுக்கவில்லை. இந்த வழக்கு விசாரணை சிபிஐயிடம் இருக்கிறது. எனவே நோயாளிகளின் துயரை கருத்தில் கொண்டு, டாக்டர்கள் படிப்படியாக பணிக்கு திரும்ப வேண்டும்.

பெண் டாக்டர் கொலை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். குற்றவாளியை தூக்கிலிட விரும்புகிறோம். ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு உருவாக்காதது ஏன்? என்னிடம் அதிகாரம் இருந்தால், ஒரு வாரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவேன். அடுத்த வாரம் சட்டசபை கூட்டத் தொடரை நடத்தி, குற்றவாளிகளுக்கு 10 நாட்களுக்குள் மரண தண்டனை வழங்கும் மசோதாவை நிறைவேற்றுவோம்.

பின்னர் அதை கவர்னருக்கு அனுப்பி வைப்போம். அவர் ஒப்புதல் அளிக்காவிட்டால், கவர்னர் மாளிகைக்கு வெளியே தர்ணா போராட்டம் நடத்துவோம். நாங்கள் முழு அடைப்பை ஆதரிக்கவில்லை. இந்த தினத்தை அந்த டாக்டருக்கு அர்ப்பணிக்கிறோம். நாங்கள் நீதி கேட்கிறோம், பாஜ முழு அடைப்பை நடத்துகிறது. பிணத்தின் மீது அரசியல் செய்கிறது. மணிப்பூரில் நடந்த சம்பவங்களுக்காக பதவி விலகாத பிரதமர் மோடிக்கு எதிராகத்தான் முதலில் முழு அடைப்பு போராட்டம் நடத்த வேண்டும்.

Related posts

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் புரட்டாசி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரோப்கார் இயங்கும் நேரம் அதிகரிப்பு: பக்தர்கள் அதிகளவில் வருவதால் ஏற்பாடு

ஒன்றிய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டியால் பன்’ மட்டுமல்ல பனியன்’ தொழிலும் பாதிப்பு

ஓணம், மிலாது நபி விடுமுறையால் களை கட்டியது கன்னியாகுமரியில் 3 நாட்களில் 25 ஆயிரம் பேர் படகுசவாரி: குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம்