மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு; தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் 25ம் தேதி வரை பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக குறைய தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. வெப்பநிலையை பொறுத்தவரையில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது. தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் சராசரியாக 90 டிகிரி முதல் 100 டிகிரியும், வட தமிழக கடலோரப் பகுதிகளில் 90 டிகிரிக்கு கீழும், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் 80 டிகிரி முதல் 90 டிகிரி வரையும் வெயில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, மாவட்டங்களின் மலைப் பகுதிகள் கன்னியாகுமரி மாவட்டம் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் வாய்ப்புள்ளது. அதேபோல 23ம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர் தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

அதை தொடர்ந்து, 25ம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதேபோல 25ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியசை விட அதிகமாகவும் இருக்கும். சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், குமரிக் கடல் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது