மேற்கு மாம்பலத்தில் ஒரு கார்டன் கஃபே!

ஆர்கானிக்கில் ஐஸ்கிரீம், பீட்சா…இயற்கைச் சூழல்தான் இன்டீரியர்…

இந்த நவீன உலகம் எந்திர மயமாகிவிட்டது. காலை எழுவது முதல் மாலையில் தூங்கப்போகும் வரை ஏதோ ஒரு சிந்தனையுடன் பரபரப்பாகவே இயங்க வேண்டியிருக்கிறது. இந்தச் சூழலில் கிடைக்கும் ஒரு சில தருணங்களையாவது நமக்கானதாக்கிக் கொள்ள வேண்டும். மற்ற விசயங்களில் எப்படியோ சாப்பிடும்போதாவது கொஞ்சம் ரிலாக்சாக இருப்போம் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். சில ஹோட்டல்களுக்கு சாப்பிடச் சென்றால் ஒரே இரைச்சலாகவும், பரபரப்பாகவும் இருக்கும். இதுபோன்ற சூழல் வேண்டாம் என நினைப்பவர்களுக்காகவே தற்போது கார்டன் ரெஸ்டாரென்ட், ரூஃப் டாப் ரெஸ்டாரென்ட் என சில வித்தியாசமான உணவகங்கள் தொடங்கப்பட்டு, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதே காரணங்களை முன்வைத்து சென்னையில் உள்ள பல உணவகங்கள் இண்டீரியருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. குழந்தைகளைக் கவரும் வகையில் கோஸ்ட் செட்டப் இண்டீரியர் அமைக்கிறார்கள். வித்தியாசமான சூழல் வேண்டும் என்பதற்காக டார்க் நைட் இண்டீரியர், ரூஃப் டாப் இன்டீரியரில் கலக்குகிறார்கள். நமது பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் மண்பானைகள், லாந்தர் விளக்குகளைக் கொண்டு ஒரு கிராமத்து ஃபீலைத் தருகிறார்கள்.

இந்த வரிசையில் ஒரு தோட்டத்திற்குள் அமர்ந்து சாப்பிடுவது போன்ற உணர்வைத் தரும் வகையில் உருவாகி இருக்கிறது ஒரு உணவகம். மேற்கு மாம்பலம் காமாட்சிபுரம், சர்வமங்கல காலனியில், பலவகையான செடிகள், மரங்கள், மீன் தொட்டிகள், ஊஞ்சல் என ஒரு இயற்கையான தோட்டத்தைப்போலவே உருவாகி இருக்கும் இந்த உணவகத்தின் பெயர் தி இன்டீ ஃப்ரோஸ்ட் (THE INDIE FROST). இந்த உணவகத்தின் உரிமையாளர்திவ்யாவை சந்தித்தோம். “எது செய்தாலும் அதில் ஏதாவது ஸ்பெஷல் இருக்க வேண்டும் என்று எப்போதும் நினைப்பேன். வழக்கமாக மற்ற இடங்களில் கிடைக்கும் உணவுகளையோ அல்லது மற்ற உணவகங்களைப் போல இண்டீரியரையோ உருவாக்காமல் இயற்கையான சூழலில் டிப்ரண்டான உணவுகளைக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அந்த யோசனையில் உருவானதுதான் இந்த இன்டி ஃப்ரோஸ்ட் கபே’’ என கடை துவக்கிய கதையோடு ஆரம்பித்த திவ்யா, தொடர்ந்து பேசினார். “சென்னைதான் எனக்கு பூர்வீகம். பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே இங்குதான். படித்து முடித்துவிட்டு பெங்களூரில் ஐடி துறையில் வேலை பார்த்தேன். கொரோனா நேரத்தில் அனைவருமே வீட்டில் இருக்கும்படியான சூழல் உருவானது.

அந்த நேரத்தில்தான் நான் கஃபே ஒன்றைத் தொடங்கலாமென யோசித்தேன். என்னதான் பெரிய வேலையெல்லாம் பார்த்து வந்தாலும் இந்த மாதிரியான நேரத்தில் வேலை முக்கியம் இல்லை, ஆரோக்கியமான உணவுதான் முக்கியம் என்று தோன்றியது. இதனால் உடனே நானும் என் கணவரும் ஆரோக்கியமான உணவை, ஆரோக்கியமான சூழல்ல கொடுக்கணும்னு நினைச்சோம். அந்த எண்ணத்தை இந்த கார்டன் டைப் கஃபேவில்செயல்படுத்தினோம்.இந்த கஃபே மனுசங்க மட்டும் கொண்டாடுற மாதிரியான இடமா இல்லாம, பெட் ஃப்ரெண்ட்லியாவும் இருக்கணும் என முடிவெடுத்தோம். அதனால பெட்ஸ் வருவதற்கு அனுமதி கொடுத்திருக்கோம். சென்னையில் பல நூறு உணவகங்கள் இருந்தாலும் எந்த உணவகத்திலும் பெட்ஸ் அலவ் பண்ண மாட்டாங்க. ஆனா, நாங்க அந்த மாதிரி எந்த கண்டிஷனும் இல்லாம எல்லாரையும் வரவேற்கிறோம். பலர் குடும்பத்தோடு இந்த கார்டன் கஃபேக்கு வந்து அவங்க பெட்ஸோட சேர்ந்து கொண்டாட்டமா இருக்காங்க. இந்த கஃபே இருக்கிற சூழல், சுற்றிலும் செடிகள் நிரம்பி, அமைதியாகவும் இருக்கிறதால பல டைரக்டர்ஸ், ஸ்கிரிப்ட் ரைட்டர்ஸ் எல்லாம் இங்க வந்து அவங்களோட கதையை, ஸ்கிரிப்டை எழுதிட்டுப் போறாங்க. அந்தளவிற்கு அனை வரும் விரும்பும் இடமாகவும் இந்த கஃபே இருக்கு.

இங்க இருக்குற ஒவ்வொரு செடி, மரமும் ஆக்ஸிஜன் அதிகமாக தரும் வகையில இருக்கும். மரம், செடிகள் அனைத்தையுமே தேடித்தேடி வாங்கி வந்து இந்த கஃபேயை உருவாக்கி இருக்கிறோம். கேரளாவில் இருந்தெல்லாம் பல செடிகள் கொண்டுவந்து இங்க வச்சிருக்கோம்.நம்ம கஃபேல அனைத்துமே சைவத்தில்தான் இருக்கும். அதுவும் ஆர்கானிக் முறையில்தான் தயாரிக்கிறோம். பீட்ஸா, பர்கர், மோமோஸ், ஆர்கானிக் வொய்ன், ஸ்டார்டர்ஸ், ஐஸ்கிரீம்ஸ், ஜெலட்டோ ஐஸ்கிரீம்ஸ் என அனைத்துமே கொடுத்து வருகிறோம். எந்த உணவிலுமே வெள்ளை சர்க்கரை பயன்படுத்துவது கிடையாது. அதேமாதிரி, நிறத்திற்காகவோ, சுவைக்காகவோ எதுவும் சேர்ப்பது கிடையாது. வாங்கும் பொருட்களில் இருந்து சமைக்கப்படும் விதம் வரை அனைத்திலுமே ஆரோக்கியம் இருக்கும் வகையில் கவனமாக இருக்கிறோம். நமது கஃபேயில் ஸ்டார்டர்ஸில் பல வெரைட்டிகள் இருக்கு. வெஜ் ப்ளேட்டர், சில்லி சீஸ் டோஸ்ட், ப்ரென்ஜ் ஃப்ரைஸ், பெரி பெரி ஃப்ரைஸ், சீஸி ஃப்ரைஸ், கார்ன் சீஸ் நக்கட்ஸ், பீனட் ட்விஸ்ட், சீஸ் அன்ட் கார்லிக் டோஸ்ட், மசாலா சீஸ் என பலவகையான ஸ்டார்டர்ஸ் இருக்கு. அதேபோல சாண்ட்விச்சிலும் பல வெரைட்டிகள் இருக்கு. தந்தூரி பன்னீர் சாண்ட்விச், கார்ன் மாயோ சாண்ட்விச், மஷ்ரூம் அன்ட் சீஸ், பாம்பே சாண்ட்விச், கிரில்ட் பேபி கார்ன் சாண்ட்விச் அதுபோக இண்டி ஃப்ரோஸ்ட் ஸ்பெஷல் சாண்ட்விச்னு பல ரகம் இருக்கு.

கிளாஸிக் வெஜ் பர்கர், சீஸி வெஜ் பர்கர், பெரி பெரி வெஜ் பர்கர், பன்னீர் டிக்கா மோமோ பர்கர், கார்ன் சீஸ் மோமோ பர்கர், பைனாப்பிள் பர்கர் என இன்னும் பல வெரைட்டிகள் இருக்கு. இவை அனைத்துமே ஆர்கானிக்காவும்,ஹெல்த்தியாவும் தயார் செய்து கொடுக்கிறோம். குழைந்தைகளுக்குப் பிடித்த பல வகையான டிஷ் இங்க இருக்கு. ஒவ்வொரு உணவுமே ஒவ்வொரு ஸ்பெஷல். வெஜ்ல எந்த அளவிற்கு எல்லா வெரைட்டிலயும் கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு கொடுத்து வரோம். நம்ம கஃபேல எல்லோரும் விரும்பி சாப்பிடுவது பாஸ்தா தான். பாஸ்தா லவ்வர்ஸ் பலரும் இங்க வந்து சாப்பிட்டுப் போறாங்க. ஸ்பைசி பாஸ்தா, சீஸி வொய்ட் பாஸ்தா, கிரீமி வொய்ட் பாஸ்தா, ரெட் சாஸ் பாஸ்தா என இன்னும் பல வெரைட்டிகளில் பாஸ்தாஸ் கிடைக்கிறது. இதேபோலதான் பீட்சாவும். அனைத்து வகையான பீட்சாவும் ஆர்கானிக் தான். பீட்சா தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் ஆர்கானிக்ல பார்த்து வாங்கிறோம். பைன் ஆப்பிள் வித் பன்னீர் பீட்ஸா, மஸ்ரூம் பீட்சா, மஸ்ரூம் டிக்கா பீட்ஸா என பல வெரைட்டிகளில் பீட்ஸா கிடைக்கிறது.

அதேபோல மோமோஸும் கொடுத்து வருகிறோம். வெஜ் மோமோஸ்ல பல வெரைட்டி இருக்கு. செஸ்வான் மோமோ, பன்னீர் மோமோ, ஃப்ரைடு மோமோஸ் என இன்னும் பல மோமோஸ் இருக்கு. நம்ம கஃபேயோட சிக்னேச்சர்னா அது இண்டி ஷோட்ஜ் தான். அதாவது நமது கஃபேயோட பெயரில் நாமளே கொண்டுவந்த புதுவகையான ஜெலட்டோஸ் ஐஸ்கிரீம் இது. இந்த ஐஸ்கிரீம் கூட ஆர்கானிக்தான். எந்த விதமான கலரும் சேர்க்காம புரூட்ஸ்ல இருந்து நேரடியா தயாரிக்கிற ஐஸ்கிரீம்ஸ். வயதானவங்க எடுத்துக்கிட்டாலும் ஒன்னும் ஆகாது. அந்தளவிற்கு, ப்யூர் ஐஸ்கிரீம்ஸ். வெளிநாட்டு உணவுகளை நம்ம ஊர் ஸ்டைல்ல அதுவும் ஒரு தோட்டத்தில் இருந்து சாப்பிட விரும்புறவங்க நிறைய பேர் இங்க வராங்க. உணவுல எந்த அளவு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமோ அதேயளவு அதை சாப்பிட வேண்டிய இடமும் சுத்தமாக மனதிற்கு பிடித்த மாதிரியாக இருக்க வேண்டும். இந்த இரண்டையும் ஒரே இடத்தில் கொடுக்கும் நோக்கத்தில்தான் இந்த கஃபேயை தொடங்கினோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. வேறென்ன சார் வேணும்!’’ என கேட்கும் திவ்யாவின் முகத்தில் பூரிப்பு மின்னுகிறது.

– ச.விவேக்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

Related posts

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்