நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பெண்கள் முன்னேற்றம் அடைய முக்கிய காரணம் திமுக அரசு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: பெண்கள் முன்னேற்றம் அடைய முக்கிய காரணம் திமுக அரசு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சமூக நலன் மற்றும் உரிமைத் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 4 வகை திருமண உதவி திட்ட பயனாளிகள் 551 பேருக்கு 8 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவி, மொத்தம் 781 பயனாளிகளுக்கு ரு.5 கோடியே 83 லட்சத்தில் 66 ஆயிரத்து 301 மற்றும் சமூக நலத்துறையில் புதிதாக பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதுதவிர முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வைப்புத் தொகை சான்றிதழ், வைப்புத் தொகை முதிர்வு பெற்ற பயனாளிகளுக்கு காசோலை, திருநங்கை முன்னேற்றத்திற்கான உதவித்தொகை, தையல் இயந்திரங்கள், சத்துணவு திட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கு பென்ஷன் காசோலை போன்றவற்றையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: பெண்களுக்காக கலைஞர் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.

குறிப்பாக 8ம் வகுப்பு படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். 35 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை கொண்டு வந்தார். பெண்களுக்கு இலவச காஸ் சிலிண்டர் வழங்கினார். இப்படி பல்வேறு திட்டங்களை பெண்களுக்காக கொண்டு வந்தவர் கலைஞர். தற்போது தமிழக முதல்வர் பெண்கள் உரிமை தொகை, பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், புதுமை பெண் திட்டம், இப்படி திமுக ஆட்சியில் பெண்களுக்கு கல்வி, பொருளாதாரம், முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இன்று தமிழகத்தில் எல்லா துறைகளிலும் பெண்கள் சாதித்து வருவதற்கு திமுக அரசுதான் காரணம். புதுமைப்பெண் திட்டத்தில் கடந்த இரண்டரை வருடங்களில் 2 லட்சத்து 71 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். திருநங்கைகள், திருநம்பிகள் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் கொண்டு வந்து உதவிகள் செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் 43 சதவீத பெண்கள் பணிபுரிகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, எம்பி தயாநிதி மாறன், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றி அழகன், துணை மேயர் மகேஷ்குமார், மண்டல குழு தலைவர் ராமுலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தயாளுஅம்மாள் அறக்கட்டளை சார்பில் சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பயிற்சி முடித்த 250 பெண்களுக்கு தையல் இயந்திரம், மடிக்கணினியை அமைச்சர் வழங்கினார்.

 

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா