வாரம் ஒருநாள் மட்டுமே பள்ளிக்கு வருகிறார்: தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி மாணவர்கள் திடீர் போராட்டம்

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே பள்ளி தலைமையாசிரியரை மாற்றக்கோரி மாணவர்கள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சியில் உள்ள நடுநிலை பள்ளியில் 165 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமையாசிரியராக விஜயநந்தினி உள்பட 8 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்றுகாலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, பள்ளியின் இரும்பு கேட்டை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தலைமையாசிரியரை மாற்றவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள், ‘தலைமையாசிரியை விஜயநந்தினி வாரத்திற்கு ஒருமுறை மட்டும்தான் பள்ளிக்கு வருகிறார். வகுப்புகளை சரிவர எடுப்பதில்லை. மற்ற ஆசிரியர்களையும் தரக்குறைவாக பேசி வருகிறார். பள்ளி தொடங்கி ஒருமாதம் ஆகியும் ஒரு பாடத்தைகூட முடிக்கவில்லை.

அவரது தனிப்பட்ட தேவைக்கான பொருட்களை வாங்கி வரும்படி எங்களை கடைகளுக்கு அனுப்பி வைத்து வேலை வாங்கி வருகிறார். இதனால் எங்களது கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே அவரை உடனடியாக மாற்றிவிட்டு வேறு தலைமையாசிரியரை நியமிக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர்.இதுகுறித்து பிடிஓ ராஜேந்திரன் மற்றும் போலீசார், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமையாசிரியரை மாற்றக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது

விவசாயம், பொதுமக்களுக்கு பயன்படும் பால்குளம் ரூ.90 லட்சம் செலவில் சீரமைப்பு

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்