கல்யாண சமையல் சாதம்…வீக் எண்டில் பிரமாதம்!

ட்ரெண்டிங் ஆகுது பக்கெட் ரைஸ்

சென்னை மயிலாப்பூர், பி.எஸ். சிவசாமி சாலையில் சைனீஸ் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில், முழுக்க முழுக்க சைவ உணவகமாக இயங்கி வருகிறது கிட்டு மாமா வீட்டுச் சாப்பாடு உணவகம். கடந்த எட்டு ஆண்டுகளாக பெட்ரினோஸ் என்ற பெயரில் இத்தாலியன், சைனீஸ் உணவகமாக இருந்த இந்த உணவகம் தற்போது, கிட்டு மாமா வீட்டு சாப்பாடு என்ற பெயரில் உருமாறி இருக்கிறது. இந்த உணவகத்தின் நிறுவனர் வீணா கிருஷ்ணமூர்த்தி நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். “தற்போது எங்கள் உணவகம் இருக்கும் இடம் எங்களுக்கு சொந்தமான இடம். இதனை ரெஸ்டாரண்ட் நடத்துவதற்காக அவ்வப்போது பலரும் வாடகைக்கு கேட்டார்கள். அந்த சமயத்தில் எங்களுக்கும் சொந்தமாக பிசினஸ் தொடங்கும் எண்ணம் இருந்ததால் நாமே ஒரு உணவகம் தொடங்கினால் என்ன? என்று தோன்றியது. அந்த சமயத்தில் எனது கணவர் இன்டீரியர் டிசைனராக துபாயில் வேலையில் இருந்தார்.

அங்கே அவருக்கு இத்தாலியன், சைனீஸ் உணவுகளை தயாரிக்கும் கான்டினட்டல் ஃசெப் ஒருவர் நண்பர் ஆனார். அவருடைய உதவியுடன் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரினோஸ் என்ற பெயரில் இத்தாலியன், சைனீஸ் என கான்டினன்டல் உணவகமாக இந்த உணவகத்தைத் தொடங்கினோம். மாலை நேரத்தில் மட்டுமே இயங்கிவந்தது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கி நன்றாக போய்க் கொண்டிருந்தது. இந்த நிலையில் உணவகம் அருகில், திடீரென சாலை பராமரிப்பு பணிக்காக சாலையை முழுவதுமாக தோண்டி போட்டுவிட்டார்கள். இதனால் சிறிது காலமாக உணவகத்தை நிறுத்தி வைத்திருந்தோம். தற்போது பராமரிப்புப் பணிகள் எல்லாம் முடிந்துவிட்டதால், மீண்டும் உணவகத்தைத் திறந்திருக்கிறோம். மீண்டும் புதிதாக துவங்கியதால், காலை உணவில் இருந்தே தொடங்கலாமே என நினைத்தோம். காலை உணவு எனும்போது, அதை இத்தாலியன், சைனீஸ் என்று கொடுத்தால் சரியாக வராது. அதனால் மயிலாப்பூர் ஏரியாவுக்கு ஏற்றவாறு முழுக்க முழுக்க நமது சவுத் இந்தியன் உணவான இட்லி வகைகள், தோசை வகைகள், பொங்கல், வடை, பில்டர் காபி போன்றவையுடன் தொடங்கி இருக்கிறோம்.

இது முழுக்க முழுக்க சவுத் இந்தியன் டிஷ் என்பதால், தமிழ்ப்பெயர் வைக்கலாம் என்ற எண்ணம் வந்தது. அதற்காக பல பெயர்கள் யோசித்தபோது, எனது கணவர் பெயரையே வைத்துவிடலாம் எனத் தோன்றியது. அவரது பெயர் கிருஷ்ணமூர்த்தி என்பதால், வீட்டில் அவரைக் கிட்டு என்றே அழைப்போம். இதனால் கிட்டு மாமா வீட்டுச் சாப்பாடு என்று வைத்துவிட்டோம். காலை நேர உணவகத்தைப் புதிதாக தொடங்கியதால், ஏதேனும் புது டிஷ் கொண்டு வரலாம் என்று முடிவு செய்தோம். இதற்காக, இட்லி, தோசை வகைகளுடன் பெங்களூரூவின் பிரபல டிஷ்ஷான பென்னதோசையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதுதவிர, தட்டு இட்லி, மினி இட்லி, ரவா இட்லி அயிட்டங்களும் உண்டு. அதுபோன்று மதியம் மீல்ஸூக்கும் ஏதாவது வித்தியாசம் செய்ய வேண்டும் என்று, பக்கெட் வெரைட்டி ரைஸ் வகைகள் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். பொதுவாக, பக்கெட் பிரியாணி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த ஸ்டைலில் பக்கெட் சாம்பார் சாதம், பக்கெட் வெஜிடெபிள் ரைஸ், பக்கெட் தயிர் சாதம், பக்கெட் வெரைட்டி ரைஸ் வகைகள் என கொண்டு வந்திருக்கிறோம். இதில் எது வேண்டுமோ அதனை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

ஒரு பக்கெட்டின் விலை 950 ரூபாய். இதனை 10-12 பேர் வரை சாப்பிட முடியும். இந்த பக்கெட் அயிட்டத்துக்கு ஒருநாள் முன்பே ஆர்டர் கொடுக்க வேண்டும். இது சுமார் நாலரை கிலோ அளவு பிடிக்கும் பக்கெட். இதிலேயே 1 கிலோ, 2 கிலோ பக்கெட்களும் இருக்கிறது. இதுதவிர, கூட்டு, பொரியல் வகைகள் கொண்ட மீல்ஸ் தாழியும் மதியத்தில் உண்டு. திங்கள் முதல் வெள்ளி வரை இந்த மெனு. சனி மற்றும் ஞாயிறுகளில் கல்யாண சமையல் சாதம் என்று சுமார் 18 அயிட்டங்கள் கொண்ட தாழி கொடுக்கிறோம். இது தவிர, இத்தாலியன், சைனீஸ் என கான்டினன்டல் உணவு வகைகளும் உண்டு. அதில், பாஸ்தா, பீட்சா, சைனீஸ்ல செசுவான் நூடூல்ஸ், ஃப்ரைட் ரைஸ், கோபி மஞ்சூரியன், சில்லி பேபிகார்ன், சில்லி மஞ்சூரியன், சில்லி நூடுல்ஸ், ஸ்ப்ட் மஷ்ரூம், குண்டூர் பேபி கார்ன் ப்ரை போன்றவை இருக்கும். எங்களுடைய ஹிட் ஃபு்ட் என்றால் அது 30 இன்ஞ்ச்ஸ் மேகா பீட்சா. இதனை எங்களது சிக்னேச்சர் டிஷ் என்றும் சொல்லலாம். இதற்கு அப்பவும் சரி, இப்பவும் சரி நல்ல வரவேற்பு. எங்களது உணவின் சுவையை ஒருமுறை சுவைத்துவிட்டால், மீண்டும் மீண்டும் எங்கள் உணவகத்தைத் தேடி வரவைத்துவிடும். அந்தளவிற்கு ருசி அபாரமாக இருக்கும்’’ என்கிறார் வீணா கிருஷ்ணமூர்த்தி.

– தேவி குமரேசன்
படங்கள்: வின்சென்ட் பால்.

Related posts

உலகக்கோப்பையுடன் பார்படாஸில் இருந்து தனி விமானம் மூலம் தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்கள்

கன்னியாகுமரிக்கு கூடுதல் ரயில் திட்டங்கள்: மக்களவையில் விஜய்வசந்த் வலியுறுத்தல்

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு